சுவாசப் பிரச்சினையுடன் வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்ட பெண் திடீர் மரணம்!!

தம்புளையில் சுவாசப்பிரச்சினை மற்றும் காய்ச்சலுடன் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பெண் ஒருவர் திடீர் மரணமடைந்துள்ளார். நாவுல பிரதேச கிராம சேவர் மற்றும் சுகாதார பரிசோதகரின் தலையீட்டில் 1990 என்ற அம்பியுலன்ஸ் சேவையின் ஊடாக வைத்தியசாலைக்கு அழைத்து செல்லும் போது குறித்த பெண் உயிரிழந்துள்ளார்.75 வயதுடைய பெண்ணே நேற்று மாலை உயிரிழந்துள்ளதாக தம்புளை வைத்தியசாலை வைத்தியர் பிரதிப் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

குறித்த பெண்ணின் மகன் நீர்கொழும்பில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றிய நிலையில் கடந்த வாரமே வீட்டிற்கு வந்துள்ளார். கடந்த சில நாட்களாக இந்த பெண் இருமல் காய்ச்சல் மற்றும் மூச்சு விட முடியாமல் அவதிப்பட்டுள்ளார்.வைத்தியசாலைக்கு செல்லாமையினால் மிக மோசமாக குறித்த பெண் பாதிக்கப்பட்டுள்ளார். உடனடியாக அவரை வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டன. எனினும் வைத்தியசாலை செல்ல முன்னரே குறித்த பெண் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பெண்ணின் வீட்டில் இருந்த மேலும் இருவரும் சுகயீனமடைந்த நிலையில் இருந்ததாக அம்பியுலன்ஸ் வண்டி சாரதி குறிப்பிட்டுள்ளார்.இந்நிலையில், குறித்த பெண் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.