வெற்றி தரும் வெற்றிலை மாலை…!அவசியம் படியுங்கள்..!

தினமும் ’அனுமன் சாலீசா’ படித்து வந்தால், மிகப்பெரிய பலமும் உரமும் வாழ்வில் நிச்சயம் என்பது ஐதீகம். அனுமனுக்கு வெற்றிலை மாலை அணிவித்து வேண்டிக்கொண்டால், வெற்றி நிச்சயம். காரியம் யாவும் வீரியமாகும் என்பது நம்பிக்கை!

அனுமன் சாலீசாவை தினமும் சொல்ல இயலாதவர்கள், புதன் மற்றும் சனிக்கிழமைகளிலும் மாதந்தோறும் வருகிற மூல நட்சத்திர நாளிலும் பாராயணம் செய்து வந்தால், மனோதிடம் பெருகும். எதிர்ப்புகள் விலகும். காரியத்தில் பக்கத்துணையாக இருந்து காத்தருள்வார் அனுமன் என்கின்றனர் ஆச்சார்யர்கள்.

ஆஞ்சநேயரின் திருநட்சத்திரம் மூலம். மார்கழி மூல நட்சத்திரத்தை, அவரின் ஜென்ம நட்சத்திரம் என்கிறது புராணம். அதனை, அனுமன் ஜயந்தித் திருநாள் என்று போற்றிக் கொண்டாடுகிறோம். அந்த நாளில், பெருமாள் கோயில்களில் உள்ள அனுமன் சந்நிதியில், அனுமனுக்கு சிறப்பு அலங்காரங்களும் வெண்ணெய் சார்த்தி வழிபாடும் விமரிசையாக நடைபெறும்.அதேபோல், வாரந்தோறும் சனிக்கிழமையில் அனுமனுக்கு விசேஷ ஆராதனைகள் நடப்பது போல, மாதந்தோறும் மூல நட்சத்திர நன்னாளில்… அனுமனுக்கு சிறப்பு பூஜைகளும் வழிபாடுகளும் நடைபெறுகின்றன.

எனவே, மூல நட்சத்திர நாள், புதன்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் மறக்காமல் அனுமன் சாலீசா பாராயணம் செய்து வருவது ரொம்பவே சிறப்பு வாய்ந்தது.மேலும் அனுமன் சாலீசா பாராயணமெல்லாம் முடிந்த பிறகு, அருகில் உள்ள கோயிலுக்குச் சென்று அனுமனைத் தரிசியுங்கள். வெற்றிலை மாலை சார்த்துங்கள். மனதார வேண்டிக்கொள்ளுங்கள். உங்கள் கவலைகளையும் துக்கங்களையும் ஏக்கங்களையும் வருத்தங்களையும் போக்கிக் காப்பார் ஆஞ்சநேயர்.

இன்னும் முடிந்தால், அனுமனுக்கு வெண்ணெய்க்காப்பு சார்த்தி வழிபடுங்கள். உங்கள் அத்தனைத் தோல்விகளும் வெற்றிகளாக மாறும் என்பது உறுதி.அதேபோல், ‘ஸ்ரீராமஜெயம்’ எழுதுங்கள். காலையில் எழுந்ததும் அனுமனை மனதார வேண்டிக்கொண்டு, 108 ஸ்ரீராமஜெயம் எழுதுங்கள். ஸ்ரீராம ஜெயம் எழுத எழுத, ராமபக்த அனுமன், குளிர்ந்து போவான். குளிரக்குளிர அருளுவான் என்கின்றனர் ஆச்சார்யப் பெருமக்கள்.