யாழில் மீண்டும் கொரோனா அச்சமா…? மருத்துவர் சத்தியமூர்த்தி தெரிவிக்கும் விடயம்..!!

யாழிலிருந்து இந்தியா திரும்பிய வர்த்தகருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் அதிகளவில் பதற்றமடைய தேவையில்லையென யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

அத்துடன் குறித்த நபரிடம் இருந்து ஏனையவர்களுக்கு தொற்று ஏற்படக்கூடிய வாய்ப்பு மிகவும் அரிதாகவே காணப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகச் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கும் போது கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இலங்கையில் சிக்கியுள்ள இந்தியர்களை தங்களது நாட்டுக்கு மீட்கும் நடவடிக்கைகளை இந்திய அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது.இந்த நிலையில், யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் தங்கிருந்த நிலையில் கப்பல் மூலம் அண்மையில் இந்தியாவுக்கு திரும்பிய வர்த்தகர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.அந்த வர்த்தகர் யாழப்பாணம் இணுவில் மற்றும் ஏழாலை ஆகிய பகுதிகளில் தங்கியிருந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இணுவில் மற்றும் ஏழாலை பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்களிடம் இருந்து கொரோனா வைரஸ் தொற்றுத் தொடர்பான பரிசோதனைக்காக சேகரிக்கப்பட்ட மாதிரிகள் கொழும்பிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவின் அறிவுறுத்தலுக்கு அமையவே அங்கு சேகரிக்கப்பட்ட 13 பேருடைய மாதிரிகளும் கொழும்பிற்கு அனுப்பப்பட்டுள்ளன.அத்துடன் குறித்த வர்த்தகருடன் தொடர்பை பேணியவர்கள் தொடர்பான விபரங்களும் திரட்டப்பட்டு வருகின்றன எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.