ஜனாதிபதி கோட்டாபயவுடன் சஜித் தரப்பு சந்திப்பு! இந்தியாவிலிருந்து மருந்துப் பொருட்கள் நாளை இலங்கைக்கு..!!

கொரோனா நோய்க்கிருமி பரவலுடன் நாட்டில் உருவாகியுள்ள நிலைமை குறித்து ஐக்கிய மக்கள் சக்திக்கும் அரசாங்கத்திற்கும் இடையே கலந்துரையாடல் ஒன்று இன்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.
ஜனாதிபதி, பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி – அமைச்சர்களான தினேஷ் குணவர்த்தன, நிமல் சறிபால டி சில்வா, விமல் வீரவங்ச, டலஸ் அழகப்பெரும, பந்துல குணவர்த்தன, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ஆகியோரும், ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநித்துவப்படுத்தி – அதன் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் ஜனாதிபதி செயலாளர் கலாநிதி பீ.பி ஜயசுந்தர ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.

கொரோனா நோய்க்கிருமி நாட்டினுள் பரவுவதை தவிர்ப்பதற்கு அரசாங்கம் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் மற்றும் எதிர்காலத்தில் செய்யத் திட்டமிட்டுள்ள நிகழ்ச்சித்திட்டங்கள் குறித்து ஜனாதிபதி விரிவாக விளக்கினார்.
கொரோனா நோய்த்தொற்று குறித்து உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்தது முதல் அரசாங்கம் என்ற வகையில் பொறுப்புடன் செயற்பட்ட விதம் குறித்து ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.ஏனைய நாடுகளையும் விஞ்சும் வகையில் மக்களின் பாதுகாப்புக்காக நாம் உடனடி நடவடிக்கைகள் பலவற்றை மேற்கொண்டோம். பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களை மூடுவதற்கு நடவடிக்கை எடுத்தது முதல் அத்தியாவசிய சேவைகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அன்றாட நடவடிக்கைகளை பேணிய வகையில் மக்களைப் பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளையும் நாம் மேற்கொண்டோம்.இதன் காரணமாக கொரோனா கிருமித்தொற்றுப் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கத்திற்கு முடியுமானதாக இருந்தது.
சுகாதாரத் துறை, பாதுகாப்புத் துறை உட்பட அரச மற்றும் தனியார் பொறிமுறைகளுடன் நிபுணர்களின் ஆலோசனைகளின் பிரகாரம் எப்போதும் நாம் செயற்பட்டோம்.நோய்த்தொற்றுக்குள்ளான நோயாளிகள் மற்றும் அவர்களுடன் பழகியவர்களை இனம்கண்டு வைத்திய நிபுணர்களின் ஆலோசனையின் பேரில் பரிசோதனைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டன.அதன் மூலம் தொற்றுக்குள்ளானவர்களை முன்கூட்டியே அறிந்துகொள்வதற்கு முடியுமாக இருந்ததன.

40 மத்திய நிலையங்களில் நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறதன. நோயாளிகள் இனம்காணப்பட்ட பிரதேசங்களில் பொதுச் சுகாதார அதிகாரிகளின் உதவியுடன் தொற்றுப் பரவுவதைத் தவிர்ப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. நோயாளிகளைக் கண்காணித்தல் மற்றும் பரிசோதனை நடவடிக்கைகளுக்குப் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் வழங்கி வரும் ஒத்துழைப்பினை பாராட்டுகிறேன்“ என ஜனாதிபதி தெரிவித்தார்.அரசாங்கம் முன்னெடுத்துள்ள செயற்பாடுகளுக்கு ஜக்கிய மக்கள் சக்தியினர் தமது பாராட்டுக்களைத் தெரிவித்ததுடன், அரசியல் மற்றும் வேறு பேதங்களின்றி இந்த நிகழ்ச்சித்திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று இரு தரப்பினரும் கருத்துப் பரிமாறிக்கொண்டனர்.அரசாங்கம் முன்னெடுத்துள்ள நிகழ்ச்சித்திட்டங்களில் எவருக்கேனும் அநீதிகள் அல்லது குறைபாடுகள் ஏற்பட்டிருக்குமானால் அது தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ தெரிவித்தார்.நாளாந்த சம்பள அடிப்படையில் நிர்மாணத் துறை உள்ளிட்ட பல்வேறு தொழில்களைச் செய்வதற்காக வருகை தந்து கிராமங்களுக்குத் திரும்பிச் செல்ல முடியாது சிக்குண்டிருக்கின்றவர்கள் குறித்த தொழில் வழங்குனர்களுக்கு கவனம் செலுத்த வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவும் ஜனாதிபதியும் கேட்டுக்கொண்டனர்.

தொற்றாத நோய்கள் உள்ளிட்ட சுகாதாரத் சேவைகளுக்குத் தேவையான பல்வேறு மருந்துப் பொருட்கள் அரசாங்கத்தின் கோரிக்கையின் பேரில் இந்தியாவிலிருந்து நாளை, 07ஆம் திகதி நாட்டுக்கு கொண்டு வரப்படவுள்ளது.முழு உலகமும் முகம்கொடுத்துள்ள பொருளாதார, சமூக நிலைமைகளைக் கருத்திற் கொண்டு எமது நாட்டுக்கு பொருத்தமான பொருளாதார முறைமையொன்று தற்போது திட்டமிடப்பட்டுள்ளது.

வீழ்ச்சியடைந்துள்ள ஆடை உற்பத்தி மற்றும் சுற்றுலாத் துறை போன்றவற்றைக் கட்டியெழுப்புவது தொடர்பாக நிபுணர்களின் ஆலோசனைகளை நாம் பெற்றுவருவதனையும், சந்தர்ப்பம் கிடைத்தவுடன் அவர்களின் ஆலோசனையின் பேரில் அரசாங்கம் செற்படும் என்பதனையும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.சமூர்த்தி உதவி பெறுபவர்களுக்கு மேலதிகமாக – முதியவர்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் சிறுநீரக நோயாளிகள் உள்ளிட்ட 7 இலட்சத்திற்கும் அதிகமானவர்களுக்கான 5000 ரூபாய்கள் கொடுப்பனவுகள் எவ்வித பேதமுமின்றி வழங்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எவருக்கேனும் அது கிடைக்காதுவிடின் கிராம சேவகரின் ஊடாக அதனைப் பெற்றுக்கொள்ள வழி செய்யப்பட்டுள்ளது” என ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்க்ஷ அவர்கள் தெரிவித்தார்.சுகாதார மற்றும் பல்வேறு துறைகளின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும் அரசாங்கமும் ஐக்கிய மக்கள் சக்தியினரும் இதன்போது கலந்துரையாடினர்.

-ஜனாதிபதி ஊடகப்பிரிவு