சீரடி பாபாவின் உதவி நமக்குக் கிடைக்க வேண்டுமானால் நாம் அவசியம் செய்ய வேண்டியவை இவை தான்..!!

நமது அருகிலேயே அவர் எப்போதும் இருக்கிறார். எந்த ரூபத்தையும் எடுத்துக் கொள்கிறார். பிரியமுள்ள பக்தனிடத்துத் தோன்றி அவனைத் திருப்திப்படுத்துகிறார். மாயை என்று அழைக்கப்படும் இவ்வுலக வாழ்க்கை நிகழ்வுகளுக்கு நடுவில் வாழும் வரை இந்நிலைமையை ஒருவராலும் தவிர்க்க முடியாது.

இவ்வுலக நடவடிக்கைகளை முற்றிலும் துறந்து ஒரு யோகி அல்லது சன்னியாசியாக மாறினால்தான் இந்த நிலையை தவிர்க்கமுடியும். அதே சமயத்தில் ஒருவர், பாபாவின் நாமத்தை ஜெபிப்பது, பாபாவைப் பற்றி மற்றவர்களிடம் பேசுவது, பாபாவைப் பற்றி படிப்பது, பாபாவையே நினைப்பது போன்ற சில வழிகளில் எப்போதும் பாபாவையே இறுகப் பற்றிக்கொண்டால், மாயையின் தாக்குதல்களை எதிர்க்கும் மனோபலத்தை வளர்த்துக் கொள்வதற்கும் பாபாவின் உதவி நமக்குக் கிடைகிறது.

எவ்வளவுக் கெவ்வளவு பாபாவின் மீது உள்ள ஈடுபாடு அதிகரிக்கிறதோ அவ்வளவுக்கவ்வளவு மாயத்தோற்றமான இவ்வுலக நடவடிக்கைகளில் ஈடுபாடு குறைகிறது. பாபா எப்போதுமே வாழ்கின்றார். ஏனெனில் பிறப்பு இறப்பு என்ற இருமையையும் கடந்தவர் அவர். எவனொருவன் ஒருமுறை முழுமனத்துடன் அவரை நேசிக்கிறானோ, அவன் எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் அவரிடமிருந்து பதிலைப் பெறுகிறான். ஸ்ரீ சாய் சத்சரித்திரம் என்ற புத்தகம் உண்மையில் கடவுளின் அவதாரமேயாகும். பாபாவின் சக்தி சத்சரிதத்தின் ஒவ்வொரு எழுத்தின் உள்ளேயும் பொதிந்து கிடக்கின்றன.

சத்சரிதத்தை வாய்விட்டு உரக்கவோ, மனதிற்குள்ளாகவோ, மனமும் குரலும் சேர்ந்து உபன்யாசமாகவோ பக்தியுடன் பாராயணம் செய்யும் பொழுது ஸ்ரீ சாய்நாதரின் தெய்வீக சைதன்யம் அந்த திசையை நோக்கி ஈர்க்கப்படும். ஒரு பக்தனின் அனைத்து உடல் சார்ந்த, உயிர் சார்ந்த, மானசீக நோய் சம்பந்தமான, தொந்தரவுகள், கஷ்டங்கள் அனைத்து அதிர்வுகளும் ஸ்ரீ சாய் சரித்திரத்தை பாராயணம் செய்யும் பொழுது அவை ஸ்ரீ சாய்நாதரின் தெய்வீக சைதன்யத்தை சென்றடைகின்றன.

அவை அங்கு சுத்தம் செய்யப்பட்டு மீண்டும் பாராயணம் செய்யும் பக்தரை ஸ்ரீ சாய்நாதரின் அருள் நிரம்பிய அலைகளாக திரும்ப வந்து சேருகின்றன. இது போன்ற சூழ்நிலைகளில் பக்தன் இவ்வுலக சுகங்களையும் பரலோக சுகங்களையும் பெறுவான்.

ஸ்ரீ சாய்பாபாவின் கிருபையைப் பெற நம்மிடம் உள்ள அஹங்காரம், ஆணவம் முற்றிலுமாக அழிக்கப்பட வேண்டும். எல்லாவிதமான பெருமைகளும் ஒழிய வேண்டும். பின்னர் தான் அவரது சக்தியை, இரக்கக்குணத்தை உண்மையான சுபாவத்தை நாம் அறிய இயலும்.