பிறந்துள்ள விஹாரி தமிழ்ப் புத்தாண்டு உங்களுக்கு எப்படி? மேஷம் முதல் மீனம் வரை ஒரே பார்வையில் விரிவான பலன்கள்….!!

மேடம்:

சுதந்திர மனப்பான்மை கொண்டவர்களே!!

உங்கள் ராசிக்கு 4-வது ராசியில் புத்தாண்டு பிறப்பதால், சமுதாயத்தில் பிரபலமடையும் வாய்ப்பு ஏற்படும். பணப் பற்றாக்குறை நீங்கும். கணவன் – மனைவிக்கிடையே இருந்து வந்த மெல்லிய இடைவெளி மறைந்து அந்நியோன்யம் அதிகரிக்கும். உங்களைக் குறை கூறும் உறவினர்களை இனம் கண்டு ஒதுங்கிச் செல்வீர்கள். தடைப்பட்ட சுபகாரியங்கள் நடைபெறும். சுக்கிரனும் புதனும் சாதகமான வீட்டில் இருப்பதால், சோர்வு நீங்கி மலர்ச்சியுடன் காணப்படுவீர்கள். பணவரவு திருப்தி தரும். பழையக் கடன்களைத் தந்து முடிக்கும் வாய்ப்பு ஏற்படும்.

இந்த வருடம் முழுவதும் ராகு 3-ல் தொடர்வதால், மனவலிமை அதிகரிக்கும். எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் ஏற்படும். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். ஆன்மிகப் பெரியோர்களின் ஆசிகளைப் பெறும் வாய்ப்பு ஏற்படும். புண்ணியத் தலங்களை தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படும். உங்களிடம் கருத்து வேறுபாடு கொண்டிருந்த நண்பர், உங்களைப் புரிந்துகொண்டு வலிய வந்து பேசுவார்.

சனிபகவான் 9-ல் தொடர்வதால், தன்னம்பிக்கை பிறக்கும். தோல்வி மனப்பான்மையிலிருந்து விடுபடுவீர்கள். வேற்று மொழி பேசுபவர்களால் திடீர் திருப்பம் ஏற்படும். ஆண்டு முழுவதும் கேதுவும் 9-ம் வீட்டிலேயே இருப்பதால், அதிகரிக்கும் செலவுகளைக் குறைக்க முடியாமல் திணறுவீர்கள். கடந்தகால இழப்புகளை நினைத்து அவ்வப்போது கஷ்டப்படுவீர்கள். தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவைப்படும். வழக்குகளில் வழக்கறிஞர்களின் ஆலோசனைப்படி நடப்பது நல்லது.

வருடத் தொடக்கம் முதல் 18.5.19 வரை குரு அதிசாரத்தில் 9-ம் வீட்டில் இருப்பதால், எதிர்பார்த்த பணம் கிடைக்கும். வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும். தந்தையின் உடல் ஆரோக்கியம் மேம்படும். 19.5.19 முதல் 27.10.19 வரை குரு 8-ல் அமர்வதால், அடிக்கடி மனக் கவலைகள், பிறரிடம் நம்பிக்கையின்மை, வீண் அலைச்சல் ஏற்பட்டு நீங்கும். முன்கோபத்தின் காரணமாக நல்லவர் சிலரின் நட்பை இழக்க நேரிடும். குடும்பத்தில் நிம்மதியற்ற போக்கு காணப்படும். ஆனால், 28.10.19 முதல் 27.3.20 வரை குரு 9-ம் இடத்தில் அமர்வதால், தடைகளைக் கடந்து வெற்றி பெறுவீர்கள். தள்ளிக்கொண்டே போன சுபநிகழ்ச்சிகள் நல்லபடி நடைபெறும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு எதிர்பார்த்த நிறுவனத்தில் வேலை அமையும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும்.

10.9.19 முதல் 4.10.19 வரை சுக்கிரன் 6-ல் மறைவதால் கணவன் – மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். வாகனத்தில் செல்லும்போது எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.

28.12.19 முதல் 8.2.20 வரை செவ்வாய் 8-ம் இடத்தில் இருப்பதால், உறவினர்களுடன் மோதல் ஏற்பட்டு நீங்கும். செலவுகளும் பயணங்களும் அதிகரிக்கும்.மாணவர்கள் சிரத்தை எடுத்துப் படிக்கவேண்டும். சந்தேகங்களை ஆசிரியர்களிடம் உடனுக்குடன் கேட்டுத் தெரிந்துகொள்வது நல்லது.

வியாபாரத்தில் கடையை வேறு இடத்துக்கு மாற்றுவீர்கள். தேங்கிக் கிடக்கும் சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். புதிய வாடிக்கையாளர்களின் அறிமுகம் கிடைக்கும். ஆவணி, புரட்டாசி மாதங்களில் பழைய பாக்கிகள் வசூலாகும்.உத்தியோகத்தில் நீங்கள் பொறுப்பாக நடந்துகொண்டாலும், மேலதிகாரி குறைகூறத்தான் செய்வார். வேலைச்சுமை அதிகரிக்கும். ஆவணி மாதத்தில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். புரட்டாசி, ஐப்பசி மாதங்களில் பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். வேலை இல்லாதவர்களுக்கு மாசி மாதத்தில் புது வேலை கிடைக்கும். வெளிநாட்டுத் தொடர்புடைய நிறுவனங்களில் வேலை கிடைப்பதற்கும் வாய்ப்பு உண்டு.

கலைஞர்கள் கிடைக்கக்கூடிய சின்னச் சின்ன வாய்ப்புகளையும் தக்கவைத்துக் கொள்ளவேண்டும்.இந்தப் புத்தாண்டில் தொடர் முயற்சியின் மூலம் காரியங்களை முடிக்கவேண்டி வரும். இடைவிடாத உழைப்பு மட்டுமே லட்சியத்தை அடையச் செய்யும்.இடபம்:

எல்லோரையும் அன்புடன் நேசிப்பவர்களே!

புத்தாண்டு பிறக்கும் நேரத்தில் சுக்கிரன் 10-ம் வீட்டில் வலிமையாக அமர்ந்திருப்பதால், அமைதியாக இருந்து சாதிப்பீர்கள். புதிய முயற்சிகள் வெற்றி அடையும். தடைப்பட்டு நிற்கும் காரியங்களெல்லாம் கைகூடும். பழைய கடன் தீரும். வருமானம் உயரும். உங்கள் ராசிக்கு மூன்றாவது ராசியில் இந்த ஆண்டு பிறப்பதால் முடியாததையும் முடித்துக் காட்டுவீர்கள். தைரியம் பிறக்கும்.

புதன் லாப வீட்டில் அமர்ந்திருக்கும் நேரத்தில் ஆண்டு பிறப்பதால் எதிர்பாராத பணவரவு உண்டு. தன்னம்பிக்கையுடன் பேசுவீர்கள். உங்களின் நிர்வாகத்திறமை அதிகரிக்கும். பெரிய முடிவுகளைத் துணிந்து எடுப்பீர்கள். சின்னச் சின்ன கருத்து வேறுபாடுகளால் பிரிந்திருந்த கணவன் – மனைவி ஒன்று சேருவீர்கள். வருடம் முழுவதும் சனியும் அஷ்டமத்துச் சனியாகத் தொடர்வதால் ஒருவித படபடப்பு, தூக்கமின்மை, மறைமுக எதிர்ப்புகள் ஏற்பட்டு நீங்கும். வழக்கில் தீர்ப்பு தள்ளிப் போகும். திடீர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும்.

வருடம் முழுவதும் ராகு உங்கள் ராசிக்கு 2-ல் தொடர்வதாலும், 8-ல் கேது நீடிப்பதாலும் அடுத்தவர்களின் விஷயங்களில் தலையிட வேண்டாம். எதிலும் பிடிப்பற்ற போக்கு வந்து செல்லும். யாருக்காகவும் சாட்சிக் கையெழுத்திட வேண்டாம். எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும். கொஞ்சம் வளைந்துக் கொடுத்துப் போவது நல்லது.

வருடத் தொடக்கம் முதல் 18.5.19 வரை குரு அதிசாரத்தில் உங்கள் ராசிக்கு 8-வது வீட்டில் மறைந்திருப்பதால் எதிர்பாராத பணவரவு உண்டு. திடீர் செலவுகளும் ஏற்படும். பழைய நண்பர்கள் தேடி வருவார்கள்.

19.5.19 முதல் 27.10.19 வரை குருபகவான் 7-வது வீட்டிலேயே தொடர்வதால் அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகளாலும், நண்பர்கள், உறவினர்களின் வருகையாலும் வீடு களைகட்டும். கணவன் -மனைவிக்கிடையே ஒற்றுமை பலப்படும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் உண்டு. மகளுக்கு எதிர்பார்த்தபடி நல்ல வரன் அமையும். மகனுக்கு வேலை கிடைக்கும். குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள்.

ஆனால், 28.10.19 முதல் 27.3.20 வரை குரு ராசிக்கு 8-ல் சென்று மறைவதால் வீண் அலைச்சல்,வதந்திகள், இனம்புரியாத கவலைகள், ஒருவித பய உணர்வு வந்து செல்லும். கர்ப்பிணிப் பெண்கள் நீண்ட தூரப் பயணங்களை தவிர்ப்பது நல்லது. பூர்வீகச் சொத்தை சரியாகப் பராமரிக்க முடியவில்லையே என வருத்தப்படுவீர்கள். மகனுக்கு உயர்கல்வி, உத்தியோகம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் தாமதமாக முடியும்.

5.10.19 முதல் 28.10.19 வரை உங்கள் ராசிநாதன் சுக்கிரன் 6-வது வீட்டில் சென்று மறைவதால் சிறு சிறு விபத்துகள், வாகனம் பழுதாகுதல், வீடு பராமரிப்புச் செலவுகள் மற்றும் காய்ச்சல், சளி தொந்தரவு வந்து நீங்கும் 9.2.20 முதல் 21.3.20 வரை செவ்வாய் உங்களுடைய ராசிக்கு 8-வது வீட்டில் மறைவதால் வீடு, மனை வாங்குவது விற்பது எதுவாக இருந்தாலும் கவனமாக இருங்கள் அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம்.

மாணவர்களுக்கு உயர்கல்வியில் ஆர்வம் பிறக்கும். நினைவாற்றல் பெருகும். சோம்பல் நீங்கும். கெட்டப் பழக்கங்கள் விலகும். மதிப்பெண்கள் அதிகரிக்கும்.வியாபாரத்தில் நஷ்டப்பட்ட நிலை மாறும். குறைந்த வாடகையில் பெரிய கடை அமையும். பங்குதாரர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள். வைகாசி, ஆவணி மாதங்களில் புதிய முதலீடுகளைப் போட்டு போட்டியாளர்களைத் திக்குமுக்காட வைப்பீர்கள். ஐப்பசி மாதத்தில் வராது என்றிருந்த பாக்கித் தொகை வந்து சேரும்.

உத்தியோகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். மேலதிகாரி உங்கள் திறமையை அங்கீகரிப்பார். பதவி உயர்வுக்காக எழுதும் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். வெகுநாள்களாக தள்ளிப் போன பதவி உயர்வு, சம்பள உயர்வு ஆனி, ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் கிடைக்கும்.

கலைஞர்களே! கற்பனைத்திறன் அதிகரிக்கும். அயல்நாட்டு நிறுவனங்கள் வாய்ப்பளிக்கும்.இந்தப் புத்தாண்டு உங்களுக்குப் பிரகாசமாக இருக்கும்.

மிதுனம்:

சமாதானத்தை விரும்புபவர்களே!

உங்கள் ராசிக்கு 2-ல் சந்திரன் இருக்கும்போது இந்த வருடம் பிறப்பதால், சோர்வு நீங்கி உற்சாகம் பெறுவீர்கள். தன்னம்பிக்கை அதிகரிக்கும். புதிய திட்டங்கள் நிறைவேறும். முக்கிய பிரமுகர்களை சரியான முறையில் பயன்படுத்தி பல வேலைகளை முடிப்பீர்கள். மற்றவர்களை நம்பாமல் நீங்களே நேரடியாகக் களத்தில் இறங்கி வேலை செய்வீர்கள்.

உங்கள் ராசிக்கு சூரியன், புதன், சுக்கிரன் ஆகிய மூன்று கிரகங்களும் சாதகமான வீடுகளில் அமர்ந்திருக்கும் நேரத்தில் புத்தாண்டு பிறப்பதால் இழுபறியாக இருந்த காரியங்களெல்லாம் அடுத்தடுத்து முடிப்பீர்கள். உங்களின் நிர்வாகத் திறமை அதிகரிக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். கோபம் குறையும். பணப்பற்றாக்குறை அகலும். பிள்ளைகளின் உயர்கல்விக்காக அதிகம் செலவு செய்வீர்கள். குழந்தை இல்லாதவர்களுக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். செல்வவளம் பெருகும்.

வருடம் முழுவதும் சனியும், கேதுவும் உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டிலேயே தொடர்வதால் கணவன் – மனைவிக்கிடையே கருத்து மோதல்கள் வரும். சந்தேகத்தால் இருவரும் பிரிய வேண்டி வரும். திடீர் நண்பர்களை நம்பி பெரிய முடிவுகள் எதுவும் எடுக்க வேண்டாம். யாருக்காகவும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். வாழ்க்கைத்துணையின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

வருடம் முழுவதும் ராகு பகவான் உங்கள் ராசிக்குள்ளேயே நீடிப்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை தேவைப்படும். முன்கோபத்தைத் தவிர்ப்பது நல்லது. மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம். ஆன்மிக விழாக்களில் முதல் மரியாதை கிடைக்கும்.

வருடத் தொடக்கம் முதல் 18.5.19 வரை உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டில் குரு அதிசாரத்தில் நிற்பதால் வர வேண்டிய பணம் கைக்கு வரும். கல்வியாளர்கள், அறிஞர்களின் நட்பு கிடைக்கும். பழைய சிக்கல்களை பேசித் தீர்ப்பீர்கள். கணவன் – மனைவி இருவரும் மனம் விட்டுப் பேசுவீர்கள். பிள்ளைகளால் சமூகத்தில் மதிக்கப்படுவீர்கள். தடைப்பட்ட கல்யாணப் பேச்சு வார்த்தை கூடி வரும். உறவினர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். புது வேலை கிடைக்கும்.

குருபகவான் 19.5.19 முதல் 27.10.19 வரை 6-ம் வீட்டிலேயே மறைவதால் குடும்பத்தினரை அனுசரித்துச் செல்லவும். எந்தப் பிரச்னையாக இருந்தாலும் மனம் விட்டு பேசி தீர்க்கப் பார்க்கவும்.

ஆனால், 28.10.19 முதல் 27.3.20 வரை உங்கள் ராசிக்கு குருபகவான் 7-ம் வீட்டில் நுழைவதால் போட்டி, பொறாமைகள் நீங்கும். திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு கூடி வரும். குடும்பத்தில் இனி மகிழ்ச்சிக்குக் குறைவிருக்காது. அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். உறவினர்களுடன் இருந்து வந்த மோதல்கள் நீங்கும்29.10.19 முதல் 21.11.19 வரை 6-வது வீட்டில் சுக்கிரன் மறைவதால் கணவன் – மனைவி ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது.

22.3.20 முதல் 13.4.20 வரை செவ்வாய் உங்கள் ராசிக்கு 8-ம் வீட்டில் அமர்வதால் இந்தக் காலகட்டத்தில் வாழ்க்கைத்துணையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவைப்படும்.மாணவர்களுக்கு விளையாட்டில் பதக்கம் கிடைக்கும். உயர்கல்வியிலும் வெற்றியுண்டு.

வியாபாரத்தில் பழைய கஷ்ட நஷ்டங்களிலிருந்து விடுபடுவீர்கள். வியாபாரத்தில் ஏற்பட்ட பிற்போக்கான நிலை மாறி, முன்னேற்றமான சூழ்நிலை உண்டாகும். வைகாசி, ஆவணி மாதங்களில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும்.உத்தியோகத்தில் உங்களை ஓரங்கட்ட நினைத்த உயரதிகாரியின் முயற்சியை முறியடிப்பீர்கள். இழந்த சலுகைகளைப் போராடி பெறுவீர்கள். வெகுநாள்களாக எதிர்பார்த்தும் கிடைக்காமல் போன பதவி உயர்வு வைகாசி, கார்த்திகை மாதங்களில் கிடைக்கும்.

கலைஞர்களே! வசதி, வாய்ப்புகள் உயரும். அதே நேரம் வீண் வதந்திகளுக்கும் பஞ்சமிருக்காது.இந்தப் புத்தாண்டு உங்களைப் பல வகைகளிலும் உயர்த்துவதாக அமையும்.

கடகம்:

அதிகாரத்துக்கு அடிபணியாதவர்களே!

செவ்வாய், புதன், சூரியன் ஆகிய கிரகங்கள் சாதகமான வீடுகளில் அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்த ஆண்டு பிறப்பதால் பிரச்னைகளிலிருந்து விடுபடுவீர்கள். புது வேலை கிடைக்கும். பணிகளை முடிப்பதில் இருந்த போராட்டங்கள் விலகி, உங்கள் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். தடைப்பட்ட பணியை மறுபடியும் தொடங்குவீர்கள். குடும்பத்தில் ஏற்பட்டிருந்த குழப்பங்கள், வீண் விவாதங்கள் நீங்கி, அமைதி நிலவும்.

கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்துகொள்வார்கள். மகளின் திருமணத்தை விமரிசையாக நடத்தி முடிப்பீர்கள். ஆனால், உங்கள் ராசியிலேயே இந்த வருடம் பிறப்பதால், உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும். முன்கோபத்தைத் தவிர்ப்பது நல்லது.

வருடம் முழுவதும் சனியும் கேதுவும் 6-ல் வலுவாக அமர்ந்திருப்பதால், செல்வாக்கு உயரும். வாழ்க்கையின் நெளிவுசுளிவுகளைக் கற்றுக்கொள்வீர்கள். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். புதுப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். அயல்நாடு, வேற்று மாநிலம் செல்லும் வாய்ப்பு வரும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வருமானம் உயரும். வேற்று மொழி பேசுபவர்களால் ஆதாயம் உண்டாகும்.

வருடம் முழுவதும் ராகு 12-ல் இருப்பதால், திடீர்ப் பயணங்கள் அதிகரிக்கும். புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். கோயில் கும்பாபிஷேகத்தை முன்னின்று நடத்துவீர்கள். அத்தியாவசியச் செலவுகள் அதிகரிக்கும்.

குருபகவான் ஆண்டு தொடக்கம் முதல் 18.5.19 வரை உங்கள் ராசிக்கு அதிசாரமாக 6-ம் வீட்டில் மறைந்திருப்பதால் சில நேரங்களில் வீண் டென்ஷன், மனஉளைச்சல், செரிமானக் கோளாறு வந்து நீங்கும். மறைமுக எதிரிகளை இனம் கண்டறிவீர்கள். திட்டமிட்ட காரியங்களை சற்று அலைந்து திரிந்தே முடிக்கவேண்டி வரும்.

ஆனால், 19.5.19 முதல் 27.10.19 வரை குருபகவான் 5-ம் வீட்டில் நிற்பதால் செல்லும் இடமெல்லாம் செல்வாக்குக் கூடும். கல்வியாளர்கள், அறிஞர்களின் நட்பால் சில விஷயங்களை சாதித்துக் காட்டுவீர்கள். மகனின் அலட்சியப் போக்கு மாறும். மகளின் திருமணத்தை சிறப்பாக நடத்துவீர்கள். குலதெய்வக் கோயிலைப் புதுப்பிக்க உதவுவீர்கள். பூர்வீகச் சொத்தை சீர் செய்வீர்கள்.

ஆனால், 28.10.19 முதல் 27.3.20 வரை குரு 6-ம் வீட்டில் மறைவதால் வரவுக்கு மிஞ்சிய செலவுகளும், அலைச்சலும், எதிர்ப்புகளும் வந்து நீங்கும். மறைமுக விமர்சனங்களும், தாழ்வுமனப்பான்மையும் அதிகரிக்கும். கணவன்-மனைவிக்கிடையே விட்டுக் கொடுத்துப் போவது நல்லது.

22.11.19 முதல் 16.12.19 வரை சுக்கிரன் 6-ல் மறைவதால் குடும்பத்தில் அவ்வப்போது சலசலப்பு இருக்கும். வீண் சந்தேகம் வேண்டாம். வாழ்க்கைத்துணைவழி உறவினருடன் மனக்கசப்பு வரும்.மாணவர்கள் உயர்கல்வியில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும். நண்பர்களிடம் பழகுவதில் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.

வியாபாரத்தில் முதலீடுகள் விஷயத்தில் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்துச் செய்யவும். கூட்டாகத் தொழில் செய்வதைத் தவிர்ப்பது நல்லது. வைகாசி, ஆவணி, தை மாதங்களில் லாபம் அதிகரிக்கும். வியாபார விஷயமாக வெளிநாடு செல்லும் வாய்ப்பு ஏற்படும்.

உத்தியோகத்தில் நெருக்கடிகளும், பணிச்சுமையும் அதிகரிக்கும். உயரதிகாரிகள் உங்கள் திறமையைக் குறைத்து மதிப்பிடுவார்கள். சம்பள உயர்வுக்காகப் போராடுவீர்கள். மார்கழி, தை மாதங்கள் சாதகமாக இருக்கும். வெளிநாட்டுத் தொடர்புடைய புதிய நிறுவனத்தில் வேலை கிடைக்கும்.

கலைஞர்கள் தங்களுடைய தனித் திறமையை வளர்த்துக்கொள்ளவேண்டியது அவசியம். மற்ற கலைஞர்களைப் பற்றி விமர்சனம் செய்யவேண்டாம்.இந்தப் புத்தாண்டு சில பிரச்னைகளை ஏற்படுத்தினாலும், விடாமுயற்சியால் வெற்றி பெற வைப்பதாக இருக்கும்.

சிம்மம்:

எதையும் வெளிப்படையாகப் பேசுபவர்களே!

சுக்கிரன் உங்கள் ராசியைப் பார்க்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால், அடிப்படை வசதி, வாய்ப்புகள் பெருகும். தள்ளிப் போய்க் கொண்டிருந்த சுபகாரியங்கள் இனி சிறப்பாக நடந்தேறும். பணப்புழக்கம் அதிகரிக்கும். ஆனால், உங்கள் ராசிக்கு 12-ல் சந்திரன் இருக்கும்போது வருடம் பிறப்பதால், செலவுகள் அதிகரிக்கும். சேமிக்க நினைத்தாலும் முடியாது.

1செவ்வாய் 10-ல் வலுவாக அமர்ந்திருக்கும் நேரத்தில் தமிழ்ப் புத்தாண்டு பிறப்பதால், எதைத் தொட்டாலும் வெற்றியில் முடியும். சவாலான விஷயங்களைக் கூட சர்வ சாதாரணமாக முடித்துக் காட்டுவீர்கள். புதிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். வீண் விவாதங்கள் நீங்கும். அரசால் அனுகூலம் உண்டு. வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு புது வேலை கிடைக்கும்.

வருடம் முழுவதும் சனியும் கேதுவும் 5-ல் இருப்பதால், முடிவுகளை எடுப்பதில் குழப்பம் ஏற்படக்கூடும். வயிறு தொடர்பான பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகள் பிடிவாதம் பிடித்தாலும், குடும்பச் சூழ்நிலையை அவர்களுக்குப் பக்குவமாக எடுத்துச் சொல்லிப் புரிய வைக்கவும். மகளின் திருமணத்துக்காகக் கடன் வாங்க நேரிடும். மகனின் உயர்கல்வி, உத்தியோகம் தொடர்பான முயற்சிகள் இழுபறியாகி முடியும்.

வருடம் முழுவதும் ராகு லாபவீட்டில் இருப்பதால், ஷேர் மூலம் லாபம் கிடைக்கும். வரவேண்டிய பணம் கைக்கு வந்து சேரும். வழக்குகள் சாதகமாக முடியும். ஆன்மிகப் பெரியோர்களைச் சந்தித்து ஆசி பெறுவீர்கள்.

வருடத் தொடக்கம் முதல் 18.5.2019 வரை குருபகவான் உங்கள் ராசிக்கு அதிசாரமாக 5-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் நினைத்த காரியம் நிறைவேறும். எதிர்பார்த்த பணம் வரும். வீடு, மனை வாங்குவீர்கள். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். திருமணம், சீமந்தம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடக்கும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

ஆனால், 19.5.2019 முதல் 27.10.2019 வரை உங்களின் ராசிக்கு குருபகவான் 4-ம் வீட்டில் அமர்வதால் வேலைச்சுமை அதிகரிக்கும். உணர்ச்சிவசப்படாமல் அறிவுப் பூர்வமாக முடிவெடுக்கவும். தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். சொத்துப் பிரச்னையை சுமுகமாகப் பேசித் தீர்க்கவும். யாருக்காகவும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். ஆனால், 28.10.2019 முதல் 27.3.2020 வரை 5-ம் வீட்டிற்கு குரு செல்வதால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். மகளின் திருமணத்தைச் சிறப்பாக நடத்துவீர்கள். மகனுக்கு உயர்கல்வி, உத்தியோகம் எதிர்பார்த்த நிறுவனத்தில் அமையும். குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள்.

17.12.2019 முதல் 9.1.2020 வரை சுக்கிரன் 6-ல் மறைவதால் சிறுசிறு விபத்துகள் வந்து போகும். வாகனத்தை வேகமாக இயக்க வேண்டாம். கணவன் – மனைவிக்கிடையே ஈகோ பிரச்னையால் சில சங்கடங்கள் ஏற்படும்.மாணவர்கள் அவர்கள் விரும்பிய கல்வி நிறுவனத்தில் உயர்கல்வி தொடரும் வாய்ப்பு ஏற்படும். சிலருக்கு வெளிநாடு சென்று படிக்கும் வாய்ப்பு ஏற்படும்.

வியாபாரத்தில் வருடப் பிறப்பின்போது சுக்கிரன் சாதகமாக இருப்பதால், தேங்கிக் கிடந்த சரக்குகள் விற்றுத் தீரும். ஆனி, ஆவணி மாதப் பிற்பகுதி, புரட்டாசி, தை, மாசி மற்றும் பங்குனி மாதங்கள் சாதகமாக இருக்கும். ராகு லாப ஸ்தானத்தில் இருப்பதால், புகழ் பெற்ற நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்து அதிக லாபம் சம்பாதிப்பீர்கள்.

உத்தியோகத்தில் உங்களுக்கு ஏற்பட்ட அவப்பெயர் விலகும். உங்கள் செல்வாக்கு உயரும். இழந்த சலுகைகள், பதவிகளை மீண்டும் பெறுவீர்கள். அதிகாரிகளிடம் பக்குவமாக நடந்துகொள்ளவும்.கலைஞர்களுக்குப் புதுப் புது வாய்ப்புகள் கிடைக்கும். வருமானமும் அதிகரிக்கும்.இந்த புத்தாண்டு உங்களைச் சாதிக்க வைப்பதுடன், பொருளாதார ரீதியில் வளர்ச்சி தருவதாகவும் அமையும்.

கன்னி:

மன்னிக்கும் மனப்பான்மை கொண்டவர்களே!

உங்கள் ராசிக்கு 11-ல் சந்திரன் இருக்கும்போது தமிழ்ப் புத்தாண்டு பிறப்பதால், சோம்பல் நீங்கி சுறுசுறுப்படைவீர்கள். முகமலர்ச்சியுடன் காணப்படுவீர்கள். குடும்பத்தில் அன்பும் மகிழ்ச்சியும் நிலவும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.

அடிப்படை வசதிகள் பெருகும். பிரபலங்களின் நட்பும் கிடைக்கும். பணப்புழக்கம் திருப்திகரமாக இருக்கும். வீட்டில் விருந்தினர் எண்ணிக்கை அதிகரிக்கும். ராசிநாதன் புதன் ராசியை பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில் இந்த ஆண்டு பிறப்பதால் உங்கள் ரசனை மாறும். உறவினர்களால் அனுகூலம் உண்டு.

வருடம் பிறக்கும்போது 6-ம் வீட்டில் சுக்கிரன் மறைந்திருப்பதால் குடும்பத்தில் அவ்வப்போது சலசலப்பு இருக்கும். வீண் சந்தேகம் வேண்டாம். வாழ்க்கைத்துணைவழி உறவினருடன் மனக்கசப்பு வரும்.

வருடம் முழுவதும் சனியும், கேதுவும் 4-ம் வீட்டிலேயே நீடிப்பதால் வேலைச்சுமை அதிகரிக்கும். வீட்டிலும் மனைவி, பிள்ளைகளுடன் இருக்கும் நேரம் குறையும். வீடு கட்ட அரசாங்க அனுமதி தாமதமாக கிடைக்கும். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. பழைய வாகனத்தை வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது. தாயாருக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படும். தாய்வழி உறவினர்களுடன் மோதல்கள் வரக்கூடும். தாய்வழி சொத்துகளில் சிக்கல்கள் வரக்கூடும். மறதியால் பணம், விலை உயர்ந்த நகையை இழக்க நேரிடும். பழைய கசப்பான அனுபவங்கள் நினைவுக்கு வரும். தேவையற்ற பழக்கங்களைத் தவிர்க்கவும்.

வருடம் முழுவதும் ராகு 10-ல் தொடர்வதால், சிறுசிறு அவமானம், மறைமுக எதிர்ப்புகள், வேலைச்சுமை வந்து செல்லும். தாழ்வுமனப்பான்மை தலைதூக்கும். அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதிமொழியும் தர வேண்டாம்.

இந்த வருடம் முழுவதும் குருபகவான் சரியில்லாததால் சில காரியங்களை இரண்டு, மூன்று முறை முயன்று முடிக்க வேண்டி வரும். உங்கள் இயல்புக்கு மாறான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம். தோலில் நமைச்சல், நரம்புச் சுளுக்கு வந்து செல்லும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். வீடு கட்டும் பணி தாமதமாகும். தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

தாய்வழி உறவினர்களுடன் வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும். மற்றவர்களின் ஆலோசனைகளை அப்படியே ஏற்றுக்கொள்ளாமல், பலமுறை யோசித்து ஏற்பது நல்லது. சொத்து வாங்கும்போது ஆவணங்களை கவனமாகப் பரிசீலித்து வாங்கவும். உணவு விஷயத்தில் நேரம் தவறாமையைக் கடைப்பிடிப்பது அவசியம்.

10.1.20 முதல் 3.2.20 வரை உள்ள காலகட்டத்தில் சுக்கிரன் 6-ல் மறைவதால் குடும்பத்தில் சின்னச் சின்ன பிரச்னைகள் ஏற்படும். நீங்கள் எதைப் பேசினாலும்் அதை மற்றவர்கள் தவறாகப் புரிந்து கொள்வார்கள். பண விரயம் உண்டாகும் என்பதால் கவனம் தேவை.மாணவர்கள் தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெறவேண்டும் என்பதற் காகச் சிரத்தை எடுத்துப் படிப்பீர்கள்.

வியாபாரத்தில் இதுவரை ஏற்பட்ட நஷ்டங்கள் நீங்கும். விளம்பர யுக்திகளைக் கையாண்டு லாபத்தைப் பெருக்குவீர்கள். கடையை நவீனப்படுத்துவீர்கள். தை மாதத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். கொடுக்கல் வாங்கல் சுமுகமாக நடைபெறும். பங்குதாரர்கள் இணக்கமாக நடந்துகொள்வார்கள்.உத்தியோகத்தில் ஒருபக்கம் வேலைச்சுமை இருந்தாலும் மற்றொரு பக்கம் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். சக ஊழியர்கள் மதிப்பார்கள். வெகுநாள்களாக எதிர்பார்த்திருந்த பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். ராகு ராசிக்கு 10-ம் வீட்டில் இருப்பதால் உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் ஏற்பட்டு நீங்கும்.

கலைஞர்களுக்கு மூத்த கலைஞர்களால் ஆதாயம் உண்டாகும்.இந்தத் தமிழ்ப் புத்தாண்டு வசதி வாய்ப்புகளை அதிகரிப்பதுடன், பதவி, புகழ் போன்றவற்றை வழங்குவதாகவும் அமையும்.

துலாம்:

இனிமையாகப் பேசுபவர்களே!

உங்கள் ராசிக்கு 10-ல் சந்திரன் இருக்கும்போது தமிழ்ப் புத்தாண்டு பிறப்பதால், நிர்வாகத் திறனும் ஆளுமைத் திறனும் அதிகரிக்கும். இதுவரை நீங்கள் உழைத்த உழைப்புக்கு நல்ல பலன் கிடைக்கும். வேலைக்குக் காத்திருப்பவர்களுக்கு புது வேலை கிடைக்கும். சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பும் அமையும்.குடும்பத்தில் அடிக்கடி மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும்.

ராசிநாதன் சுக்கிரன் ராசிக்கு 5-ம் வீட்டில் நிற்கும்போது புத்தாண்டு பிறப்பதால் எதையும் சாதித்துக் காட்டும் மன வலிமை பிறக்கும். ஏமாந்த தொகை இனி கைக்கு வரும். கனிவான பேச்சால் காரியம் முடிப்பீர்கள். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வாழ்க்கைத்துணைவழியில் இருந்த பிணக்குகள் நீங்கும். பூர்வீகச் சொத்து பங்கைக் கேட்டு வாங்குவீர்கள்.

உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டில் சனியும், கேதுவும் வருடம் முழுவதும் தொடர்வதால், சோர்ந்து காணப்பட்ட நீங்கள், சோர்வு நீங்கி சுறுசுறுப்பாகக் காணப்படுவீர்கள். போட்டிகளில் வெற்றி பெறுவீர்கள். பெயரும் புகழும் பெற்றுப் பிரபலமடைவீர்கள். நிலம், வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும். நல்லவர்கள் யார், அல்லாதவர்கள் யார் என்பதை உணரும் வாய்ப்பு ஏற்படும். வெளிநாட்டிலிருப்பவர்கள், நண்பர்களுடன் சேர்ந்து வியாபாரம் செய்யும் அமைப்பு உண்டாகும்.

வருடம் முழுவதும் ராகுபகவான் ராசிக்கு 9-ம் வீட்டிலேயே தொடர்வதால் செலவினங்கள் அதிகரிக்கும். பிதுர்வழிச் சொத்தைப் பெறுவதில் சிக்கல்கள் வரக்கூடும். ஆரோக்கியத்திலும் கவனம் தேவைப்படும்.வருட ஆரம்பம் முதல் 18.5.19 வரை குருபகவான் உங்கள் ராசிக்கு அதிசாரமாக 3-ம் வீட்டில் நிற்பதால் கடினமாக உழைத்து இலக்கை எட்டிப் பிடிப்பீர்கள்.

சுபச் செலவுகளும், பயணங்களும் அதிகரிக்கும். எதிர்பார்த்த வகைகளில் பணம் வரும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு ஏற்படும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். மகளுக்குத் திருமணம் கூடிவரும். மகனின் போக்கில் நல்ல மாற்றம் தென்படும். ஆனால், உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

19.5.19 முதல் 27.10.19 வரை குருபகவான் 2-வது வீட்டிலேயே தொடர்வதால் குடும்பத்தில் அமைதி நிலவும். வழக்குகள் சாதகமாக முடியும். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் செல்வாக்குக் கூடும். ஆனால் 28.10.19 முதல் 27.3.20 வரை குரு 3-ம் வீட்டிற்குச் செல்வதால் காரியத் தடைகள் அதிகரிக்கும். எந்த ஒரு வேலையையும் போராடி முடிக்க வேண்டி வரும்.

பணத்தட்டுப்பாடு அதிகரிக்கும். தவிர்க்க முடியாத செலவினங்களும் ஏற்படக்கூடும். தந்தைவழி சொத்துகள் வந்து சேரும். 16.4.19 முதல் 11.5.19 வரை மற்றும் 4.2.20 முதல் 29.2.20 வரை சுக்கிரன் 6-ல் மறைவதால் வாழ்க்கைத்துணைக்கு மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். வாகனத்தில் செல்லும்போது எச்சரிக்கையாக இருக்கவும்.

14.4.19 முதல் 6.5.19 வரை செவ்வாய் 8-ல் மறைவதால், உடன்பிறந்தவர்களால் நிம்மதியிழப்பீர்கள். கூடுதல் செலவுகளால் கையிருப்பு கரையும். சொத்துகள் வாங்கும்போது ஆவணங்களை ஒருமுறைக்குப் பலமுறை சரிபார்த்து வாங்கவும். மாணவர்கள் விரும்பிய கல்வி நிறுவனத்தில் சேரும் வாய்ப்பு அமையும். சிலருக்கு வெளிநாட்டில் படிக்க அழைப்பு வரும்.

வியாபாரத்தில் சந்தை நிலவரத்தை அறிந்து முதலீடு செய்யவும். பற்று வரவு சுமுகமாக நடைபெறும். ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, மாசி, பங்குனி மாதங்களில் லாபம் அதிகரிக்கும்.

உத்தியோகத்தில் உறுதியற்ற நிலை உண்டாகும். சிலரால் ஒதுக்கப்பட்டாலும் மூத்த அதிகாரிகளால் முன்னுக்கு வருவீர்கள். சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். ஆனால், எதிர்பார்த்த பதவி உயர்வு தாமதமாகும்.கலைத்துறையினர் மற்றவர்களின் பேச்சை நம்பி பெரிய முடிவுகளை எடுக்கவேண்டாம்.தமிழ்ப் புத்தாண்டு சுமைகளைச் சுமக்க வைத்தாலும் இறுதியில் வெற்றி கிடைக்கும்.

விருச்சிகம்:

வேலைகளை உடனுக்குடன் முடிப்பவர்களே!

உங்கள் ராசிக்கு 9-ல் சந்திரன் இருக்கும்போது தமிழ்ப் புத்தாண்டு பிறப்பதால், மற்றவர்கள் செய்ய முடியாத கடினமான காரியங்களையும் சாமர்த்தியமாகச் செய்து முடிப்பீர்கள். அடுத்தடுத்து செலவுகள் வந்தாலும் அதற்கேற்ற வருமானமும் உண்டு. குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். வெகுநாள் கனவாக இருந்த வீடு வாங்கும் ஆசை இப்பொழுது நிறைவேறும்.

சூரியன் 6-ல் நிற்கும் போது வருடம் பிறப்பதால் முடங்கியிருந்த நீங்கள் சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். வழக்கு வெற்றி அடையும். வேலை கிடைக்கும். புண்ணிய ஸ்தலங்களுக்குக் குடும்பத்துடன் சென்று பிரார்த்தனைகளை நிறைவேற்றி நிம்மதி அடைவீர்கள்.வருடம் முழுவதும் பாதச்சனி இருப்பதால் குடும்பத்தில் கணவன்-மனைவிக்குள் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. பிள்ளைகளின் முரட்டுத் தனத்தை அன்பாக எடுத்துச் சொல்லி மாற்றுங்கள். கர்ப்பிணிப் பெண்கள் தொலைதூரப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. கண், காது வலி வந்து செல்லும். உடம்பில் சர்க்கரை அளவை பரிசோதித்துக் கொள்ளுங்கள். அரசு சம்பந்தப்பட்ட காரியங்கள் பெரும் அலைச்சலுக்குப் பிறகு முடியும்.

வருடம் முழுவதும் கேது 2-லும், ராகு 8-லும் தொடர்வதால், பேச்சில் நிதானம் தேவை. எந்த ஒரு விஷயத்தையும் நீங்களே நேரடியாகச் சென்று முடிப்பது நல்லது. கணவன்-மனைவிக்குள் வீண் சந்தேகம், ஈகோ பிரச்னை வந்து போகும். இரவு நேரத்தில் தொலைதூரப் பயணம் மேற்கொள்வதைத் தவிர்க்கவும். கண் பார்வையை பரிசோதித்துக் கொள்வது நல்லது. அடுத்தவர்கள் விவகாரத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது.

வருடத் தொடக்கத்தில் இருந்து 18.5.19 வரை உங்கள் ராசிக்கு 2-ம் வீட்டில் குரு அதிசாரத்தில் செல்வதால், பணப்புழக்கம் அதிகரிக்கும். செலவுகளும் அடுத்தடுத்து ஏற்படும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். குழந்தை பாக்கியம் உண்டாகும். மகளின் கல்யாணத்தை ஊரே மெச்சும்படி நடத்துவீர்கள். வீடு கட்டி கிரகபிரவேசம் நடத்தும் வாய்ப்பு ஏற்படும். வங்கிக் கடனுதவி கிடைக்கும். மகனுக்கு வெளிநாட்டு நிறுவனத்தில் வேலை கிடைக்கும்.

19.5.19 முதல் 27.10.19 வரை குரு ஜன்ம குருவாக இருப்பதால் பழைய பிரச்னைகள் தலைதூக்கும். மற்றவர்களை நம்பி பெரிய முயற்சிகளில் ஈடுபடாதீர்கள். வீண் பழியும் வந்து நீங்கும்.28.10.19 முதல் 27.3.20 வரை குருபகவான் உங்கள் ராசியை விட்டு விலகி 2-ம் வீட்டிலேயே அமர்வதால் குடும்பத்தில் நிலவி வந்த கூச்சல், குழப்பங்கள் விலகும். பிரிந்திருந்த கணவன் – மனைவி ஒன்று சேர்வீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும்.

7.5.19 முதல் 23.6.19 வரை உங்களின் ராசிநாதனாகிய செவ்வாய் 8-ல் மறைவதால் மனஇறுக்கமும், எதிர்காலம் பற்றிய பயமும், எந்தக் காரியத்தை தொட்டாலும் தாமதமாக முடியும் போக்கும் உண்டாகும்.11.5.19 முதல் 3.6.19 வரை மற்றும் 1.3.20 முதல் 28.3.20 வரை சுக்கிரன் 6-ல் மறைவதால் அலைச்சல், செலவினங்கள், கணவன் – மனைவிக்கிடையே சந்தேகத்தால் சின்னச் சின்ன வாக்குவாதங்களும் வரக்கூடும்.

மாணவர்களுக்கு ஞாபக சக்தி அதிகரிக்கும். சிலருக்கு அரசாங்கத்தால் கௌரவிக்கப்படும் வாய்ப்பு ஏற்படும்.வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெறும். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும்.உத்தியோகத்தில் பணிச்சுமை குறையும். உங்களின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொண்டு பெரிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். அயல்நாட்டுத் தொடர்புடைய நிறுவனங்களில் வேலை கிடைக்கும்.

கலைத்துறையினருக்கு இதுவரை ஏற்பட்ட பல சிக்கல்களும் நீங்கும். பெரிய வாய்ப்புகள் தேடி வரும்.இந்த தமிழ்ப் புத்தாண்டு உங்கள் வாழ்க்கையில் புதியதொரு அத்தியாயத்தைத் தொடங்கி வைப்பதாக இருக்கும்.

தனுசு:

உள்ளதை உள்ளபடி பேசுபவர்களே!

சுக்கிரனும், புதனும் சாதகமான வீடுகளில் அமர்ந்திருக்கும் நேரத்தில் தமிழ்ப் புத்தாண்டு பிறப்பதால் எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். மகிழ்ச்சியான செய்திகள் வரும். பழைய நண்பர்கள், உறவினர்கள் தேடி வந்து பேசுவார்கள். எதிர்பார்த்த உதவிகளும் கிடைக்கும்.

பிள்ளைகள் கல்வி அல்லது உத்தியோகத்தின் பொருட்டு வெளிநாடு அல்லது வெளிமாநிலம் செல்வார்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை நல்ல விதத்தில் முடியும் உங்கள் ராசிக்கு 8-ம் வீட்டில் சந்திரன் இருக்கும் வேளையில் வருடம் பிறப்பதால், எந்த ஒரு வேலையையும் போராடித்தான் முடிக்கவேண்டி வரும். பணம் வரும் என்றாலும் செலவுகளும் அதிகரிக்கவே செய்யும். மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம்.

வருடம் பிறக்கும்போது செவ்வாய் 6-ல் இருப்பதால், தொடங்கும் காரியங்கள் வெற்றிகரமாக முடியும். எதிர்பார்ப்புகள் தடையின்றி நிறைவேறும். பிரபலங்களின் உதவியால் சில வேலைகளை முடிப்பீர்கள். வெகுநாள் கனவாக இருந்த வீடு வாங்கும் ஆசை இப்பொழுது நிறைவேறும். வெளிநாடு சென்று வருவீர்கள்.

இழுபறியாக இருந்த பூர்வீகச் சொத்துப் பிரச்னைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். வருடம் முழுவதும் சனிபகவான் ராசியிலேயே அமர்ந்திருப்பதால் எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் கிடைக்கும். ஜன்மச் சனியாக தொடர்வதால் உடல் நலம் பாதிக்கும். வழக்கை நினைத்துக் கவலையடைவீர்கள்.

வருடம் முடியும் வரை 1-ல் கேதுவும், 7-ல் ராகுவும் இருப்பதால் முன்கோபம், மனதில் ஒருவித சஞ்சலம், எதிலும் ஆர்வமில்லாத நிலை, ஹார்மோன் பிரச்னை, தலைச்சுற்றல் வந்து செல்லும். கணவன் – மனைவிக்கிடையே வீண் சந்தேகம், ஈகோ பிரச்னைகள் வரக்கூடும். வாழ்க்கைத் துணைக்கு மருத்துவச் செலவுகளும், அவருடன் கருத்துமோதல்களும் ஏற்படக்கூடும்.

ஆண்டுத் தொடக்கத்திலிருந்து 18.5.19 வரை குருபகவான் அதிசாரமாக ஜன்ம குருவாக நீடிப்பதால், அடுத்தடுத்து வேலைகள் இருந்தபடி இருக்கும். எதிர்காலத்தைப் பற்றிய அச்சம் ஏற்பட்டு நீங்கும். உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படக்கூடும். 19.5.19 முதல் 27.10.19 வரை குரு உங்கள் ராசிக்கு 12-ம் வீட்டில் நிற்பதால் திடீர் பயணங்கள் அதிகரிக்கும். கொஞ்சம் சிக்கனமாக இருப்பது அவசியம். கோயில்களுக்குக் குடும்பத்துடன் சென்று வருவீர்கள்.

ஆனால், 28.10.19 முதல் 27.3.20 வரை குருபகவான் உங்கள் ராசிக்குள்ளேயே நுழைவதால் திடீர் பயணங்களால் ஏற்பட்ட வீண் அலைச்சல்கள், அலைக்கழிப்புகள் குறையும். முன்கோபத்தில் உணர்ச்சிவசப்பட்டு வார்த்தைகளை விட்டுவிடவேண்டாம். ஓய்வெடுக்க முடியாதபடி வேலைச்சுமை அதிகரிக்கும்.

24.6.19 முதல் 9.8.19 வரை செவ்வாய் 8-ல் அமர்வதால் கணவன் – மனைவிக்கிடையே மனக்கசப்புகள் வரும். உங்கள் இருவருக்கிடையே வீண் சந்தேகத்தை ஏற்படுத்திப் பிரிவை உண்டாக்கச் சிலர் முயற்சி செய்வார்கள். சொத்துப் பிரச்னை தலைதூக்கும். வழக்குகளில் எச்சரிக்கையாக இருங்கள்.

4.6.19 முதல் 5.7.19 வரை மற்றும் 29.3.20 முதல் 13.4.20 வரை சுக்கிரன் 6-ல் மறைவதால் பேச்சால் பிரச்னைகள் வரக்கூடும். மற்றவர்கள் விஷயங்களில் நீங்கள் தலையிடாமல் இருப்பது நல்லது.

மாணவர்களுக்கு விளையாட்டு மனப்பான்மை நீங்கி, படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும்.வியாபாரத்தில் முன்னேற்றமான சூழ்நிலை காணப்படும். பணியாளர்களின் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும். கூட்டுத் தொழிலில் ஏற்பட்ட குழப்பங்கள் தீரும்.உத்தியோகத்தில் நல்ல திருப்பம் ஏற்படும். மேலதிகாரிக்கு நெருக்கமாவீர்கள். வைகாசி மாதத்தில் புதிய வேலை கிடைக்கும்.

கலைத்துறையினருக்குப் பெரிய நிறுவனங்களில் இருந்து வாய்ப்பு வரும். வருமானம் உயரவும் வழி பிறக்கும்.இந்தப் புத்தாண்டு ஓய்வில்லாமல் உழைக்க வைத்தாலும், தடைப்பட்ட காரியங்களை நிறைவேற்ற உதவி செய்வதாக இருக்கும்.

மகரம்:

இரக்க சுபாவம் கொண்டவர்களே!

ராசிக்கு 2-ல் சுக்கிரன் இருக்கும் வேளையில் தமிழ்ப் புத்தாண்டு பிறப்பதால், போராடி வெற்றி பெறுவீர்கள். சாதுர்யமாகவும், சமயோசிதமாகவும் சிந்தித்து பழைய பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பீர்கள். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். வி.ஐ.பி.கள் உதவுவார்கள். திருமணப் பேச்சு வார்த்தை கூடி வரும். இழுபறியாக இருந்த வேலைகள் முடிவடையும். உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டில் சந்திரன் இருக்கும்போது வருடம் பிறப்பதால் அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.

வருடம் முழுவதும் சனி 12- ல் மறைந்து விரயச் சனியாகத் தொடர்வதாலும், கேதுவும் 12-ம் வீட்டில் நிற்பதாலும் வீண் பழி, பண இழப்பு, ஏமாற்றங்கள் வந்து போகும். உறவினர்களுடன் பனிப்போர் வெடிக்கும். மற்றவர்களின் ஆலோசனையை முழுமையாக ஏற்காமல் நீங்களும் ஒருமுறைக்குப் பல முறை யோசித்து முடிவு எடுக்கவும்.

ராகு வருடம் முழுவதும் 6-ம் வீட்டிலேயே தொடர்வதால் முக்கிய பிரமுகர்களுக்கு நெருக்கமாவீர்கள். உங்களை ஏமாற்றிக் கொண்டிருந்தவர்களை இனங்கண்டறிந்து ஒதுக்குவீர்கள். ஆன்மிக வழிபாட்டில் மனம் லயிக்கும். வெளிநாட்டிலிருக்கும் நண்பர்கள், உறவினர்களால் ஆதாயம் உண்டு. அயல்நாட்டுப் பயணம் சாதகமாக அமையும்.

14.4.19 முதல் 18.5.19 வரை குரு உங்கள் ராசிக்கு அதிசாரமாக 12-ம் வீட்டில் இருப்பதால் சின்னச் சின்ன செலவுகள் அதிகமாகிக் கொண்டே போகும். ஆக்கப்பூர்வமான பணிகளுக்காக கடன் வாங்க வேண்டியிருக்கும். பூர்வீகச் சொத்தில் பாகப்பிரிவினை நல்லவிதத்தில் முடியும்.

குருபகவான் 19.5.19 முதல் 27.10.19 வரை லாப வீட்டிலேயே தொடர்வதால் தொட்டது துலங்கும். சுப நிகழ்ச்சிகள் வீட்டில் ஏற்பாடாகும். செலவுகளைக் குறைக்க திட்டமிடுவீர்கள். எங்கு சென்றாலும் வரவேற்பு அதிகரிக்கும்.28.10.19 முதல் 27.3.20 வரை 12-ம் வீட்டில் குரு அமர்வதால் எதிர்பாராத பயணங்கள் அதிகரிக்கும். சேமிக்க முடியாதபடி செலவுகளும் அதிகரிக்கும். கடன் கொடுப்பது வாங்குவதில் கவனம் தேவை. கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவரின் ஆலோசனைக்கேற்ப உணவு முறைகளை அமைத்துக் கொள்வது நல்லது. தந்தையாரின் உடல் நலனில் கவனம் தேவை.

6.7.19 முதல் 23.7.19 வரை சுக்கிரன் 6-ல் மறைவதால், வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும்.10.8.19 முதல் 25.9.19 வரை செவ்வாய் 8-ல் மறைவதனால் மனஇறுக்கமும், எதிர்காலம் பற்றிய பயமும், எந்தக் காரியத்தை எடுத்தாலும் தாமதமாக முடியும் நிலையும் உண்டாகும்.

மாணவர்கள் உயர்கல்வியில் அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெறுவீர்கள். விரும்பிய கல்வி நிறுவனத்தில் சேருவீர்கள்.வியாபாரத்தில் உங்கள் அனுபவ அறிவு பளிச்சிடும். தொழிலை விரிவுபடுத்துவீர்கள். வைகாசி, ஆனி, ஆவணி, ஐப்பசி மாதங்களில் நழுவிச் சென்ற ஒப்பந்தங்கள் கைக்கு வரும். கார்த்திகை, மாசி மாதங்களில் பிரபல நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு லாபத்தை அதிகரிப்பீர்கள்.

உத்தியோகத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு தடைப்பட்டாலும் போராடிப் பெற்றுவிடுவீர்கள். சில நேரங்களில் மற்றவர்களின் வேலைகளையும் நீங்களே பார்க்கவேண்டி வரும். சக ஊழியர்களின் விஷயங்களில் தலையிடவேண்டாம். ஆவணி, கார்த்திகை, மாசி மாதங்களில் மாற்றம் ஏற்படும். அயல்நாட்டு நிறுவனங்களில் நல்ல வேலை கிடைக்கும். உங்கள் மேல் தொடரப்பட்ட வழக்கு சாதகமாக முடியும்.

கலைத்துறையினருக்கு அவர்களுடைய படைப்புகளில் மற்றவர்களால் ஏற்பட்ட சட்டச் சிக்கல்கள் தீரும். வாய்ப்புகள் எதிர்பார்த்தபடி அமையும்.இந்தப் புத்தாண்டு உங்களை வெற்றி பெற வைப்பதுடன், வருமானத்தையும் உயர்த்துவதாக அமையும்.

கும்பம்:

உதவும் மனப்பான்மை உள்ளவர்களே!

உங்கள் ராசிக்கு 6-ல் சந்திரனும் 3-ல் சூரியனும் இருக்கும் வேளையில் தமிழ்ப் புத்தாண்டு பிறப்பதால், கம்பீரமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். அரசு காரியங்கள் நல்ல விதத்தில் முடியும். வழக்கு சாதகமாகும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உறவினர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும். நீண்ட நாள்களாக எதிர்பார்த்த அயல்நாட்டுப் பயணம் சாதகமாக அமையும். வேலை தேடிக் கொண்டிருந்தவர்களுக்கு வேலை கிடைக்கும்.

சுக்கிரன் ராசியில் இருக்கும்போது வருடம் பிறப்பதால், அடிப்படை வசதிகள் பெருகும். கனிவான பேச்சால் எல்லோரையும் கவருவீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். கடனாகக் கொடுத்த பணம் கைக்கு வரும். அநாவசிய செலவுகளைக் குறைப்பீர்கள். பிள்ளைகளை நல்ல வழிக்குக் கொண்டு வருவீர்கள்.

வருடம் முழுவதும் ராகு 5-ல் தொடர்வதால், சில நேரங்களில் மன இறுக்கம் வந்து நீங்கும். உறவினர்களில் சிலர் உங்களிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்வார்கள். அன்புத் தொல்லையும் அதிகரிக்கும். பிள்ளைகளிடம் முக்கியமான குடும்ப விஷயங்களைப் பகிர்ந்துகொள்வதில் தவறில்லை. மகளின் திருமணத்திற்காக வெளியில் கடன் வாங்க வேண்டி வரும். மகனின் உயர்கல்வி, உத்தியோகத்துக்காகச் சிலரின் சிபாரிசை நாடுவீர்கள்.

வருடம், முழுவதும் சனியும் கேதுவும் 11-ல் அமர்ந்திருப்பதால், சிக்கல்களை புதிய கோணத்தில் அணுகி வெற்றி பெறுவீர்கள். வரவேண்டிய பணம் கைக்கு வரும். வெளிவட்டாரத்தில் செல்வாக்குக் கூடும். ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும். பழைய கசப்பான சம்பவங்கள் அவ்வப்போது மனதை வாட்டும்.

14.4.19 முதல் 18.5.19 வரை குருபகவான் உங்கள் ராசிக்கு அதிசாரமாக லாப வீட்டில் வலுவாக இருப்பதால், திடீர் பணவரவு உண்டு. பெரிய பதவிகள் தேடி வரும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். தாழ்வுமனப்பான்மை நீங்கி நேர்மறை எண்ணங்கள் உருவாகும். பழைய கடனில் ஒரு பகுதியைத் தந்து முடிக்க வழி பிறக்கும்.19.5.19 முதல் 27.10.19 வரை குருபகவான் 10-ம் வீட்டில் தொடர்வதால், வேலைச்சுமையால் பதற்றம் அதிகரிக்கும். சிறுசிறு அவமானங்களும் ஏற்படக்கூடும். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்த முயற்சி செய்வார்கள். யாருக்கும் வாக்குறுதி தர வேண்டாம்.

28.10.19 முதல் 27.3.20 வரை குரு உங்கள் ராசிக்கு லாப வீட்டில் அமர்வதால் திடீர் யோகம், அதிர்ஷ்டம் உண்டாகும். சுப நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். நல்லவர்களின் ஆலோசனையால் நீங்கள் புதிய பாதையில் செல்வீர்கள். கணவன்-மனைவி இருவரும் மனம் விட்டுப் பேசுவீர்கள். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

24.7.19 முதல் 16.8.19 வரை சுக்கிரன் 6-ல் மறைவதால், வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை.26.9.19 முதல் 11.11.19 வரை உள்ள காலகட்டத்தில் செவ்வாய் 8-ல் மறைவதால் கட்டுக்கடங்காத செலவுகள் ஏற்பட்டபடி இருக்கும். ஆவணங்கள், பத்திரங்கள் தொலைந்து விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

மாணவர்கள் அதிகாலையில் எழுந்து படிப்பது நல்ல பலனைத் தரும். விரும்பும் பாடப்பிரிவில் சேர சிலரின் சிபாரிசை நாடவேண்டி வரும்.வியாபாரத்தில் போட்டிகளைச் சமாளிக்கும் திறன் அதிகரிக்கும். புதிய யுக்திகளைக் கையாண்டு லாபம் ஈட்டுவீர்கள். கார்த்திகை, தை, பங்குனி மாதங்களில் எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் கிடைக்கும்.

உத்தியோகத்தில் உழைப்புக்கேற்ற பலன் கிடைக்கும். ஆவணி, கார்த்திகை, பங்குனி மாதங்களில் புதிய வாய்ப்புகள் ஏற்படும்.கலைத்துறையினர் கிடைக்கும் வாய்ப்புகளைத் தவறாமல் பயன்படுத்திக்கொள்வது அவசியம்.

இந்தப் புத்தாண்டு சின்னச் சின்ன இடையூறுகளை ஏற்படுத்தினாலும், மனதைப் பக்குவப்படுத்தி, வருட முடிவில் வசதிகளை ஏற்படுத்துவதாக அமையும்.

மீனம்:

மற்றவர்களை மகிழ்வித்து மகிழ்பவர்களே!

செவ்வாய் 3-ல் வலுவாக இருக்கும் வேளையில் புத்தாண்டு பிறப்பதால், புதிய முயற்சிகள் வெற்றி பெறும். துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சவால்கள், விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். பணவரவு அதிகரிக்கும். கௌரவப் பதவிகள் தேடி வரும். சொந்தங்கள் உங்களின் பெருந்தன்மையைப் புரிந்துகொள்வார்கள்.

வருடம் முழுவதும் சனி பகவான் 10-ம் வீட்டிலேயே தொடர்வதால் எதையும் சாதிக்கும் துணிச்சல் வரும். உடல் ஆரோக்கியம் சீராகும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு கூடும். வேற்று இனத்தவர்கள் உதவுவார்கள். அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். என்றாலும் வேலைச்சுமை இருந்தபடி இருக்கும்.

வருடம் முழுவதும் ராகு 4-லும் கேது 10-லும் தொடர்வதால் மனதில் இனம்புரியாத பயம், முடிவு எடுப்பதில் தடுமாற்றம் வந்து செல்லும். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். பூர்வீக சொத்தைப் பெறுவதில் பிரச்னைகள் வந்து நீங்கும். யாருக்காகவும் ஜாமீன் கையெழுத்து போடாதீர்கள்.

14.4.19 முதல் 18.5.19 வரை குருபகவான் அதிசாரமாக உங்கள் ராசிக்கு 10-வது வீட்டில் தொடர்வதால் அதுவரை வேலைச்சுமை அதிகமாக இருக்கும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். சில காரியங்களை போராடி முடிக்க வேண்டி வரும். நெருக்கமானவர்களிடம் கூட குடும்ப விஷயங்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டாம். மறைமுக எதிர்ப்புகளும், இடமாற்றங்களும் வரக்கூடும்.

19.5.19 முதல் 27.10.19 வரை ராசிநாதன் குருபகவான் 9-ம் வீட்டில் நிற்பதால் உங்களின் அடிப்படைத் தேவைகள் பூர்த்தியடையும். அடுத்தடுத்த சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். புது வீடு கட்டி, கிரகபிரவேசம் செய்வீர்கள். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். குடும்பத்துடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள்.

28.10.19 முதல் 27.3.20 வரை குரு பகவான் உங்கள் ராசிக்கு 10-ல் இருப்பதால் சிறு சிறு அவமானங்களும், விமர்சனங்களும், வீண்பழியும் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணையின் குற்றம், குறைகளை அடிக்கடி சொல்லிக் காட்டவேண்டாம். தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

17.8.19 முதல் 9.9.19 வரை சுக்கிரன் 6-ல் அமர்வதால், அந்தக் காலகட்டத்தில் கணவன் – மனைவிக்கிடையே வாக்குவாதங்கள் ஏற்படக்கூடும். வாழ்க்கைத்துணைக்குச் சிறு சிறு அறுவை சிகிச்சை மேற்கொள்ளக்கூடிய வாய்ப்புள்ளது. 12.11.19 முதல் 27.12.19 வரை செவ்வாய் 8-ல் அமர்வதால் சகோதரர்களுடன் சண்டை சச்சரவுகள் ஏற்படக்கூடும். செலவுகள் அதிகரிக்கும்.

மாணவர்களுக்குப் பாடங்களில் ஆர்வம் உண்டாகும். உயர்கல்வியில் அதிக மதிப்பெண்கள் பெற்று பெற்றோரை மகிழ்விப்பீர்கள். நண்பர்களைத் தேர்ந்தெடுப்பதில் கவனம் தேவை.வியாபாரத்தில் நீங்கள் தொட்டது துலங்கும் காலம் இது. உங்கள் நிலை உயரும். இழந்த செல்வாக்கை மீட்பீர்கள். தேங்கிக் கிடக்கும் சரக்குகள் விற்றுத் தீரும். பழைய பாக்கிகள் வசூலாகும். விலகிச் சென்ற பங்குதாரர்கள் மீண்டும் வந்து இணைவார்கள். சித்திரை, ஆவணி, தை மாதங்களில் எதிர்பாராத லாபம் கிடைக்கும். பெரிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துகொள்வீர்கள்.

உத்தியோகத்தில் உங்கள் நிலை உயரும். புதிதாகப் பொறுப்பேற்கும் உயரதிகாரி உங்களைப் புரிந்துகொள்வார். முக்கியப் பொறுப்புகளை உங்களிடம் ஒப்படைப்பார். ஆவணி, புரட்டாசி, தை மாதங்களில் பொறுப்புகள் அதிகரிப்பதுடன், சம்பளமும் உயரும்.

கலைஞர்களுக்கு வாய்ப்புகள் எதிர்பார்த்தபடி கிடைக்கும். பொது நிகழ்ச்சிகளில் தலைமை தாங்கும் அளவுக்குப் பிரபலமடைவீர்கள்.இந்தப் புத்தாண்டு உங்களை மகிழ்ச்சியுடன் இருக்கச் செய்வதுடன் உறவினர்கள் வியந்து மதிக்கும்படி வாழவைக்கும்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்