இந்தியாவின் கைகளுக்குள் போகப் போகும் இரு விமான நிலையங்கள்…!! அமைச்சர் அர்ஜுன கூறுவது என்ன?

யாழ்ப்பாணம் – பலாலி விமானத்தளம் மற்றும் அம்பாந்தோட்டை மத்தள சர்வதேச விமான நிலையத்தை முழுமையாக இந்தியாவிற்கு வழங்கும் திட்டமிருப்பதாக வெளியிடப்படுகின்ற தகவல்களில் எவ்வித உண்மையும் கிடையாது என்று ஸ்ரீலங்கா அரசாங்கம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

இந்த இரண்டு விமான நிலையங்களையும் இந்தியாவிற்கு வழங்கி அபிவிருத்தி செய்வதற்கான திட்டம் இருப்பதை ஏற்றுக்கொண்ட துறைமுக மற்றும் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க, இந்தியாவுடன் ஒன்றிணைந்த வணிகத் திட்டத்தில் இந்த அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கவிருப்பதாகவும் கூறினார்.

கண்டிக்கு இன்றைய தினம் காலை விஜயம் மேற்கொண்ட துறைமுக மற்றும் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க, அஸ்கிரியப் பீடமகாநாயக்க தேரரை சந்தித்து ஆசிபெற்றுக் கொண்டார்.ரயில் சேவையில் ஏற்படுத்தப் போகின்ற சில அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாகவும், அமைச்சினால் மேற்கொள்ளவுள்ள எதிர்காலத் திட்டங்கள் குறித்தும் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க மற்றும் இராஜாங்க அமைச்சர் அசோக்க அபேசிங்க ஆகியோரால் மகாநாயக்க தேரருக்கு விளக்கமளிக்கப்பட்டது.

இந்த சந்திப்பைத் தொடர்ந்து அங்கிருந்து திரும்பிய அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவிடம் ஊடகவியலாளர்கள் வினா எழுப்பினர்.யாழ்ப்பாணம் – பலாலி விமானத் தளம் மற்றும் அம்பாந்தோட்டை மத்தள சர்வதேச விமான நிலையம் என்பவற்றை இந்தியாவிடம் ஒப்படைப்பதற்கான திட்டம் இருப்பதாக கூறப்படுவது குறித்து அமைச்சர் இதன்போது பதிலளித்தார்.

துறைமுக,விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க கருத்துத்தெரிவிக்கும் போது;

‘இல்லை. இந்தியாவுக்கு வழங்குவதில்லை. இந்தியாவின் சிவில், விமான சேவை நிறுவனத்துடன் நாங்கள் பேச்சு நடத்திவருகின்றோம். ஒன்றிணைந்த ஒரு வேலைத்திட்டத்துடன் எமது கடன்களை அவர்கள் பொறுப்பேற்று அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதற்கு உள்ளோம்.

கடந்த ஆட்சிக்காலத்தில் அனைத்தையும் விற்பனை செய்ததுபோல அல்ல, இது ஒன்றிணைந்த வர்த்தக திட்டமே முன்னெடுக்கவிருக்கின்றோம்.இருநாடுகளுக்கு இடையே எத்தனை விகிதம் பகிரப்படும் என்று இன்னும் திட்டமிடவில்லை. எனினும் சில பேச்சுக்கள் அண்மைக்காலமாக முன்னெடுக்கப்பட்டதோடு தொடர்ந்தும் பேச்சுக்கள் இடம்பெறும். எமக்குத் தேவையான வசதிகளை பெற்றுக்கொள்வோம். அதிகமான நிதி விமான நிலையத்திற்காக செலவிடப்பட்டுள்ளது.

இல்லாவிட்டால் கொழும்பிலிருந்து பெற்றுக்கொள்ளப்படுகின்ற இலாபம் அதிகபடியாக மத்தள விமான நிலைய கடன் தீர்ப்பதற்காக ஒதுக்கப்படும். சில வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதோடு நாட்டிற்கு உகந்த திட்டங்களையே அமுல்படுத்துவோம் எனத் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்