இந்தியாவை சொந்த மண்ணில் புரட்டியெடுத்த அவுஸ்திரேலியா…!! இமாலய இலக்கைத் துரத்தி பெருவெற்றி….!

இறுதித் தருணத்தில் டர்னரின் அதிரடி ஆட்டம் காரணமாக இந்தியாவுக்கு எதிரான நான்காவது ஒருநாள் தொடரை வெற்றிகொண்டு அவுஸ்திரேலிய அணி தொடரை 2:2 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது.மொகாலியில் பகலிரவு ஆட்டமாக ஆரம்பமான இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலாவதாக துடுப்பெடுத்தாடி நிர்ணியக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுக்களை இழந்து, 358 ஓட்டங்களை குவித்தது.பதிலுக்கு 359 என்ற இமாலய இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடுவதற்காக அவுஸ்திரேலிய அணி சார்பில் ஆரம்ப வீரராக களமிறங்கிய அணித் தலைவர் பின்ச் டக்கவுட் முறையிலும், அடுத்து வந்த ஷோன் மர்ஸ் 6 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்க அவுஸ்திரேலிய அணியின் முதல் இரண்டு விக்கெட்டுக்களும் 12 ஓட்டங்களுக்குள் வீழ்த்தப்பட்டது.

எனினும், உஷ்மன் கவாஜா மற்றும் ஹேண்ட்ஸ்கோப் மூன்றாவது விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்தாடி அணியை பலமான நிலைக்கு கொண்டு சேர்த்தனர்.

அதன்படி அவுஸ்திரேலிய அணி முதல் 10 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் 47 ஓட்டங்களையும், 20 ஆவது ஓவரில் 114 ஓட்டங்களையும், 30 ஆவது ஓவரில் 177 ஓட்டங்களையும் பெற, ஆடுகளத்தில் கவாஜா 84 ஓட்டத்துடனும் ஹேண்ட்ஸ்கோப் 79 ஓட்டத்துடனும் தொடர்ந்தும் துடுப்பெடுத்தாடி வந்தனர்.

அத்துடன் 33 ஆவது ஓவருக்கு பந்து கேதர் யாதவ் பந்துப் பரிமாற்றம் மேற்கொள்ள ஹேண்ட்ஸ்கோப் 2 ஆறு ஓட்டங்கள், ஒரு நான்கு ஓட்டங்களை விளாசித் தள்ளினார். மொத்தமாக அந்த ஓவரில் 19 ஓட்டங்கள் பெறப்பட்டதுடன் அவுஸ்திரேலிய அணியும் 200 ஓட்டங்களை கடந்தது.எனினும், 34.1 ஆவது ஓவரில் உஷ்மன் கவாஜா 91 ஓட்டத்துடன் ஆட்டமிழந்து வெளியேறினார்.

இவரின் ஆட்டமிழப்பையடுத்து மெக்ஸ்வெலுடன் கைகோர்த்தாடிய ஹேண்ட்ஸ்கோப்பும் 34.5 ஆவது பந்தில் 92 பந்துகளை எதிர்கொண்டு 3 ஆறு ஓட்டங்கள், 6 நான்கு ஓட்டங்கள் அடங்களாக சர்வதேச ஒருநாள் அரங்கில் தனது முதலாவது சதத்தை பூர்த்தி செய்தார்.

இந் நிலையில் மெக்ஸ்வெல் 36 ஆவது ஓவரின் முதல் பந்தில் குல்தீப் யாதவ்வின் பந்து வீச்சில் 23 ஓட்டத்துடன் எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார். இவரின் ஆட்டமிழப்பையடுத்து ஆஷ்டன் டர்னர் களமறிங்கி துடுப்பெடுத்தாடி வர அவுஸ்திரேலிய அணி 40 ஆவது ஓவரில் 4 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் 261 ஓட்டங்களை பெற்றது.

ஹேண்ட்ஸ்கோப் 114 ஓட்டத்துடனும், ஆஷ்டன் டர்னர் 19 ஓட்டத்துடனும் துடுப்பெடுத்தாடிவர வெற்றிக்கு 60 பந்துகளில் 98 ஓட்டம் என்ற நிலையிருந்தது.41.1 ஆவது ஓவரில் சாஹலுடைய பந்தில் ஹேண்ட்ஸ்கோப் 117 ஓட்டத்துடன் ஆட்டமிழக்க அவுஸ்திரேலிய அணி 5 விக்கெட்டுக்களை இழந்த நிலையில், 271 ஓட்டங்கள‍ை பெற்றது.இதற்கு அடுத்தபடியாக அலெக்ஸ் கரி ஆடுகளம் புகுந்தாட 44.2 ஆவது ஓவரில் அவுஸ்திரேலிய அணி 300 ஓட்டங்களை கடக்க, அடுத்த பந்தில் டர்னர் ஒரு நான்கு ஓட்டத்தை விளாசி அரைசதம் கடந்தார்.ஒரு கட்டத்தில் அவுஸ்திரேலிய அணிக்கு வெற்றிக்கு 30 பந்துகளில் 42 ஓட்டம் என்ற நிலையிருக்க டர்னர் மற்றும் அலெக்ஸ் கரி தொடர்ந்தும் அதிரடி காட்டி வந்தனர். இதனால் வெற்றிவாய்ப்பு அவுஸ்திரேலியாவின் பக்கம் திரும்பியது.

தொடர்ந்தும் டர்னர் ஆடுகளத்தில் இந்திய அணியின் பந்துகளை தெறிக்க விட, இறுதியாக அவுஸ்திரேலிய அணி 47.5 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 359 ஓட்டங்களை பெற்று, இந்திய அணி நிர்ணியத்த இமாலய வெற்றியிலக்கை கடந்தது.ஆடுகளத்தில் டர்னர் 84 ஓட்டத்துடனும் ரிச்சண்டர்சன் எதுவித ஓட்டமின்றியும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

இதனால், ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் 2:2 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. தொடரின் ஐந்தாவதும், இறுதியுமான போட்டி எதிர்வரும் 13 ஆம் திகதி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்