டெஸ்ட் தொடர் தோல்விக்கு இலங்கையைப் பழிதீர்த்த தென்னாபிரிக்கா….!! இலங்கைக்கு தொடர் சோகம்..!

நேற்று (10) நடைபெற்று முடிந்த சுற்றுலா இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் தொடரின் மூன்றாவது போட்டியில், தென்னாபிரிக்க அணி டக்வத் லூயிஸ் முறையில் 71 ஓட்டங்களால் வெற்றி பெற்றிருக்கின்றது.

அத்தோடு இந்த வெற்றியுடன், தென்னாபிரிக்க அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரினையும் இன்னும் இரண்டு போட்டிகள் மீதமிருக்க 3-0 என கைப்பற்றியிருக்கின்றது.முன்னதாக டர்பன் நகரில் ஆரம்பமான இப்போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணித்தலைவர் லசித் மாலிங்க முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை தென்னாபிரிக்க அணிக்கு வழங்கினார்.

இலங்கை அணி தமது தென்னாபிரிக்க சுற்றுப் பயணத்தில் முதல் கட்டமாக இடம்பெற்ற டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயற்பட்ட போதிலும், ஒரு நாள் தொடரில் முதல் இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்த காரணத்தினால் தொடரை தக்கவைக்க இப்போட்டியில் கட்டாய வெற்றி ஒன்றினை எதிர்பார்த்த வண்ணம் களமிறங்கியிருந்தது.

இந்த போட்டிக்கான இலங்கை அணியில் இரண்டு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இரண்டு கைகளினாலும் பந்துவீசக்கூடிய சகலதுறை வீரரான கமிந்து மெண்டிஸ் ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் அறிமுகமாக, இடதுகை வேகப்பந்து வீச்சாளரான இசுரு உதான ஏழு வருடங்களின் பின்னர் இலங்கை ஒரு நாள் அணியில் இணைக்கப்பட்டிருந்தார்.இவர்களுக்கு பதிலாக இலங்கை அணி, தனன்ஞய டி சில்வா மற்றும் விஷ்வ பெர்னாந்து ஆகியோருக்கு ஓய்வு வழங்கியிருந்தது.

மறுமுனையில் தென்னாபிரிக்க அணியும் இரண்டு மாற்றங்களை மேற்கொண்டிருந்தது. சகலதுறை வீரரான ட்வைன் ப்ரெடரியஸ் மற்றும் மணிக்கட்டு சுழல் வீரர் தப்ரைஸ் சம்ஷி ஆகியோர் வியான் முல்டர் மற்றும் என்ரிச் நொர்ட்ஜே ஆகியோருக்கு பதிலாக தென்னாபிரிக்க அணியில் இணைக்கப்பட்டிருந்தனர்.

பின்னர் நாணய சுழற்சி முடிவுகளுக்கு அமைவாக முதலில் துடுப்பாடிய தென்னாபிரிக்க அணி தமது ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான ரீஸா ஹென்றிக்ஸை தொடக்கத்திலேயே பறிகொடுத்த போதிலும், ஏனைய ஆரம்ப துடுப்பாட்ட வீரரான குயின்டன் டி கொக் தனது தரப்பிற்கு வலுச்சேர்த்தார்.

புதிய துடுப்பாட்ட வீரராக வந்த அணித்தலைவர் பாப் டு ப்ளெசிஸோடு ஜோடி சேர்ந்த குயின்டன் டி கொக் தனது அதிரடியான துடுப்பாட்டம் மூலம் தென்னாபிரிக்க அணியின் ஓட்டங்களை மிகவிரைவாக உயர்த்தினார். இந்நிலையில், குயின்டன் டி கொக்கின் ஜோடியான டு ப்ளெசிஸ் தென்னாபிரிக்க அணியின் இரண்டாம் விக்கெட்டுக்காக 97 ஓட்டங்களைப் பகிர்ந்து ஆட்டமிழந்தார். டு ப்ளெசிஸ் ஆட்டமிழக்கும் போது 36 ஓட்டங்களை குவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

டு ப்ளெசிஸின் விக்கெட் பறிபோன போதிலும் குயின்டன் டி கொக் தனது அதிரடி ஆட்டத்தினை தொடர்ந்ததுடன், ஒரு நாள் போட்டிகளில் தனது 14ஆவது சதத்தினையும் பூர்த்தி செய்தார்.

தொடர்ந்து குயின்டன் டி கொக்கின் விக்கெட் கசுன் ராஜிதவினால் கைப்பற்றப்பட்டது. டி கொக் 108 பந்துகளில் 16 பெளண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கலாக 121 ஓட்டங்களை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதன் பின்னர் தென்னாபிரிக்க அணிக்கு ரஸ்ஸி வன் டர் டஸ்ஸன் ஒரு நாள் போட்டிகளில் தான் பெற்றுக்கொண்ட 4ஆவது அரைச்சதத்துடன் பெறுமதி சேர்த்தார். மொத்தமாக 67 பந்துகளை எதிர்கொண்ட வன் டர் டஸ்ஸன் 3 பெளண்டரிகள் உடன் 50 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.

அடுத்ததாக மத்திய வரிசையில் வந்த டேவிட் மில்லர் மற்றும் அன்டைல் பெஹ்லுக்வேயோ ஆகியோரும் தமது அதிரடி துடுப்பாட்டம் மூலம் தென்னாபிரிக்க அணிக்கு உதவினர். இந்த இரண்டு வீரர்களினதும் துடுப்பாட்ட பங்களிப்போடு தென்னாபிரிக்க அணி, 50 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 331 ஓட்டங்களை குவித்துக் கொண்டது.

தென்னாபிரிக்க அணியின் துடுப்பாட்டத்தில் மத்திய வரிசை வீரர்களாக வந்த டேவிட் மில்லர் 41 ஓட்டங்களை குவிக்க, அன்டைல் பெஹ்லுக்வேயோ வெறும் 15 பந்துகளை மாத்திரம் எதிர்கொண்டு 5 பெளண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கலாக 38 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழக்காமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இலங்கை அணியின் பந்துவீச்சு சார்பாக இசுரு உதான 50 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களையும், கசுன் ராஜித, அறிமுக வீரர் கமிந்து மெண்டிஸ் மற்றும் அணித்தலைவர் லசித் மாலிங்க ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதமும் சாய்த்திருந்தனர்.

தென்னாபிரிக்க அணியின் துடுப்பாட்டத்திற்கு பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக 332 ஓட்டங்கள் இலங்கை அணிக்கு நிர்ணயம் செய்யப்பட்டது.

இந்த வெற்றி இலக்கினை அடைய இலங்கை அணி, ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான நிரோஷன் திக்வெல்ல மற்றும் அவிஷ்க பெர்னாந்து ஆகியோருடன் பதிலுக்கு துடுப்பாட களமிறங்கியது.இலங்கை அணியின் துடுப்பாட்ட இன்னிங்ஸ் ஆரம்பித்து சிறிது நேரத்திலேயே நிரோஷன் திக்வெல்ல தனது விக்கெட்டினை பறிகொடுத்து இந்த ஒரு நாள் தொடரில் மூன்றாவது தடவையாக ஏமாற்றம் தந்திருந்தார். திக்வெல்ல ஆட்டமிழக்கும் போது வெறும் 2 ஓட்டங்களை மாத்திரமே குவித்திருந்தார்.

இதனை அடுத்து, சிறிது நேரத்தில் இலங்கை அணியின் ஏனைய ஆரம்ப துடுப்பாட்ட வீரரான அவிஷ்க பெர்னாந்துவின் விக்கெட்டும் பறிபோனது. பெர்னாந்து 23 ஓட்டங்களுடன் மைதானத்தினை விட்டு வெளியேறினார்.

இதன் பின்னர் புதிய துடுப்பாட்ட வீரர்களான ஓஷத பெர்னாந்து மற்றும் குசல் மெண்டிஸ் ஆகியோர் இலங்கை அணிக்காக பொறுமையான முறையில் இணைப்பாட்டம் ஒன்றை உருவாக்க முயன்றனர். எனினும், இலங்கை அணி 16 ஓவர்கள் நிறைவில் 75 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்டிருந்த போது போட்டியில் மழை குறுக்கிட்டது.

மழையின் காரணமாக போட்டி நீண்ட நேரம் தடைப்பட்டு மீண்டும் ஆரம்பித்தது. மீண்டும் ஆரம்பித்த போட்டியில் டக்வத் லூயிஸ் முறைப்படி இலங்கை அணிக்கு 24 ஓவர்களில் 193 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது.

மிகவும் கடினமாக அமைந்த இந்த வெற்றி இலக்கினை நோக்கி தொடர்ந்து துடுப்பாடிய இலங்கை அணி ஓஷத பெர்னாந்துவின் விக்கெட்டினை சிறிது நேரத்திலேயே பறிகொடுத்தது. ஓஷத பெர்னாந்து 25 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

ஓஷத பெர்னாந்துவை அடுத்து தொடர்ச்சியாக தமது துடுப்பாட்ட வீரர்களை இழந்த இலங்கை அணி, நிர்ணயம் செய்யப்பட்ட 24 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 121 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவியது.இலங்கை அணியின் துடுப்பாட்டத்தில் அதிகபட்ச தனிநபர் ஓட்ட எண்ணிக்கையை குசல் மெண்டிஸ் 2 சிக்ஸர்கள் மற்றும் 4 பெளண்டரிகள் அடங்கலாக 41 ஓட்டங்களுடன் பதிவு செய்திருந்தார்.

அதேவேளை தென்னாபிரிக்க அணியின் பந்துவீச்சு சார்பில் இம்ரான் தாஹிர் 2 விக்கெட்டுக்களையும், ககிஸோ றபாடா லுங்கி ன்கிடி, மற்றும் தப்ரைஸ் சம்ஷி ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதமும் கைப்பற்றியிருந்தனர்.போட்டியின் ஆட்ட நாயகனாக தென்னாபிரிக்க அணியின் குயின்டன் டி கொக் தெரிவாகினார்.

இலங்கை – தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் தொடரின் நான்காவது போட்டி, எதிர்வரும் புதன்கிழமை (13) போர்ட் எலிசபெத் நகரில் இடம்பெறுகின்றது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்