மாத்தளை முத்துமாரியம்மன் ஆலய மாசிமக மகோற்சவ பஞ்சரத பவனி

சிவபூமி எனப்படும் இலங்கை மத்திய மலைநாட்டின் மாத்தளை மாநகர் பண்ணாகமம் பதி புண்ணியசஷேத்திரத்தில் ராஜசிம்மாசனத்தில் வீற்றிருந்து அருள்புரியும் சர்வலோகமாதா சர்வலங்காரநாயகி அகிலாண்டநாயகி ஸ்ரீ லலிதா மஹா திரிபுர சுந்தரி பராபட்டாரிஹா
ஸ்ரீ முத்துமாரியம்பாள் ஆலய வருடாந்த மாசிமக மஹோற்ஸவப் பெருவிழாவின் இரதோற்ஸவ பஞ்சரதோற்ஸவப் பெருவிழா.
அம்பிகையின் பஞ்சரதபவனி 19.02.2019 செவ்வாய்க்கிழமை காலை ரதாரோகணம் (தேர்வீதியுலா) ஆரம்பமாகி நகர்வலம் இடம் பெற்று 20.02.2019 புதன்கிழமை மாலை ஆலயத்தினை வந்தடைந்தது ரதவரோகணம் இடம் பெற்று அம்பாள் பச்சை சார்த்தி திருத்தேரில் இருந்து ஆலயத்திற்கு எழுந்தருளும் திருக்காட்சி காண கண் ஆயிரம் வேண்டும்.

பேர் கொண்ட அறிஞரும் கலைஞரும் சேரும்

சீரிய பண்ணாகமம் பதியது ஓங்கும்

கார் கண்ட மயிலென மகிழ்வுடன் அடியார்

உன் பாதம் பணிந்திட ஊக்கமாய் அருள்வாய்

ஏர்முதல் தொழில்களும் எம் மண்ணில் ஓங்கிட

சூலங்கொள் கரத்துடனே கருணையருள்வாய்

தேர் கொண்ட நாயகி பாரிலே அருள

மாரியம்மா பள்ளி எழுந்தருளாயே
^^^^^^^^^^^^^^^^^^^^

மாசியாம் திங்கள் மகத்தினில் நீயோ

மாசில்லா இரதம் தனில் பவனியும் வருவாய்

தேசுடன் உன்முகம் அருளினை பரப்பும்

தேவியே உன்வரம் தேவையை நிறைக்க

காசியும் கங்கையும் போன்ற நதியாம்

மாவலி கங்கையோ உன்னைத் தாலாட்ட

நேசமாய் அடியார்க்கள் வாழ்வது சிறக்க

நாயகியே பள்ளி எழுந்தருளாயே.
^^^^^^^^^^^^^^^^^^^^^

பொன்னிலங்கு ஈழமதன் மத்திய மலைநாட்டில்

தொன்று தொட்டுப் புகழ்படைத்த மாத்தளையின் பண்ணாகமம்

என்றுரைக்கும் ஊரினிலே எழுந்தருளி வந்த அம்பாள்

என்றும் எமக்கருள் புரிவாள் ஏற்றிடுவோம் அவள் தாளை
^^^^^^^^^^^^^^^^^^^^

அஞ்சலென அபயகரம் காட்டி நிற்கும் அம்மையவள்

பஞ்சரதப் பவனியிலே முதன் முதலில் வந்தவளாம்

செஞ்சொற் கவிஞர்களால் பாடல் பெற்ற தலமதுவாம்

கெஞ்சி நிற்கும் அடியவரின் பஞ்சமதைப் போக்கிடுவாள்
^^^^^^^^^^^^^^^^^^^^^^^

மாத்தளையின் பண்ணாகமம் என்னும் ஒரு பதியினலே

பூத்தமுகம் புன்னகை செய் ஆத்தாளாம் அன்னையவள்

பார்த்தவர்கள் வணங்கி நிற்கும் பசிய வில்வ மரத்தடியில்

தீர்த்து நிற்கும் வினையகல அன்னையவள் தோன்றினலே

^^^^^^^^^^^^^^^^^^^^^^^

திரைகள்சேர் கடலால் சூழ்ந்த தீவதாம் இலங்கை தன்னில்

வரைகளும் ஓங்கி நிற்கும் மாத்தளை மண்ணில் இன்று

உரைகளால் புகழை சொல்ல முடியாத வகையில்

இசைகளும் இல்லாப் புகழ்சேர்
மாத்தளை தாயே போற்றி

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
சுகத்துடன் எம்மை ஜெகத்தினில் வாழ

நல் வழி காட்டிடவே

மகத்துவ மாசிமகத்தினில் ரதத்தில்

ஏறி உலா வரும் அன்னை

புகழுடன் வாழ எமக்கருள் செய்து

அவனியிலே துயரங்கள் நீங்க

ஜெகம் தனில் பவனி வருகின்ற அம்மைக்கு

பல்லாண்டு கூறுதுமே

நீரால் வளஞ் பெறும் மண்ணாம்

மாத்தளை என்னும் ஒரு பதியில்

பரோர் போற்றும் பழம் பெருங் கோயில்

முத்துமாரி தலத்தில்

தேரோ ஐந்தும் பவனி இன்று

வருவதை நாம் வாழ்த்தி

ஊரார் இணைந்து மாத்தளையில்

பல்லாண்டு கூறுதுமே

”தாயேயாகி வளர்தாய் போற்றி போற்றி எமைக்காக்கும் ஸ்ரீமுத்துமாரியம்மையே போற்றி போற்றி”

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்