நீண்ட நாட்களின் பின் மரண சேர்ஸிங் செய்த இலங்கை…! தென்னாபிரிக்காவை சொந்த மண்ணில் வீழ்த்தி அபார வெற்றி..!!

தொடர் தோல்விகள்… மோசமான விமர்சனங்களின் பின்னர், முற்றிலும் புதிய இலங்கை அணியொன்றை தென்னாபிரிக்காவில் களமிறக்குவதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ சொன்னதோ என்னவோ… தென்னாபிரிக்க மண்ணில் அரிய டெஸ்ட் வெற்றியொன்றை இலங்கை ஈட்டியது.வன் மேன் ஆர்மியாக களத்தில் இறுதிவரை நிலைத்து, கடைசி விக்கெட்டை வைத்துக் கொண்டு, வெற்றியீட்டு சாகசம் நிகழ்த்தியிருக்கிறார் குஷல் ஜனித் பெரேரா. இறுதிவரை ஆட்டமிழக்காமல் 153 ஓட்டங்களை பெற்றிருந்தார்.

10வது விக்கெட்டிற்கு விஸ்வ பெர்னாண்டோவை வைத்துக் கொண்டு 78 ஓட்டங்களை இணைப்பாட்டாக பெற்றார் குஷல். இதில் விஸ்வ பெர்னாண்டோவின் பங்களிப்பு 27 பந்தில் 6 ஓட்டம். குஷல் 68 பந்தில் 67 ஓட்டங்களை பெற்றார். இதன் மூலம் தென்னாபிரிக்காவுடனான முதல் டெஸ்டில் 1 விக்கெட்டால் இலங்கை வெற்றியடைந்தது.நேற்று 83 ஓட்டங்களிற்கு 3 விக்கெட் என்ற நிலையில் ஆட்டம் முடிந்தது.

இன்று ஆட்டம் தொடங்கியதும், இலங்கை வீரர்கள் நிதானமாக ஆடினர். ஒஸாட பெர்னாண்டோ 37 ஓட்டத்தில் 4 வது விக்கெட்டாக ஆட்டமிழந்தார். அதையடுத்து களமிறங்கிய டிக்வெல டக் அவுட்டாகினார். 110 ஓட்டங்களிற்கு 5 விக்கெட் என இலங்கைக்கு மீண்டுமொரு தோல்வி பயம் ஏற்பட்டது.

அடுத்து களமிறங்கி தனஞ்ஜென டி சில்வா, குஷல் ஜனித் பெரேராவுடன் இணைந்து விக்கெட் சரிவை தடுத்தார். இந்த ஜோடி இணைப்பாட்டாக 96 ஓட்டங்களை பெற்றது. தனஞ்ஜென 79 பந்துகளில் 48 ஓட்டங்களை பெற்ற நிலையில் மகாராஜின் பந்தில் எல்.பி ஆனார். அடுத்து களமிறங்கிய லக்மல் டக் அவுட் ஆக, 206 ஓட்டங்களிற்கு 7 விக்கெட்.

வெற்றிக்கு 98 ஓட்டங்கள் தேவை.

அடுத்து இறங்கிய எம்பில்தெனிய 4, ராஜித 1 என ஆட்டிழக்க 226 ஓட்டங்களிற்கு 9 விக்கெட் என்றானது. இனி தோல்விதான் என்றுதான் எல்லோரும் நினைத்தனர்.

ஆனால் விஷ்வா பெர்னாண்டோ (6) மிகத்தைரியமாகத் தோள்கொடுக்க 78 ரன்கள் என்ற 10வது விக்கெட் கூட்டணி சாதனை முறியடிப்பு வெற்றிக்கூட்டணி அமைக்க வரலாறு காணாத வெற்றியைப் பெற்ற இலங்கை முதல் முறையாக தென்னாபிரிக்கத் தொடரில் 1-0 என்று முன்னிலை பெற்றுள்ளது.

இதனையடுத்து தென்னாபிரிக்கா தொடரை வெல்ல வாய்ப்பில்லை சமன் தான் செய்ய முடியும். ஏனெனில் இது 2 டெஸ்ட் கொண்ட தொடர். விஷ்வா பெர்னாண்டோ 6 ரன்களையே எடுத்தாலும் 2 இன்னிங்ஸ்களிலும் தன் பந்து வீச்சில் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்த வரலாற்று வெற்றியில் பங்களிப்பு செய்துள்ளார்.

தென்னாபிரிக்கா 2வது புதிய பந்தை எடுக்கும் போது இலங்கை அணி 263/9 என்று இருந்தது. ஆனாலும் பெரேரா ஆடிய போது அனைத்து பீல்டர்களையும் பவுண்டரியில் நிற்க வைத்து தவறிழைத்தார் கப்டன் டுபிளெசிஸ். பெரேரா, டேல் ஸ்டெய்னையும், ரபாடாவின் வேகத்தையும் பொருட்படுத்தாமல் சிக்சர்களுக்குத் தூக்கினார். கடைசியில் ரபாடாவை தேர்ட்மேனில் அடித்து பவுண்டரியுடன் வெற்றியைப் பெற்றார். கிங்ஸ்மீட் டர்பனில் 3வது வெற்றிகரமான விரட்டலாகும் இது.

வெற்றி பெற 13 ரன்கள் தேவை என்ற போது, டேல் ஸ்டெய்ன் பந்தை மிட்விக்கெட் மேல் தூக்கி சிக்சர் அடித்தார் பெரேரா, பிறகுதான் ரபாடாவை (1/97) பவுண்டரி விளாசினார்.

விஸ்வா பெர்னாண்டோ கடைசி நம்பிக்கையாக குசல் பெரேராவுடன் இணையும் போது அவர் 86 ரன்களில் இருந்தார். பெர்னாண்டொ 22 பந்துகள் டொக் வைத்து பிறகுதான் முதல் ரன்னை எடுத்தார், குசல் பெரேரா, மஹராஜை ஒரு சிக்ஸ் விளாசி 90 ரன்களுக்குள் நுழைந்தார். பிறகு ஒரு ரிவர்ஸ் ஸ்வீப் அடித்து 99 ரன்களுக்கு வந்தார் குசல். பிறகு ஒரு அருமையான சிங்கிள் மூலம் சதம் அடித்தார் குசல் பெரேரா.

அந்தத் தருணத்திலும் இலங்கை வெற்றிக்கு 64 ரன்கள் தேவைப்பட்டது. பிறகு ஒலிவியரை பிரமாதமான ஒரு அரக்க ஷொட்டில் சிக்ஸ் விளாசினார் குசல் பெரேரா. விஷ்வா ஸ்ட்ரைக்குக்கு வரும்போது தென்னாபிரிக்கா 2வது புதிய பந்தை எடுத்தது. ஆனால் ஸ்டெய்ன் அவரை வீழ்த்த முடியவில்லை.

தென்னாபிரிக்கா தள்ளித்தள்ளி பீல்டிங்கை நிறுத்தினாலும், ஸ்டெய்னை ஒரு அரக்க சிக்சரும், பிறகு ரபாடாவை ஒரு ரொப் எட்ஜ் சிக்சரும் விளாசினார் குசல் பெரேரா. 5வது சிக்சரை ஸ்டெய்னை அவர் அடித்த போது வெற்றிக்கு 7 ரன்களே தேவைப்பட்டது. குசல் பெரேரா தன் பதற்றங்களை அருமையாகக் கையாண்டு தேர்ட் மேன் திசையில் அடித்து வெற்றி தேடித் தந்தார்.

இதற்கு முன்னர் கொழும்பில் இதே போன்று 352 ரன்கள் இலக்கை 1 விக்கெட்டில் வென்றது இலங்கை. இப்போது மீண்டும் ஒரு விக்கெட்டில் வெற்றி.

200 பந்துகளில் 5 சிக்சர், 12 பவுண்டரிகளுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் 153 ஓட்டங்களை பெற்றார். டெஸ்ட் போட்டிகளில் அவது அதிக பட்ச ஓட்டங்கள் இதுதான். 85வது ஓவரை ரபாடா வீசினார். மூன்றாவது பந்தை பவுண்டரி அடித்து வெற்றியிலக்கை எட்டினார். 304 ஓட்டங்களிற்கு 9 விக்கெட் என இலங்கை, அரிதான வெளிநாட்டு டெஸ்ட் வெற்றியொன்றை பெற்றது.

தென்னாபிரிக்க தரப்பில் மகராஜ் 3, ஸ்ரெய்ன் , ஒலிவர் தலா 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

ஆட்ட நாயகன் குஷல் பெரேரா.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்