தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தான நான்காவது இராஜகோபுர மகாகும்பாபிஷேகம் இன்று….!!

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற யாழ். தெல்லிப்பழை ஸ்ரீதுர்க்காதேவி தேவஸ்தானத்தின் மேற்கு வாசல் இராஜ கோபுர கும்பாபிஷேகம் இன்று புதன்கிழமை(30) சிறப்பாக இடம்பெறவுள்ளது.

மேற்கு வாசல் இராஜ கோபுர கும்பாபிஷேகத்துக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியாகியுள்ள நிலையில் இராஜகோபுர கும்பாபிஷேகத்தையொட்டி தேவஸ்தானச் சூழல் முழுவதும் விழாக் கோலம் பூண்டுள்ளது.மேற்கு வாசல் இராஜ கோபுரத்துக்கான கும்பாபிஷேகம் தசம திதியும், அனுச நட்சத்திரமும், அமிர்த சித்த யோகமும் கூடிய காலை-09.25 மணி முதல் 10.50 மணி வரையுள்ள சுபநேரத்தில் இடம்பெறவுள்ளது. மேற்படி இராஜகோபுரம் இவ்வாலயத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள நான்காவது இராஜ கோபுரமாகும்.கடந்த- 1980 ஆம் ஆண்டளவில் இவ்வாலயத்தின் கிழக்குத் திசை நோக்கியதாக முதன்முதலாக தலைவாசல் இராஜ கோபுரம் நிர்மாணிக்கப்பட்டது.

இவ்வாலயத்தின் தென்திசையில் புதிதாக பஞ்சதள இராஜகோபுரம் அமைக்கும் பணிகள் கடந்த- 2016 ஆம் ஆண்டு தைப்பூச நாளில் தேவஸ்தானத் தலைவர் செஞ்சொற் செல்வர் கலாநிதி ஆறு.திருமுருகனால் அடிக்கல் நாட்டி ஆரம்பித்து வைக்கப்பட்டது.இந்த இராஜகோபுர நிர்மாணப் பணிகள் நிறைவுபெற்றதைத் தொடர்ந்து கடந்த-2017 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம்- 09 ஆம் திகதி தென்திசை பஞ்சதள இராஜகோபுர குடமுழுக்கு ஆயிரக்கணக்கான அடியவர்களின் பங்குபற்றுதலுடன் சிறப்பாக இடம்பெற்றது. ஆலய தென்திசை இராஜ கோபுர வேலைகள் நிறைவுபெற்றதும் குறுகியகால இடைவெளியில் அடியவர்கள் வடதிசைக் கோபுரத்தையும் நிர்மாணிக்க வேண்டுமென ஆவல் கொண்டார்கள். குபேர வாசல் என்று சொல்லப்படுகின்ற வடதிசை இராஜகோபுரம் அமைப்பதற்கான அடிக்கல் கடந்த-2017 ஆம் ஆண்டு ஆனி மாத உத்தர நட்சத்திர நன்னாளில் நாட்டப்பட்டது.

குபேரவாசல் இராஜகோபுர கும்பாபிஷேகம் கடந்த-2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதம்-28 ஆம் திகதி சிறப்பாக நடைபெற்றது.இந்நிலையில், தேவஸ்தான மேற்கு வாசல் இராஜகோபுரம் அமைப்பதற்கான அடிக்கல் கடந்த வருடம் நாட்டப்பட்டது. உள்நாட்டு, வெளிநாட்டு, அன்பர்களின் பல இலட்சம் ரூபா நிதிப் பங்களிப்பில் குறித்த கோபுரம் அமைப்பதற்கான பணிகள் மும்முரமாக இடம்பெற்று வந்த நிலையில், புதிய இராஜகோபுர கும்பாபிஷேகம் இன்று புதன்கிழமை(30) இடம்பெறவுள்ளது. இந்தியாவின் சீர்காழி பெரிய குத்தகைக்கரை கலியப்பெருமாள் புருசோத்தமன் தலைமையிலான பிரபல சிற்பாசிரிய குழுவினர் இவ்வாலயத்தின் தெற்கு, வடக்கு மற்றும் மேற்குத் திசை இராஜகோபுரங்களின் நிர்மாணப் பணிகளை செவ்வனே மேற்கொண்டுள்ளனர்.

இந்தியாவின் மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தைச் சூழப் பெருங் கோபுரங்கள் காணப்படுவது போன்று யாழ்.தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானமும் விளங்க வேண்டும் என்பதற்காக, ஆலயத்தின் நான்கு திசை இராஜகோபுரங்களும் ஒரேயளவு உயர அளவுடையதாக நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக, தெல்லிப்பழை ஸ்ரீதுர்க்காதேவி தேவஸ்தானத் தலைவர் செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு. திருமுருகன் தெரிவித்துள்ளார். இதுவொரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சி எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்