கையாலாகாத யாழ் மாநகர சபை…! அபிவிருத்திப் பணிகளுக்காக வந்த 12 மில்லியன் ரூபா திரும்பிச் சென்ற பரிதாபம்….!!

யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு 2018 ஆம் ஆண்டு கிடைத்த மாகாணத்துக்கான குறித்தொதுக்கப்பட்ட நிதியில் இருந்து 12 மில்லியன் ரூபா நிதிக்கான பணிகள் முடிவுறாத காரணத்தால் மீளப்பெறப்பட்டது.யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு உட்பட்ட பிரதேசத்தில் 2014ஆம் ஆண்டில் மேற்கொண்ட முத்திரை வரிப் பணம் கிடைக்காத காரணத்தினால், அதற்குப் பதிலாக 65 மில்லியன் ரூபா மாகாண ஒதுக்கீட்டின் ஊடாக வழங்கப்பட்டது.இவ்வாறு வழங்கப்பட்ட நிதியில் 40 மில்லியன் ரூபா 27 வட்டாரங்களுக்கும் தலா 1.5 மில்லியன் வீதம் ஒதுக்கீடு செய்யப்பட்டு அபிவிருத்திப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இதேநேரம் குறித்த நிதியில் இருந்து மாநகர சபைக்காக 11 மில்லியன் ரூபாவில் ஓர் டோசர் கொள்வனவு செய்யப்பட்டது.இருப்பினும் எஞ்சிய 14 மில்லியன் ரூபாவில் இரு சந்தைகள் மற்றும் ஓர் ஆயுள்வேத வைத்தியசாலை என்பவற்றை அமைக்கத் திட்டமிடப்பட்டது.

அவ்வாறு மேற்கொண்ட திட்டங்களில் ஏற்பட்ட மாற்றங்கள் நடைமுறைகள் காரணமாக காலதாமதம் ஏற்பட்டது.இவற்றின் அடிப்படையில் உள்ளூராட்சி ஆணையாளரால் குறித்த பணிகளை டிசெம்பர் மாதம் 31 ஆம் திகதி வரைக்கிடையில் மேற்கொள்ள சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருந்தது.

ஜனவரி மாதம் 3 ஆம் திகதி சகல கணக்குகளும் இடைநிறுத்தப்பட்டு முழுமை செய்யப்பட்ட பணிகள் மட்டும் பரிசீலணை மேற்கொண்டு கணக்குகள் முடிவுறுத்தப்பட்டன.இதன் காரணமாக 12 மில்லியன் ரூபாவுக்காக பணிகள் முடிவுறுத்தப்படாத காரணத்தினால் அப் பணிகளின் நிதி நிறுத்தப்பட்டது.

குறித்த நிதி ஆண்டு இறுதிக்குள் செலவு செய்யப்படாது விடின் கண்டிப்பாக திரும்பும் என மாநகர சபையில் பல தடவை பலரும் சுட்டிக்காட்டிய போதும், அது எமது நிதி அதனை திருப்ப முடியாது. எனச் சிலர் வாதிட்ட நிலையில் தற்போது நிதி மீளப்பெறப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்