யாழ் நகரில் கோலாகலமாக இடம்பெற்ற பட்டிப் பொங்கல்….!(காணொளி இணைப்பு)

பசுக்கள் இடபங்கள் பாதுகாக்கும் சகல சமய நிறுவனங்களின் ஏற்பாட்டில் வரலாற்றுப் பிரசித்தி பெற்ற பட்டிப் பொங்கல் விழா நேற்றுப் புதன்கிழமை(16-01-2019)யாழ்.நகரில் கோலாலமாக இடம்பெற்றது.

பிற்பகல்-02.20 மணியளவில் யாழ்.நகரிலுள்ள கே.கே.எஸ் வீதியில் அமைந்துள்ள சத்திரத்து ஞானவைரவர் ஆலயம் முன்பாக கோபவனி ஆரம்பமாகியது.அலங்கரிக்கப்பட்ட பசுக்களும்,பாரம்பரிய மாட்டு வண்டிலும் மங்கல வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டன. சத்திரத்து ஞானவைரவர் ஆலயத்திற்கு முன்பாக ஆரம்பமான கோபவனி மின்சார நிலைய வீதி, பெரியகடை, யாழ். பேருந்து மேற்கு நிலைய வீதி, ஆஸ்பத்திரி வீதியூடாக மீண்டும் ஞானவைரவர் ஆலயத்தை வந்தடைந்தது.மேற்படி கோபவனி நிகழ்வில், சர்வதேச இந்துக் குருமார் ஒன்றியத்தின் தலைவர் பிரம்மஸ்ரீ ப. மனோகரக் குருக்கள், அகில இலங்கை சைவக் குருபீடத் தலைவர் சிவஸ்ரீ சோமஸ்கந்த தண்டாயுதபாணி தேசிகர், சித்தன்கேணி நாகன்னியம்மன் ஆலய பிரதமகுரு சித்த ஞானகுரு இந்திரன் ஐயா, இலங்கை சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு க.சச்சிதானந்தன், சைவப்புலவர்களான கந்தசத்தியதாசன், மதுரகவி காரை எம்.பி அருளானந்தன், இராசையா ஸ்ரீதரன், பசுக்களைப் பாதுகாக்கும் இணையத்தின் செயலாளர் சிவஸ்ரீ ப. சிவலோகநாத தேசிகர் மற்றும் ஆன்மீகப் பெரியோர்கள்,ஆன்மீக ஆர்வலர்கள், வர்த்தகப் பெருமக்கள் ஆகியோர் கலந்து கொண்டதுடன்,

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன், ஈ.சரவணபவன், முன்னாள் வடமாகாண உறுப்பினர் பொன்னுத்துரை ஐங்கரநேசன், யாழ். மாநகரசபை முதல்வர் இ. ஆர்னோல்ட், வேலணை பிரதேச சபைத் தவிசாளர் தா. கருணாகர மூர்த்தி, வலி.மேற்குப் பிரதேச சபையின் தவிசாளர் த.நடனேந்திரன் ஆகியோர் விருந்தினர்களாகவும் கலந்து கொண்டனர்.

கோபவனி சத்திரத்துச் சந்தி ஞானவைரவர் ஆலயத்தை வந்தடைந்ததும் கோபூசை இடம்பெற்று பசுக்களுக்கு உணவளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஆலய முன்றலில் பட்டிப் பொங்கலையொட்டிய ஆசியுரைகள், சிறப்புரைகள், விசேட கெளரவிப்பு நிகழ்வுகள் என்பன இடம்பெற்றன.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்