பேச்சுவார்த்தை மேசைகளில் புலிகள் ஒரு பெண்ணுக்கு கூட இடம் தரவில்லை…ஒஸ்லோ பிரதி நகர முதல்வர் யாழில் சர்ச்சைக் கருத்து….!!

விடுதலைப் புலிகளின் பேச்சுவார்த்தை மேசையில் ஒரு பெண்ணுக்கேனும் சந்தர்ப்பம் கொடுக்கப்படவில்லை என நோர்வே, ஒஸ்லோ மாநகராட்சியின் பிரதி முதல்வரான ஈழத்தைச் சேர்ந்த கம்சாயினி குணரட்னம் தெரிவித்துள்ளார்.இலங்கைக்கு வருகை தந்துள்ள அவர் தனியார் தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலில் இதனைத் தெரிவித்துள்ளார்.

இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கும் போது; தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு உருவானமைக்கு நல்ல காரணம் ஒன்று உள்ளது. அவர்கள் துப்பாக்கி தூக்கியதற்கும் காரணம் உண்டு. ஆனால் இப்போது நாங்கள் போராடும் விதத்தை மாற்ற வேண்டும். தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் பெண்கள் களத்திற்குச் சென்று போர் புரிந்தனர். விமானம் ஓட்டினர், ஏன் விமானத்தைக் கூட திருடினர், ஆனால் பேச்சுவார்த்தை நடக்கும்போது அந்த மேசையைச் சுற்றி ஒரு பெண் கூட இல்லை.

ஜனநாயகமாக போராடுவதென்றால் ஜனநாயகமாகத்தான் போராட வேண்டும். அந்த போராட்டத்தில் எல்லோரும் கலந்து கொள்ளாவிடில் அது போராட்டம் அல்ல. அது ஒரு மக்களுக்கான போராட்டம் அல்ல என குறிப்பிட்டுள்ளார்.

ஜனநாயகம் என்பது அனைவருக்கும் சமமான ஒன்று இவற்றுள் ஆண், பெண் வேறுபாடு என்பது இல்லை என அவர் அழுத்தமாக வலியுறுத்தியுள்ளார்.

இணைப்பு 02

ஈழத் தமிழரான நோர்வே – ஒஸ்லோ மாநகர பிரதி மேயர் கம்சாயினி குணரட்ணத்துக்கும் மகளிர் அமைப்புக்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் நிகழ்வு  நேற்று 6 ஆம் திகதி யாழ்ப்பாணம் கிறீன் கிறாஸ் விருந்தினர் விடுதியில் இடம்பெற்றது.

இலங்கை கொள்கைகளுக்கான பேரவையின் ( Centre for Public Policies) ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் வட மாகாணத்தைச் சேர்ந்த மகளிர் அமைப்புக்களின் பிரதிநிதிகள், உள்ளூராட்சி அமைப்புக்களின் பெண் பிரதிநிதிகள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.பெண் தலைமைத்துவம், பெண்களின் அரசியல் பிரவேசம், ஈழத் தமிழர்களின் போருக்குப் பின்னரான நிலைப்பாடு போன்ற பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.ஒஸ்லோ மாநகர பிரதி மேயர் கம்சாயினி குணரட்ணம் இலங்கையில் பிறந்து, தனது மூன்றாவது வயதில் நோர்வே நாட்டுக்குப் புலம்பெயர்ந்தவராவார்.

தமிழ் இளைஞர் அமைப்பில் இணைந்து புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் தமிழர்களின் கலை, கலாசார, பண்பாட்டு வளர்ச்சிக்கான நிகழ்வுகளை நடாத்தியதோடு, இன அடக்கு முறைக்கெதிரான இளையோர் அமைப்பின் உப தலைவராகவும் செயற்பட்டு வந்தார்.

2015 அக்டோபர் மாதம் ஒஸ்லோவில் நடைபெற்ற மாநகராட்சித் தேர்தலின் மூலம் தெரிவு செய்யப்பட்டு, நோர்வேயின் மிக வயது குறைந்ந பிரதி மேயராகத் தெரிவு செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்