கட்டுநாயக்காவில் நீண்ட நேரம் சிக்கித் தவிக்கும் பயணிகள்…!! காரணம் இது தான்…!!

கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக பயணிக்கும் பெருமளவு பயணிகள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுப்பதாக தெரியவந்துள்ளது.விமான நிலையத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட கணினி மற்றும் விமான பயண கடவுச்சீட்டு ஸ்கேன் செய்யும் இயந்திரம் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளது.கட்டுநாயக்க விமான நிலையத்தினுள் இயங்கும் குடிவரவு குடியகல்வு அதிகாரிகளின் நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதற்காக புதிய இயந்திர கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டது.எனினும், புதிதாக உருவாக்கப்பட்ட கணினி மற்றும் விமான பயண கடவுசீட்டு ஸ்கேன் செய்யும் இயந்திரம் காரணமாக முன்னரை விடவும் தற்போது அதிக நேரம் எடுப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.மூன்று மடங்கிற்கு அதிக நேரம் தற்போது செலவாகுவதனால் விமான நிலையத்தினுள் பயணிகள் வரிசையில் சிக்கி தவிப்பதாக தெரியவந்துள்ளது. 50 கணினிகள் மற்றும் 50 ஸ்கேனர் இயந்திரங்கள் கடந்த மாதம் முதலாம் திகதி பொருத்தப்பட்டுள்ளன. அதன் பின்னரே நீண்ட வரிசை அதிகரித்து காணப்படுவதாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் இலங்கைக்கு அதிகம் சுற்றுலா பயணிகள் வருகைத்தரும் காலப்பகுதிகளாகும். இவ்வாறான நிலையில் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.இந்த நிலைமையினால் அதிகாரிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இந்த கணினி மற்றும் ஸ்கேனர்களுக்காக பல கோடி ரூபா செலவிடப்பட்டுள்ளதாகவும், எனினும், அவை இந்த நிறுவனங்களுக்கும் ஒருபோதும் பொருந்தவில்லை எனவும் கூறப்படுகின்றது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்