அதிகாரிகளின் அசமந்தப் போக்கினால் சீரற்ற வீதியில் தடம் புரண்ட பேரூந்து …. மயிரிழையில் காப்பாற்றப்பட்ட மாணவர்கள்… !! யாழில் நடந்த அதிர்ச்சி….!

காட்டுப்புலம் – பாண்டவெட்டையில் இருந்து நூற்றுக்கணக்கான மாணவர்களுடன் சென்ற பேருந்து ஒன்று வீதியோரமாக வயலுக்குள் புதைந்ததில் மாணவர்கள் பெரும் பீதிக்குள்ளாகினர்.அச்சத்தால் அலறிய அவர்கள் எதுவித சேதங்களும் இன்றி மீட்டெடுக்கப்பட்டனர்.புதைந்திருந்த வாகனத்தை வெளியே எடுப்பதற்கு அதிகளவான இளைஞர்கள் கடும் பிரயத்தனத்தில் ஈடுபட்ட போதிலும் மூன்றரை மணிநேரத்தின் பின்னரே வாகனம் எடுக்கப்பட்டது.குறித்த வீதியைத் திருத்துவதில் அரச அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் தொடர்ந்தும் அசமந்தப் போக்கினைக் கடைப்பிடித்து வருகின்றனர் என அவ்வூர் மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

சுழிபுரத்தில் உள்ள வெண்கரம் வள நிலையத்தில் மாணவர்களுக்கான வருடாந்த ஒன்றுகூடல் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.இதற்காக அராலி, பொன்னாலை, பாண்டவெட்டை – காட்டுப்புலம் பிரதேசங்களில் உள்ள வெண்கரம் படிப்பகங்களில் கல்வி பயிலும் நூற்றுக்கணக்கான மாணவர்கள் குறித்த பேருந்தில் ஏற்றி வரப்பட்டனர்.பேருந்து பாண்டவெட்டையில் இருந்து சுழிபுரம் நோக்கி வந்துகொண்டிருந்தபோது, வீதியால் சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்றுக்கு வழிவிட முற்பட்டபோது வீதியோரமாக – வயலுக்குள் – சரிந்து புதைந்தது.

வீதியோரமாக இருந்து பெரிய கல் ஒன்றுடன் வாகனத்தின் அடிப்பகுதி தொடுகையுற்றதால் ,வாகனம் வயலுக்குள் குடை சாயும் நிலையில் இருந்து தப்பித்துக்கொண்டது.இதன்போது மாணவர்கள் பெரும் பீதிக்குள்ளாகினர். எனினும், அவர்கள் வயலுக்கூடாக இறக்கப்பட்டு பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.பின்னர் அங்கிருந்து கால்நடையாக சுழிபுரம் வெண்கரம் வள நிலையத்திற்கு கூட்டிச்செல்லப்பட்டனர்.

மாணவர்களுடன் சென்ற பேருந்து விபத்துக்குள்ளாகியதைக் கேள்வியுற்ற பெற்றோர் அச்சமடைந்தவர்களாக அவ்விடத்தில் ஒன்றுகூடினர். எனினும் ,நிலமை சுமுகமாக்கப்பட்டது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்