போல்ட்டின் அபார பந்து வீச்சில் நியூஸிலாந்திடம் சரணடைந்தது இலங்கை !! 305 ஓட்டங்களினால் முன்னிலையில் நியூஸிலாந்து….!!

இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் நியூஸிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 305 ஓட்டங்களினால் முன்னிலையில் உள்ளது.நேற்று கிறிஸ்ட்சர்சில் ஆரம்பமான இப் போட்டியில் நியூஸிலாந்து அணி முதலாவது இன்னிங்ஸுக்காக சகல விக்கெட்டுக்களையும் இழந்து 178 ஓட்டங்களை பெற்றது. இதையடுத்து நேற்றைய தினமே தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை அணி நேற்றைய முதலாம் நாள் ஆட்ட நேர முடிவின்போது 4 விக்கெட்டுக்களை இழந்து 88 ஓட்டத்துடன் இருந்தது.ஆடுகளத்தில் மெத்தியூஸ் 27 ஓட்டத்துடனும், ரோஷான் சில்வா 15 ஒட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.இந் நிலையில் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று ஆரம்பிக்க, போல்டின் பந்தில் சரணடைந்த இலங்கை அணி வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.

அதன்படி ரோஷான் சில்வா 21 ஓட்டத்துடனும், நிரோஷன் திக்வெல்ல நான்கு ஓட்டத்துடனும் ஆட்டமிழந்து வெளியேறிய அதேவேளை அடுத்தடுத்து களமிறங்கிய தில்றூவான் பெரோ, சுரங்க லக்மால், துஷ்மந்த சாமர, மற்றும் லஹுரு குமார ஆகியோர் எதுவித ஓட்டங்களின்றி டக்கவுட் முறையில் ஆட்டமிழந்தனர்.இதனால் இலங்கை அணி 41 ஓவர்களை எதிர்கொண்டு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 104 ஓட்டத்துக்குள் சுருண்டது.பந்து வீச்சில் நியூஸிலாந்து அணி சார்பில் ட்ரென்ட் போல்ட் சிறப்பாக பந்து வீசி விக்கெட்டுக்களையும், டிம் சவுதி 3 விக்கெட்டுக்களையும், கொலின் டி கிராண்ட்ஹாம் ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.இதையடுத்து 74 ஓட்ட முன்னிலையுடன் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த நியூஸிலாந்து அணி இன்றைய இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவின்போது 2 விக்கெட்டுக்களை இழந்து 231 ஓட்டங்களை குவித்துள்ளது.

இதன் மூலம் நியூஸிலாந்து அணி 305 ஓட்டங்களினால் முன்னிலையில் உள்ளது. நியூஸிலாந்து அணி சார்பாக ஜீட் ரவல் 74 ஓட்டத்தையும், அணித் தலைவர் வில்லியம்சன் 48 ஓட்டத்தையும் பெற்ற அதேவேளை டோம் லேதன் 74 ஓட்டத்துடனும், ரோஸ் ரெய்லர் 25 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதுள்ளனர்.நாளை போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டமாகும்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்