குளிர்காலத்தில் தாக்கும் நோய்களும் – உணவுமுறையும்!

குளிர் காலத்தில், இதமான பருவநிலை இருந்தாலும், கூடவே தொற்று நோய்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். ஆரோக்கியமான உணவுமுறையை பின்பற்றினால் நோய் பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம்.தமிழகத்தில், நவம்பர் – ஜனவரி வரை குளிர், மழைக்காலம். இந்தப் பருவத்தில், இதமான பருவநிலை இருந்தாலும், கூடவே தொற்று நோய்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். குறிப்பாக, ‘வைரஸ்’ தொற்று முதியவர்களையும், குழந்தைகளையும் அதிகம் தாக்கும். இந்த காலகட்டத்தில் ஆரோக்கியமான உணவுமுறைகளை கடைபிடித்தால் நோய் வராமல் காத்து கொள்ளலாம்.தோல்: தோலில் வறட்சி, அரிப்பு, தலையில் பொடுகு அதிகம் இருக்கும். நீரிழிவு கோளாறு உள்ளவர்களுக்கு, அதிகமாக தோலின் நிறம் கறுப்பது, உதடுகளில் வெடிப்பு வரலாம். தினமும் தலையில் எண்ணெய் தேய்ப்பது, மிருதுவான சோப்பு, ஷாம்பு பயன்படுத்துவது, வெடிப்பு இருக்கும் இடத்தில் அவரவரின் தோலுக்கு ஏற்ற களிம்பு தடவுவது, வாரம் ஒருமுறை உடல் முழுவதும் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது வறட்சியைப் போக்கும்.

மூட்டு பிரச்சனைகள்: மூட்டுகளில் வலி, இறுக்கம், அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உணர்ச்சி அற்ற நிலை ஏற்படலாம். தவறாமல் நடைப்பயிற்சி, யோகா செய்யலாம். தேவைப்பட்டால் சரியான சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஜீரண மண்டல கோளாறுகள்: வீட்டில் சமைத்த உணவையே சாப்பிட வேண்டும். வெளியில் சுகாதாரமற்ற முறையில் தயார் செய்யும் உணவை சாப்பிட்டால், கிருமித் தொற்று ஏற்பட்டு, வாந்தி, பேதி, வயிற்றில் வலி வரலாம். குளிர்ந்த நிலையில், ‘பாக்டீரியா’ போன்ற, தொற்றுக் கிருமிகள் அதிகம் வளரும். அந்தந்த வேளை சமைத்த சூடான உணவை சாப்பிடுவது நல்லது. வெளியில் சாப்பிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால், நல்ல சுகாதாரமான இடங்களில் மட்டுமே உண்ண வேண்டும். கொதிக்க வைத்து, ஆற வைத்த நீரை குடிப்பது பாதுகாப்பானது.

இருமல், சளி தொல்லைகள்: குளிர் காலத்தில் மூக்கில் நீர் வடிவது, காய்ச்சல், இருமல், சளித் தொல்லைகள் வர வாய்ப்புகள் அதிகம். பாக்டீரியா, வைரஸ் போன்ற தொற்றுக் கிருமிகளால், இத்தொல்லை வரும். உடல் சூட்டை அதிகரிக்கும் உடை அணிவது, கூட்டம் அதிகம் உள்ள இடங்களுக்கு செல்லாமல் இருப்பது, ஆஸ்துமாவிற்கு, ‘இன்ஹேலர்’ பயன்படுத்துவது, ப்ளூ, நிமோனியா வராமல் தடுப்பு ஊசி போட்டுக் கொள்வது, தொல்லைகளைத் தவிர்க்க உதவும். தடுப்பு ஊசியால் எந்தப் பக்க விளைவுகளும் வராது.

நரம்பு பிரச்சனைகள்: குளிர் காலத்தில் பார்கின்சன்ஸ், பக்கவாதம் போன்ற பிரச்சனைகள் அதிகமாகும். தசைகளில் இறுக்கம், வலி வரும். எனவே, வீட்டிலேயே பிசியோதெரபி தினமும் செய்து கொள்வது பலன் தரும்.

பொதுவான உடல் பிரச்சனைகள்: குளிர் காலத்தில் பசி அதிகம் இருக்கும். உடல் பருமன் உள்ளவர்கள், எடைக்கு ஏற்ப கலோரி குறைந்த உணவாக சாப்பிட வேண்டும். தைராய்டு பிரச்சனை இருந்தால், அதிக குளிரை தாங்க முடியாது. தாகம் குறைவாக இருக்கும். சோர்வு, பலவீனம், நீர் வறட்சி ஏற்படும். வெங்காயம், பீட்ரூட், பச்சைக் காய்கறிகள் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். பழங்களில் மாதுளை, கொய்யா மிகவும் நல்லது. பாதாம், பிஸ்தா, முந்திரி போன்ற உலர் நட்ஸ், காய்கறி சூப் நிறைய சாப்பிடலாம். தாகம் இல்லை என்றாலும் போதுமான அளவு நீர் குடிக்க வேண்டும்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்