ஒமானில் பத்து வருட பணம் அனுப்பல் சேவையை கொண்டாடிய கொமர்ஷல் வங்கி..!

ஒமானில் இருந்து இலங்கைக்கு பணம் அனுப்பும் சேவையின் பத்தாண்டு கால நிறைவை அண்மையில் கொமர்ஷல் வங்கி கொண்டாடியது. மஸ்கட் நகரில் இந்நிகழ்வு இடம்பெற்றது.ஓமானில் உள்ள பணப்பரிமாற்ற நிலையங்களின் நிர்வாகிகள், அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் உள்ளடங்கலாக சம்பந்தப்பட்ட பல்வேறு தரப்பினரையும் இணைத்து இந்நிகழ்வு இடம்பெற்றது.

கிரவுண் பிளாஸா ஹோட்டலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஒமானில் உள்ள இலங்கைத் தூதுவர் எம்.கே. பத்மநாதன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். இலங்கையில் இருந்து வந்திருந்த பிரபல இசைக் கலைஞர்களின் இசை நிகழ்வு இவ்வைபவத்துக்கு மேலும் மெருகூட்டியது.

ஓமானில் தொழில்புரியும் இலங்கையர்கள் விரைவாகவும் பாதுகாப்பாகவும் பணத்தை அனுப்பிவைக்க தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளதன் மூலம் கொமர்ஷல் வங்கி அவர்களுக்கு பெரும் சேவை ஆற்றியுள்ளது எனபிரதம அதிதி அங்கு பேசும் போது கூறினார். இந்த முக்கிய நிகழ்வு பற்றிக் குறிப்பிட்ட கொமர்ஷல் வங்கியின் பிரதான செயற்பாட்டு அதிகாரி சனத் மனதுங்க ´கொமர்ஷல் வங்கிக்கு பணத்தை அனுப்பி வைக்கும் விடயத்தில் ஒமான் மத்திய கிழக்கில் உள்ள பிரதான ஒரு சந்தையாகும். இங்கு சுமார் 18000 இலங்கையர்கள் வாழ்கின்றனர்´ என்று கூறினார்.

வங்கி தொடர்ந்தும் சிறந்த சேவைகளை வழங்குவதற்கு இங்குள்ள புலம் பெயர் சமூகம் உட்பட தனது பங்காளிகள் ஊக்குவிப்பு அதிகாரிகள் என பல்வேறு சம்பந்தப்பட்ட தரப்போடு இணைந்து பணி யாற்றும். வாடிக்கையாளர்கள் வசதி கருதி வங்கியின் புதிய டிஜிட்டல் சேவைகளை வழங்கவும் வங்கி உத்தேசித்துள்ளது என்று அவர் மேலும் கூறினார்.

கொமர்ஷல் வங்கி ஒமானில் இருந்து டிராப்ட் சேவைகள் மூலமாகவே பணம் அனுப்பும் நடவடிக்கைகளைத் தொடங்கியது. 1995ல் லக்ஷ்மிதாஸ் தாரியாவெட் அன்ட் கம்பனி (LaxmidasThariaVed& Company) மூலம் இந்தச் சேவை தொடங்கப்பட்டது. அதன் பிறகு 2008ல் இலத்திரனியல் பணம் அனுப்பும் சேவைகளை வங்கி தொடங்கியது. ஓமானில் உள்ள முன்னணி பணப்பரிமாற்ற நிலையங்களில் ஒன்றான அல்ஜதீத் எக்ஸ்சேன்ஜ் எல்எல்சி (Al Jadeed Exchange LLC) உடனான பங்குடைமை மூலம் இது சாத்தியமானது. தனது முதலாவது ஊக்குவிப்பு அதிகாரியை அங்கு நியமனம் செய்து இந்நடவடிக்கை தொடங்கப்பட்டது. அதன் பிறகு இரண்டாவது ஊக்குவிப்பு அதிகாரி குளோபல் மணி எக்ஸ்சேன்ஜ் (Global Money Exchange Company) நிறுவனத்தில் நியமிக்கப்பட்டார். வங்கி அதன் அதிகாரிகள் இருவரை தற்போது ஒமானில் கொண்டுள்ளது. ஒமான் முழுவதும் ஒன்பது நிறுவனங்களுடன் இதற்காக வங்கிதற்போது கை கோர்த்துள்ளது.

2016 நவம்பரில் ஒமானுக்கும் இலங்கைக்கும் இடையிலான உடனடி இணைய வழி பணப்பரிமாற்றத்துக்காக மஸ்கட் வங்கியுடன் தொடர்பினை ஏற்படுத்திய முதலாவது இலங்கை வங்கியாகவும் கொமர்ஷல் வங்கி திகழ்கின்றது. இதன் மூலம் மஸ்கட் வங்கி வாடிக்கையாளர்கள் அந்த வங்கியின் கையடக்க தொலைபேசி பிரயோக முறையை பயன்படுத்தி இலங்கைக்கு பணத்தை அனுப்பி வைக்கும் தமது நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் முடியும். இந்த முறை ஊடாக வாரம் ஏழு நாட்களும் 24 மணி நேரமும் பணம் அனுப்பும் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.

வெளிநாடுகளில் இருந்து பணத்தை பெற்றுக் கொடுக்கும் விடயத்தில் இலங்கையில் மிக விரிவான சுறுசுறுப்பான சேவையை கொமர்ஷல் வங்கி வழங்கி வருகின்றது. வங்கியின் அதற்கே உரித்தான மிக நவீன இணைய வழிமேடையான பிரத்தியேகமான நஎக்ஸ்சேன்ஜ் மேடை, மணிகிறாம், றியா, எக்ஸ்பிரஸ் மணி றெமிட்டன்ஸ் சேவைகள் எனபலவழிகள் ஊடாக பணப்பரிமாற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். கொமர்ஷல் வங்கியில் கணக்கு ஒன்று இல்லாதவர்கள் கூட பணத்தை அனுப்பி வைக்க முடியும். கணிசமான அளவு இலங்கையர்கள் பணியாற்றும் உலகம் முழுவதும் உள்ள முக்கியமான பல இடங்களில் வங்கியின் ஊக்குவிப்பு அதிகாரிகள் உள்ளனர்.

வங்கியின் பிரதான சக்திகளில் ஒன்றாக நாடு முழுவதும் உள்ள அதன் 263 கிளைவலையமைப்பு காணப்படுகின்றது. அவற்றுள் பல பொது விடுமுறை தினங்களிலும் வர்த்தக வங்கி விடுமுறை தினங்களிலும் திறந்துள்ளன. 800 ATM வலையமைப்பையும் வங்கி கொண்டுள்ளது. கொமர்ஷல் வங்கிக்கு பணத்தை அனுப்பி வைப்பவர்களிடம் இருந்து பணத்தை பெற்றுக் கொள்பவர்கள் 60க்கு மேற்பட்ட விடுமுறை வங்கி நிலையங்கள், சுப்பர் மார்க்கெட் கரும பீடங்கள், அர்ப்பணிப்புடன் கூடிய வாடிக்கையாளர் அழைப்பு சேவை, பணம் கணக்கில் வைப்பிடப்பட்டதும் அதை அறிவிக்கும் குறுந்தகவல் சேவை என பல்வேறு சேவைகளையும் நன்மைகளையும் பெறமுடியும்.

தொடர்ந்து எட்டு வருடங்களாக உலகின் தலை சிறந்த ஆயிரம் வங்கிகள் வரிசையில் இடம் பெற்றுள்ள கொமர்ஷல் வங்கி 2016 மற்றும் 2017ம் ஆண்டு காலப்பகுதியில் பல்வேறு உள்ளுர் மற்றும் சர்வதேச விருதுகளை வென்றுள்ளது. 2018ன் முதல் ஆறு மாத காலத்தில் மட்டும் 16 சர்வதேச விருதுகளையும் கொமர்ஷல் வங்கி பெற்றுள்ளது. கொமர்ஷல் வங்கியின் வெளிநாட்டுச் செயற்பாடுகள் பங்களாதேஷில் 19 கிளைகளைக் கொண்டதாகவும், மியன்மாரில் யங்கூனில் பிரதிநிதிகள் அலுவலக செயற்பாடுகளைக் கொண்டதாகவும், நேய்பியுடோவில் நுண் நிதிக் கம்பனி ஒன்றைக் கொண்டதாகவும் காணப்படுகின்றது. மாலைதீவில் முதல் வரிசை வங்கி யொன்றை அதிக பட்ச பங்குரிமையோடு முழு அளவில் வங்கி திறந்துள்ளது. முழு அளவிலான தனது சொந்த பணப்பரிமாற்ற சேவைகளை இத்தாலியிலும் கொமர்ஷல் வங்கி கொண்டுள்ளது.

 

 

 

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்