நீண்ட காலமாக பெரும் இழுபறியில் காணப்பட்ட வவுனியா பழைய பேரூந்து நிலையப் பிரச்சனைக்குத் தீர்வு!

வவுனியாவில் நீண்ட காலமாக இழுபறியில் காணப்பட்ட பழைய பேரூந்து நிலையத்திற்கு பேரூந்துகள் சென்று வருவது தொடர்பான பிரச்சனைக்கு இன்று(வியாழக்கிழமை) வட மாகாண ஆளுனருடனான சந்திப்பில் தீர்வு காணப்பட்டுள்ளது.இன்று காலை வட மாகாண ஆளுனருடன் அவரது அலுவலகத்தில் வவுனியா வர்த்தகர் சங்கத்தினர், தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தினர் மற்றும் ஈழமக்கள் ஜனநாயகக்கட்சியின் வவுனியா அமைப்பாளர் ஆகியோர் வவுனியா பழைய பேரூந்து நிலையத்திற்கு உள்ளுர் சேவையில் ஈடுபடும் பேரூந்துகள் வந்து செல்ல வேண்டும் என்பது தொடர்பான கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தனர்.

இதன்போதே குறித்த பிரச்சனைக்கு தீர்வு எட்டப்பட்டுள்ளது. இந்தநிலையில், குறித்த கலந்துரையாடல் தொடர்பில் வவுனியா தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் எஸ். ரி. இராஜேஸ்வரன் ஊடகங்களிடம் இவ்வாறு கருத்து வெளியிட்டார்.

பழைய பேரூந்து நிலையத்தில் உள்ள வர்த்தகர்கள் எதிர்கொண்டுள்ள பாதிப்புகள் தொடர்பாக வர்த்தகர் சங்கத்தினால் ஆளுனரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டிருந்தது. இதன் காரணமாக பலர் வேலைவாய்ப்பிழந்துள்ளமை தொடர்பாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.

இதன்போது வட மாகாண ஆளுனர் இணைந்த நேர அட்டவணையின் பிரகாரம் உள்ளுர் சேவையில் ஈடுபடும் பேரூந்துகள், பழைய பேரூந்தது நிலையத்தின் வெளிப்புறம் அமைக்கப்பட்டுள்ள தரிப்பிடத்திற்கு சென்று 3 நிமிடங்கள் தரித்திருந்து செல்ல வேண்டும் என தெரிவித்துள்ளார்.

எனவே, நாளை முதல் அனைத்து உள்ளுர் பேரூந்துகளும் புதிய பேரூந்து நிலையத்தில் இருந்து பயணித்து பழைய பேரூந்து நிலையத்தில் வெளிப்புறமாக அமைக்கப்பட்ட தரிப்பிடத்தில் 3 நிமிடங்கள் தரித்து நின்று மீண்டும் கடைத்தெரு வழியாக இழுப்பையடியை வந்தடைந்து தமது சேவைகளை தொடரும்’ எனத் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்