யாழில் கட்டாக்காலிகளால் அதிகரிக்கும் வீதி விபத்துக்கள்…… அநியாயமாகப் பலியாகும் உயிர்கள்….!! கேட்பதற்கு எவருமே இல்லையா…?

யாழ் குடாநாட்டில் கடந்த சில வருடங்களாக  வீதி விபத்துச் சம்பவங்கள் வேகமாக அதிகரித்து வருகின்றன. இதனால், மனிதர்களின் பெறுமதிமிக்க உயிர்கள் இழக்கப் படுவது மட்டுமல்லாமல், பலரும் படுகாயமடைந்து, அவயங்களை இழந்து அங்கவீனர்களாகின்றனர்.இவ்வாறான வீதி விபத்துச் சம்பவங்களுக்கு அதிவேகமாக, கவலையீனமாக வாகனத்தை செலுத்துவதும், மதுபோதையுடன் வாகனங்களை செலுத்துவதுமே பிரதான காரணிகளாக அமைகின்றன.இவற்றை விட இன்னுமொரு முக்கிய காரணியாக, யாழ் குடாநாட்டில் வீதிகளில் கட்டாக்காலிகளாக சுற்றித் திரியும் விலங்குகளும் காணப்படுகின்றன.குறிப்பாக குடாநாட்டின் பிரதான வீதிகளில், பகல் வேளைகளிலும், இரவு நேரங்களிலும், நடு வீதியில் கேட்பதற்கு யாருமின்றி சுற்றித் திரியும் ஆடுகள், மாடுகள், நாய்கள், போன்ற மிருகங்களினால், வேகமாகச் செல்லும் வாகனங்கள் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்கு உள்ளாகும் நிகழ்வுகள் தினமும் இடம்பெறுகின்றன.அண்மைக்காலத்தில் குடாநாட்டில் இடம்பெறும் வீதி விபத்துக்களில் நூற்றுக்கணக்கானோர் அவயவங்களை இழந்துள்ளதுள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலையின் புள்ளிவிபரத் தரவுகளில் இருந்து தெரியவருகின்றது.

குறிப்பாக யாழ் நகரை அண்மித்த மாநகர சபைக்கு உட்பட்ட வீதிகளில், திடீரெனப் பிரவேசிக்கும் கட்டாக்காலிகளை கட்டுப்படுத்துவதற்கு, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமையே இதற்கு பிரதான காரணமாகும். இவற்றை விட, தமது வளர்ப்பு மிருகங்களை வீதியில் சுதந்திரமாக சுற்றித்திரிவதற்கு வீட்டு உரிமையாளர்கள் அனுமதிப்பதும் முக்கிய காரணமாகும்.இதற்காக இவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்காமல் இருக்கும் அரச அதிகாரிகள் இந்த விடயத்தில் குற்றமிழைத்தவர்களாகவே கருதப்படுவர்.

எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த விடயத்தில் கூடிய கவனமெடுத்து, யாழ் குடாநாட்டில் இடம்பெறும் வீதி விபத்துக்களை கட்டுப்படுத்துவதற்கு உடனடியாக முன்வர வேண்டுமென்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்