இந்து சமுத்திர சர்வதேச நாடுகளின் வருடாந்த மாநாடு ஜனாதிபதி தலைமையில் கொழும்பில் இன்று ஆரம்பம்…

இந்து சமுத்திர பிராந்திய நாடுகளுக்கிடையிலான சர்வதேச மாநாடு இன்று வியாழக்கிழமை அலரிமாளிகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஆரம்பமானது.இந்து சமுத்திரப் பிராந்தியத்திலுள்ள பலம்வாய்ந்த நாடுகள் கடற்பிராந்திய அடிப்படையில் பிற நாடுகளை ஆக்கிரமிக்காதவாறு அனைத்து இந்து சமுத்திர பிராந்திய நாடுகளுக்கிடையில் கலந்துரையாடல் மூலமான புரிந்துணர்வினை ஏற்படுத்திக் கொள்வதே இம் மாநாட்டின் பிரதான நோக்கமாகும்.

மேலும் “எமது எதிர்காலத்தை வரையறுத்தல்” எனும் தொனிப்பொருளில் அமெரிக்கா, சீனா, இந்தியா உள்ளடங்கலாக பல்வேறு இந்து சமுத்திரப் பிராந்திய நாடுகளின் பங்குபற்றுதலுடன் ஆரம்பமாகியுள்ள இந்த மாநாடானது எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறவுள்ளது. இம் மாநாட்டின் ஆரம்ப நிகழ்வில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் அடிப்படை குறிப்புரை நிகழ்த்தப்பட்டதுடன், சமுத்திர விவகாரங்களுக்கான ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தின் விசேட தூதுவர் பீற்றர் தொம்சன் சிறப்புரையாற்றினார்.அத்துடன் இந்திய பிரதி தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பங்கஜ் சரண், ஐக்கிய அமெரிக்க அரச திணைக்களத்தின் பிரதான பிரதி உதவிச் செயலாளர் எலிஸ் ஜீ.வெல்ஸ், சீன வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் எல்லைத் திணைக்களம் மற்றும் சமுத்திர விவகாரங்களுக்கான பணிப்பாளர் நாயகம் யி சியான்லியாங், தென்னாபிரிக்காவின் சர்வதேச உறவுகள் மற்றும் ஒத்துழைப்புக்கான பிரதிப் பணிப்பாளர் நாயகம் மற்றும் இந்து சமுத்திர விளிம்பு சங்கத்தின் சிரேஷ்ட உத்தியோகத்தர்களுக்கான குழுவின் தவிசாளர் அனில் சூக்லால் ஆகிய பல முக்கிய பிரதிநிதிகள் கலந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்