துலாம், விருச்சிகம் ,தனுசு ராசிக்காரர்களுக்கான குருப்பெயர்ச்சிப் பலன்கள் ஒரே பார்வையில்…..!!

துலாம்:

உங்கள் ராசிக்கு ஜன்ம குருவாக இருந்து ஓராண்டு காலம் குரு பகவான், உங்களைப் படாதபாடு படுத்திக்கொண்டிருந்தார். உங்கள் கஷ்டங்களை வெளியில் சொன்னால் மற்றவர்கள் ஏதாவது நினைப்பார்களோ என்று உங்கள் மனதுக்குள்ளேயே அடக்கி வைத்துக் கொண்டு துன்பப்பட்டீர்கள்.

அப்படிப்பட்ட நிலையை மாற்றும் விதமாக 4.10.18 முதல் 28.10.19 வரை இரண்டாம் வீடான தனஸ்தானத்தில் அமர்கிறார்.

குருப்பெயர்ச்சி

எப்போது பார்த்தாலும் கழுத்து வலி, கால் வலி எனப் பலவிதமான ஆரோக்கியத் தொந்தரவுகள். அதற்கு மருந்து, மாத்திரைகள் வாங்கி சாப்பிடப் போக, அதனாலும் பல பிரச்னைகள். இந்த நிலையெல்லாம் மாறி உங்கள் உடல் ஆரோக்கியம் மேம்படும். சோர்வு நீங்கி உற்சாகம் பெறுவீர்கள்.

கடந்த ஓராண்டாக நீங்கள் ஏதோ சொல்லப்போய் அதை மற்றவர்கள் வேறுவிதமாகப் புரிந்துகொண்டு சொற்குற்றம், பொருள் குற்றம் பார்த்தார்கள். இனி அந்த நிலைமை இருக்காது. இனி உங்களின் பேச்சு கம்பீரமாகவும் சமயோசிதமாகவும் இருக்கும்.

குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பிரிந்திருந்த கணவன் – மனைவி ஒன்று சேருவார்கள். அவர்களுக்குள் அன்பும் பாசப் பிணைப்பும் உருவாகும். சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். மனக்கசப்பின் காரணமாக விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள். முக்கியப் பிரமுகர்களின் நட்பு கிடைக்கும்.

உங்களுடன் இருப்பவர்களில் யார் யார் எப்படிப்பட்டவர்கள் என்பதைப் புரிந்துகொண்டு தெளிவான பாதையில் பயணிப்பீர்கள். விலையுயர்ந்த தங்க நகைகளை வாங்குவீர்கள். வாழ்க்கைத்துணைவழி உறவினர்களிடம் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். பிள்ளைகள் உங்களை நன்றாகப் புரிந்துகொண்டு, நீங்கள் சொல்வதைக் கேட்டு நடந்துகொள்வார்கள்.

குரு பகவான் 2 – ம் வீட்டுக்கு வருவதால், இப்போது இருக்கும் வேலையில் இருந்துகொண்டே மேல் வருமானத்துக்கு ஏற்பாடு செய்வீர்கள். பணம் பல வழிகளில் வரும். இதுநாள் வரை இருந்த பொருளாதார வறட்சி நீங்கி, எப்போதும் கையில் பணம் இருந்துகொண்டே இருக்கும்.மகளுக்கு வரன் அமையவில்லையே என்ற கவலை நீங்கி, நல்ல இடத்தில் வரன் அமையும்.

மகனுக்கு விரும்பிய கல்லூரியில் மேல் படிப்பில் இடம் கிடைக்கும். ஒரு சிலர் மேல் படிப்புக்காக வெளிநாடுகளுக்குச் செல்வார்கள்.ஆரம்பிக்கப்பட்டு பாதியிலேயே நின்று போயிருந்த வீடு கட்டும் வேலைகள் விறுவிறுவென நடைபெறும். போதுமான அளவு வங்கிக் கடனுதவியும் கிடைக்கும்.

வியாபாரிகளுக்கு, வியாபாரத்தில் இருந்து வந்த சுணக்கமான நிலைமை மாறி விடும். இரட்டிப்பு லாபம் உண்டு. புது முதலீடு செய்து வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். வேலையாள்கள் நல்லபடி ஒத்துழைப்பார்கள். புது வாடிக்கையாளர்களின் வருகையால் உற்சாகமடைவீர்கள். சிலர் சொந்த இடத்துக்குக் கடையை மாற்றி அழகுபடுத்துவீர்கள். விலகிச் சென்ற பங்குதாரர் மீண்டும் இணைவார்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்களைவிட வயதில் இளையவர்களிடமும், அனுபவம் குறைவானவர்களிடமும் பணிபுரிந்து அவமானங்களைச் சந்தித்து வந்தவர்களுக்கு, புதிய நிறுவனங்களில் வேலை அமையும். பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். உழைப்புக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். உயர் அதிகாரிகளின் மனநிலை அறிந்து செயல்படத் தொடங்குவீர்கள். அலுவலகத்தில் முக்கியத்துவம் கிடைக்கும். எதிர்பார்த்த சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்கும்.

மாணவர்களுக்கு, படிப்பில் இருந்த உற்சாகமின்மை விலகும். நினைவாற்றல் அதிகரிக்கும். படிப்பில் இருந்த அலட்சியப் போக்கு மாறும். தேர்வுகளில் கூடுதல் மதிப்பெண்கள் பெறுவீர்கள். சக மாணவர்களின் பாராட்டுகள் கிடைக்கும்.

கலைத்துறையினருக்கு, போட்டிகள் குறையும். தடைப்பட்ட வாய்ப்புகள் மறுபடியும் கிடைக்கும். மக்கள் மத்தியில் பிரபலமடைவீர்கள். வருமானம் உயரும்.

பரிகாரம்: விழுப்புரம் மாவட்டம் தீவனூர் என்னும் ஊரில் அருள்பாலித்துக்கொண்டிருக்கும் அருள்மிகு நெற்குத்தி விநாயகரை சங்கடஹர சதுர்த்தியன்று சென்று வழிபடுவது நன்மை தரும். இந்தக் குருப்பெயர்ச்சியில் தொட்டது துலங்கும். அடிப்படை வசதிகள் பெருகும்.

விருச்சிகம்: 

உங்கள் ராசிக்கு விரய ஸ்தானத்தில் அதாவது 12 – வது இடத்தில் இருந்துகொண்டு குருபகவான் உங்களுக்கு ஏகப்பட்ட இன்னல்களைக் கொடுத்து வந்தார்.

சில நாள்களில் உங்கள் தூக்கம்கூட கெட்டுப்போயிருக்கும். இப்போது குருபகவான், 4.10.2018 முதல் 28.10.2019 வரை உங்கள் ராசிக்குள் ஜன்ம குருவாக அமர்ந்திருக்கிறார்.

குருப்பெயர்ச்சி

4.10.18 முதல் 20.10.18 வரை குரு பகவான், தன் சாரமான விசாகம் நட்சத்திரத்திலும் 21.10.18 முதல் 19.12.18 வரை குரு பகவான் சனி பகவானின் அனுஷம் நட்சத்திர சாரத்தில் செல்கிறார்.

இந்த இரண்டு நட்சத்திரக்காரர்களுக்கும் இதுநாள் வரை இருந்த பாதிப்புகள் விலகி நல்லவிதமான மாறுதல்கள் நிகழும். கையில் ஓரளவு பணம் புழங்கத் தொடங்கும். தடங்கலான விஷயங்கள் நல்லவிதமாக நடக்கத்தொடங்கும்.

20.12.18 முதல் 12.3.19 வரை மற்றும் 9.8.19 முதல் 27.10.19 வரை குருபகவான் புதனின் நட்சத்திரமான கேட்டை நட்சத்திரத்தில் செல்கிறார். கேட்டை நட்சத்திரக்காரர்கள், இந்தக் காலகட்டத்தில் தங்களின் உடல்நலனில் கவனமாக இருப்பது நல்லது. உடற்சோர்வு, முன்கோபம், மன அழுத்தம் இதெல்லாம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

அதனால், அவர்கள் அவ்வப்போது உடற்பரிசோதனை, மருத்துவக் காப்பீடு செய்துகொள்வது நல்லது. தினமும் நடைப்பயிற்சி, உடற்பயிற்சி செய்யுங்கள்.

குருப்பெயர்ச்சி

13.03.2019 முதல் 18.05.2019 வரை குருபகவான் உங்கள் ராசிக்கு 2-ல் அதிசாரத்தில் செல்வதால் திடீர் பணவரவு உண்டு. அரசு வகையில் ஆதாயம் கிடைக்கும். சிலருக்கு வீடு, மனை அமையும். திருமண முயற்சிகள் சாதகமாகும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும்.

ஏற்கெனவே உங்களுக்கு ஏழரைச்சனி நடந்துகொண்டிருக்கிறது. கேதுவும் இரண்டாம் வீட்டுக்கு வரப்போகிறார். அதனால் உங்கள் வேலைகளை விரைவாகச் செய்து முடியுங்கள். எப்போதும் சுறுசுறுப்பாகவும், திட்டமிடலுடனும் காரியங்களைச் செய்யுங்கள். பிள்ளைகள் விஷயத்தில் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்துங்கள்.

கணவன், மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் மனதளவில் மிகவும் அன்பாகவே இருப்பார்கள். வார்த்தைகளாக வெளிவரும்போது அது கோபமாக வெளிப்படும். அன்பினாலும், அக்கறையினாலும்தான் அப்படிச் சொல்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.

எதிர் வீட்டுக்காரர்கள், அண்டை வீட்டுக்காரர்களிடம் வீண் வாக்குவாதங்கள் செய்யவேண்டாம் . எப்போதுமே விருச்சிக ராசிக்காரர்கள் கோபக்காரர்கள் என்பார்கள். அதனால் உங்களின் கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள். அடிக்கடி கோயில்களுக்குச் சென்றுவாருங்கள். தியானம் செய்யுங்கள்.

குரு உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டைப் பார்ப்பதால், குழந்தைப் பாக்கியம் சிலருக்குக் கிடைக்கும். பூர்வீகச் சொத்துப் பிரச்னைகள் தீரும்.

குரு 7-ம் வீட்டைப் பார்ப்பதால் தள்ளிப்போன திருமணம் கூடி வரும். மகளுக்கு நல்ல வரன் அமையும். கணவன் – மனைவிக்கிடையே சச்சரவு ஏற்பட்டாலும் பாசம் குறையாது.குரு 9 – ம் வீட்டைப் பார்ப்பதால் ஏற்கெனவே இருந்த அளவு இப்போது உங்களுக்குக் கஷ்டத்தைத் தரமாட்டார். ஓரளவு பணவரவு இருக்கும். பழைய நகைகளைக் கொடுத்து புதிய நகைகள் வாங்குவீர்கள்.

வியாபாரிகளைப் பொறுத்தவரை, சந்தை நிலவரத்தை அறிந்துகொண்டு முதலீடு செய்வீர்கள். பணியாளர்களைத் தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். வியாபாரம் லாபத்தை அள்ளிக் கொடுக்கும்

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நாளுக்கு நாள் வேலைப்பளு அதிகரிக்கும். சக ஊழியர்கள் சில நேரம் அன்பாகப் பேசுவார்கள். சில நேரம் அலட்சியமாக நடந்து கொள்வார்கள். இரண்டையும் நீங்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் நீங்கள் உங்கள் கடமையில் கவனமாக இருங்கள்.

மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. ஃபேஸ் புக், வாட்ஸ் அப் போன்ற பொழுதுபோக்குகளை அறவே தவிர்ப்பது நல்லது.

அறிவியல், கணிதம் ஆகிய பாடங்களில் அதிக கவனம் செலுத்துங்கள். கலைத்துறையினர் புதிதாக எதையும் செய்வோம் என்று இல்லாமல் வழக்கமான உங்கள் பாணியிலேயே உங்களின் படைப்புகளை உருவாக்குங்கள். வெற்றி நிச்சயம்.

இந்த குருப்பெயர்ச்சி பல வகைகளில் சிரமங்களையும், ஆரோக்கியக் குறைவையும் தந்தாலும், அனுபவ அறிவையும், தன்னைத் தானே உணரும் சக்தியையும் தரும்.

பரிகாரம்: சிவன் கோயில்களில் இருக்கும் சரபேஸ்வரரை ஏதேனும் ஒரு திங்கள்கிழமையில் நெய்தீபம் ஏற்றி வழிபட, சிரமங்கள் குறையும். பார்வையற்றவர்களுக்கு உதவுங்கள்.

தனுசு:

தனுசு ராசிக்கு அதிபதியாக குரு பகவான் இருப்பதால், எந்த வகையிலாவது விதிவிலக்கு இருந்தால் அதை வைத்து உங்களுக்கு நல்லது செய்யவே பார்ப்பார்.

குரு பகவான் உங்கள் ராசிக்கு 11 – ம் வீட்டில் இருந்துகொண்டு பல வித லாபங்களை உங்களுக்குத் தந்துகொண்டிருந்தார். இப்போது அவர் விரயஸ்தானமான 12- ம் வீட்டில் 4.10.18 முதல் 28.10.19 வரை இருந்து பலன் தரவிருக்கிறார். வேலைச்சுமையும் அலைச்சலும் அதிகரித்தபடி இருக்கும். செலவுகளும் அதிகரிக்கும்.

குருப்பெயர்ச்சி

தனுசு ராசிக்கு அதிபதியாக குரு பகவான் இருப்பதால், எந்த வகையிலாவது விதிவிலக்கு இருந்தால் அதை வைத்து உங்களுக்கு நல்லது செய்யவே பார்ப்பார்.

12-ம் வீட்டுக்கு குரு வருவதால் ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். பிரசித்தி பெற்ற புண்ணியஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். எப்போது பார்த்தாலும், பணத்தை நோக்கியே ஓடிக்கொண்டிருக்கிறோமே இது சரியானதுதானா? என்று நின்று நிதானித்து யோசிக்கத் தொடங்குவீர்கள்.

நாம் யார், நாம் எதற்காக இந்த பூமிக்கு வந்தோம் என்றெல்லாம் யோசிப்பீர்கள். தன்னை உணர்வீர்கள். மனதில் மெய்ஞ்ஞானம் வளரும்.

உங்களுக்கு ஏற்கெனவே ஏழரைச்சனி நடந்துகொண்டிருக்கிறது. வருகிற மார்ச் மாதம் கேதுவும் உங்கள் ராசியில் வந்து அமர்கிறார். எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசனை செய்து அதன் பிறகே செயல்படுங்கள். எதிலும் சிக்கனமாக இருங்கள்.

13.3.19 முதல் 18.5.19 வரை குரு பகவான் அதிசாரத்தில் ராசிக்குள்ளேயே கேதுவின் நட்சத்திரமான மூலம் நட்சத்திரத்தில் செல்வதால், வீண் விரயம், ஏமாற்றம், கை, கால், மூட்டு வலி, மனக்குழப்பம் வந்து நீங்கும். உங்கள் உடல் ஆரோக்கியத்திலும் கவனமாக இருங்கள்.

எவ்வளவு சிரமங்கள் வந்தாலும் உங்களுக்குள் எப்போதும் இருக்கும் உந்துசக்தி எப்படிச் செயல்படவேண்டும், எப்படி செயல்படக்கூடாது என்பதை உணர்த்திக்கொண்டே வழிநடத்தும்.

குரு 4 – ம் பார்வையாக சுகஸ்தானத்தைப் பார்ப்பதால், உங்களின் சுகத்துக்கு எந்தக் குறையும் வராது. தாயாரின் உடல்நிலை சீராகும். பழுதான வாகனத்தை மாற்றுவீர்கள். ஒரு சிலருக்கு இடமாற்றம் இருக்கும்.

குரு 6 – ம் வீட்டைப் பார்ப்பதால், உங்களுடன் பழகிக்கொண்டே உங்களுக்குக் கெடுதல் செய்யும் மறைமுக எதிரிகள் ஏற்படுவார்கள். அப்படிப்பட்டவர்களை இனங்கண்டு விலகிடுங்கள்.

குரு 8-ம் வீட்டைப் பார்ப்பதால், வீட்டைப் புதுப்பித்துக் கட்ட வங்கிக் கடன் கிடைக்கும்.இந்த குரு மாற்றம் இடமாற்றத்தையும் தர இருக்கிறது. வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் வேலை கிடைக்கும். ஒரு சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். வேறு சிலர் அங்கேயே செட்டிலாகியும் விடுவார்கள்.

குருப்பெயர்ச்சி:

பிள்ளைகள் பிடிவாதம் பிடித்தாலும், அவர்களிடம் கனிவாகவும் அன்பாகவும் நடந்துகொள்ளுங்கள். குடும்பத்தில் அவ்வப்போது சலசலப்புகள் ஏற்படும்.முடிந்த அளவுக்கு குடும்ப உறுப்பினர்களைத் தட்டிக்கொடுத்து அவர்களை வழிக்குக் கொண்டு வாருங்கள்.

வியாபாரத்தைப் பொறுத்தவரை 12- ம் வீடு அத்தனை சிறப்பானது கிடையாது. ஏற்றுமதி, இறக்குமதி வகையில் கவனம் செலுத்தினால், நல்ல லாபம் கிடைக்கும். உங்களிடம் பணி புரிபவர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள். மற்றபடி இந்த குருப்பெயர்ச்சியால் உங்களுக்கு லாபமும் இருக்காது நஷ்டமும் இருக்காது.

உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். புதிய தொழில்நுட்பங்களைக் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு உங்களுக்குக் கிடைக்கும். பதவி உயர்வையும் எதிர்பார்க்கலாம். பழைய சம்பள பாக்கியும் கைக்கு வரும்.

மாணவர்கள் படிப்பில் அக்கறை காட்டுங்கள். உங்களின் விளையாட்டுத்தனத்தை வகுப்பறையில் குறைத்துக்கொண்டு பாடங்களில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். கணிதம், அறிவியல் மற்றும் மொழிப் பாடங்களை ஒருமுறைக்கு இரண்டுமுறை எழுதிப்பாருங்கள்.

கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். உங்களின் திறமைக்கேற்ற படைப்புகள் வெளியாகும். மார்க்கெட்டில் உங்களுக்கு நல்ல பெயர் கிடைக்கும். இந்த குருப்பெயர்ச்சி நல்ல அனுபவத்தையும் புதிய நம்பிக்கையையும் உங்களுக்குத் தரும்.

பரிகாரம்: திருநெல்வேலி மாவட்டம் கோடகநல்லூர் என்னும் ஊரில் அருள்பாலிக்கும் கயிலாசநாதரை பிரதோஷ நாளில் சென்று வில்வ தளத்தால் அர்ச்சனை செய்து வழிபட, நன்மைகள் அதிகரிக்கும். மனவளர்ச்சி குன்றியவர்களுக்கு உதவுங்கள். மகிழ்ச்சி பிறக்கும்.

  • ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன் 

 

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்