எமது நாட்டின் தனித்துவமான உற்பத்தியின் சுவையை உலகறியச் செய்வோம்….யாழில் பிரதியமைச்சர் அங்கஜன் ….

கமநல சேவை திணைக்களத்திற்கான அடிக்கல்லை விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர, பிரதி அமைச்சர் அங்கஜன்  ஆகியோர் வைபவ ரீதியாக நாட்டி வைத்துள்ளனர்.கமநல திணைக்கள உதவி ஆணையாளர் நிசாந்தன் தலைமையில் நிருநெல்வேலியில் இன்றையதினம் குறித்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.29 மில்லியன் ரூபா நிதி விவசாய அமைச்சினால் நிர்மானப்பணிகளுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என தெரிய வந்துள்ளது.

இந்த வைபவத்தில் உரையாற்றிய விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர,

விவசாய பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதனின் வேண்டுகோளிற்கு அமைவாகவும், ஜனாதிபதியின் சிறந்த கொள்கை திட்டங்களை முன்னெடுக்கும் முகமாகவும் வடக்கு, கிழக்கிற்கு கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இம்முறை உற்பத்திக்கான உள்ளீடுகளையும், அறுவடை காலங்களின் பொழுது இறக்குமதிகளை கட்டுப்படுத்தி நிர்ணய வரிகளையும் ஏற்படுத்தி விவசாயிகளின் உற்பத்திகளை அதிகளவு கொள்வனவு செய்ய திட்டமிடப்பட்டிருப்பதாகவும் மகிந்த அமரவீர தனது உரையின் பொழுது குறிப்பிட்டிருந்தார்.

விவசாய பிரதி அமைச்சர் அங்கஜன்  கருத்து வெளியிடும் போது,

உற்பத்திக்கான செலவுகளை கட்டுப்படுத்தியும், உற்பத்திக்கான உரிய கொள்வனவையும், அதற்கான நிர்ணய விலைகளை வழங்குவதன் மூலம் உற்பத்திக்கான செலவை, வரவுகள் ஈடு செய்வதன் மூலம் விவசாய செய்கையாளர்களையும் அதிகப்படுத்தலாம். அதன் மூலம் இளைஞர்களும் விவசாய துறையை நோக்கி நம்பிக்கையுடன் வரவழைத்துக்கொள்ளலாம்.மேலும் ஏனைய துறைகளை போன்று விவசாயத்தின் ஊடாகவும் அதிகம் சம்பாதிப்பதோடு, பகுதி நேரமாகவும் செய்கை பண்ணக்கூடிய சூழல் உருவாகும் எனவும் அவ்வாறு உருவாக்கவே சிறந்த கொள்கைகள் உருவாக்கப்பட்டு, நவீன விவசாய செயல்திட்டங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறியிருந்தார். விவசாயியின் மகனாக இருந்து எமது நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் விவசாய துறைக்கு வரலாற்றில் அதிகளவிலான நிதியையும் ஒதுக்கீடு செய்திருப்பதாக குறிப்பிட்டார்.

மீண்டும் ஒரு பொற்கால யுகம் ஆரம்பமாகியிருப்பதை உழவர்கள் மனதளவில் உணர்ந்திருப்பதை வெளிப்படையாக உணரக்கூடியதாக இருப்பதாகவும் தெரிவித்தார்.வரும் காலங்களில் நிரந்தர விலைகளையும், மேலும் சில பயிர்களுக்கு காப்புறுதியை பெற்றுக்கொடுப்பதற்கு உத்தேசித்திருப்பதாகவும் சுட்டிக்காட்டியிருந்தார்.

கடந்த காலங்களில் காணப்பட்ட வலயங்களை மேற்கோள்காட்டி, இன்று இந்த நாட்டில் உற்பத்தி வலையங்கள், ஏற்றுமதி வலையங்கள், ஊக்குவிப்பு வலையங்கள், கமத்தொழில் அமைச்சினால் விவசாயிகளுக்காகவும் நாட்டு மக்களுக்காகவும் உருவாக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

எமது நாட்டின் தனித்துவமான உற்பத்திகளை ஏற்றுமதி செய்வதன் ஊடாக இலாபத்தையும், உற்பத்தியின் சுவையை உலகளவில் பெற்றுக்கொள்ளலாம் எனவும் பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்