லட்சக்கணக்கான பக்தர்களின் அரோகரா கோஷங்களுடன் மிகச் சிறப்பாக இடம்பெற்ற நல்லைக் கந்தனின் தீர்த்தோற்சவம்

வரலாற்றுப் புகழ்பெற்ற நல்லூர் கந்தசுவாமி ஆலய மகோற்சவத்தின் இறுதிநாள் நிகழ்வான தீர்த்தத் திருவிழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை வெகுசிறப்பாக நடைபெற்றது.

காலை 6 மணிக்கு இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளைத் தொடர்ந்து வேல்பெருமான், வள்ளி, தெய்வானை, பிள்ளையார், அம்மன் ஆகியோர் ஆலய வளாகத்திலுள்ள தீர்த்தக் கேணியில் தீர்த்தமாடினார். அதன் பின்னர் வெளிவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

இன்றைய தீர்த்த திருவிழாவின் போதும் வேல்பெருமான் தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளினார்.இன்றைய தீர்த்தத் திருவிழாவுக்கு நாட்டின் பல பாகங்களிலிருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டிருந்தனர்.அதேவேளை ஆயிரக்கணக்கான பக்தர்கள் அங்கப் பிரதட்சணம் செய்தும், நூற்றுக்கணக்கானவர்கள் காவடிகள் எடுத்தும்,கற்பூர சட்டிகள் ஏந்தியும் முருகப்பெருமானை வழிபட்டனர்.

தொடர்ச்சியாக யாழ். மாவட்டத்தின் பல பாகங்களிலும் இருந்து பெருமளவான பக்தர்கள் தமது நேர்த்திக் கடன்களை செலுத்துவதற்காக காவடி எடுத்து வருகின்றமையைக் காண முடிகின்றது.

இன்று நாள் முழுவதும் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெறவுள்ளதோடு, இன்று மாலை கொடியிறக்கம் இடம்பெறும். அதன் பின்னர் முருகப் பெருமான் வெளிவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.

அதனைத் தொடர்ந்து சண்டேஸ்வரர் உற்சவம் இடம்பெறும். அத்துடன் 25 நாட்களைக் கொண்ட மகோற்சவம் இனிதே நிறைவடையும்.அத்தோடு, நாளை மாலை முருகப்பெருமானுக்கு திருக்கல்யாணம் (பூங்காவனத் திருவிழா) இடம்பெறவுள்ளமை சிறப்பம்சமாகும்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்