பல லட்சக்கணக்கான அடியவர்களின் அரோகரா கோஷங்களுக்கு மத்தியில் தேரேறி பவனி வந்த நல்லைக்கந்தன்….!!

வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்.நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் தேர்த்திருவிழா நேற்று சனிக்கிழமை(08) சிறப்பாகவும், பக்திபூர்வமாகவும் இடம்பெற்றது.நேற்று அதிகாலை மூலஸ்தானத்தில் எழுந்தருளியுள்ள வேற்பெருமானுக்கு விசேட அபிஷேக பூசை வழிபாடுகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து காலை -06 மணியளவில் வசந்தமண்டபப் பூசைகள் இடம்பெற்றது.

அதனைத் தொடர்ந்து காலை-07.15 மணியளவில் ஆறுமுகப் பெருமான் வள்ளிநாச்சியார், தெய்வயானை அம்பாள் சமேதரராய் உள்வீதியில் எழுந்தருளிச் சித்திரத் தேருக்கு எழுந்தருளினார்.சிதறு தேங்காய்கள் உடைக்கப்பட்டதைத் தொடர்ந்து, விசேட தீபாராதனை இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து பல இலட்சக்கணக்கான அடியவர்கள் புடை சூழ, அடியவர்களின் அரோகராக் கோஷத்தின் மத்தியில் காலை- 07.15 மணியளவில் சித்திரத் தேர்ப் பவனி ஆரம்பமாகியது. சித்திரத் தேரின் முன்னே காண்டாமணி ஓசை ஒலிக்க ஆண் அடியவர்கள் சைவபாரம்பரிய நெறிமுறைகளுக்கமைய சித்திரத் தேரின் வடம் தொட்டிழுத்த காட்சி அற்புதமானது.சித்திரத்தேர் பவனி வரும் வேளையில் ஆலயத்தைச் சூழவுள்ள பகுதிகளில் அடியவர்கள் பூரண கும்பம் வைத்து, மங்கள விளக்கேற்றிச் சித்திரத் தேரைப் பக்திபூர்வமாக வரவேற்றனர்.

தேர் வீதி வலம் வரும் வேளையில் நயினாதீவு மற்றும் வெளிமாவட்டங்களிருந்தும் பாதயாத்திரையாக வருகை தந்திருந்த பஜனைக்குழுவினரும், அடியவர்களும் பாடியும், ஆடியும், அழுதும், தொழுதும், வழிபட்ட காட்சி மனதை உருக்குவதாக அமைந்திருந்தது. சித்திரத் தேர் முற்பகல்-9:45 மணியளவில் இருப்பிடத்தை வந்தடைந்தது. அதனைத் தொடர்ந்து நல்லூர்க் கந்தசுவாமி திருவூஞ்சற் பாட்டு பண்ணுடன் ஓதப்பட்டது.தொடர்ந்து முற்பகல்-10.30 மணியளவில் ஆறுமுகப்பெருமான் வள்ளி, தெய்வயானை சமேதரராகப் பச்சை சாத்தப்பட்டுச் சித்திரத் தேரிலிருந்து அவரோகணம் செய்தார்.

நல்லூர்க் கந்தசுவாமி தேர்த் திருவிழாவைக் காண்பதற்காக யாழ். குடாநாட்டிலிருந்து மாத்திரமல்லாமல், வெளிமாவட்டங்களிலிருந்தும்இ புலம்பெயர் தேசங்களிலிருந்தும் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாது பல இலட்சக்கணக்கான அடியவர்கள் ஆலய வீதியில் திரண்டிருந்தனர்.

தேர்த் திருவிழாவை முன்னிட்டுப் பல நூற்றுக் கணக்கான ஆண் அடியவர்கள் அங்கப் பிரதட்சணம் செய்தும் செதில் காவடிகள் பறவைக் காவடிகள் எடுத்தும் பெண் அடியவர்கள் அடியளித்தும் பாற்காவடிகள் எடுத்தும் தமது நேர்த்திக் கடன்களை நேர்த்தியுடன் நிறைவேற்றிய காட்சி கண்கொள்ளாக் காட்சியாக அமைந்திருந்தது.

தேர்த் திருவிழாவில் கலந்து கொண்ட பக்தர்களின் களைப்பைப் போக்குவதற்காக ஆலயத்தைச் சூழவுள்ள பகுதிகளிலும், யாழ். நகர்ப்பகுதி, கந்தர்மடம், திருநெல்வேலி,கல்வியங்காடு இருபாலை கோண்டாவில் உரும்பிராய்இஉள்ளிட்ட குடாநாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பல எண்ணிக்கையான தாகசாந்தி நிலையங்கள் அமைக்கப்பட்டுப் பல வகையான பானங்களும் பரிமாறப்பட்டன.ஆலயத்தைச் சூழவுள்ள பல்வேறு மடங்களிலும், மண்டபங்களிலும் பக்தர்களுக்கு அன்னதானம் பரிமாறப்பட்டன.தேர்த் திருவிழாவையொட்டிப் பெருமளவான பொலிஸார் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்தனர்.

திருட்டைக் கட்டுப்படுத்தும் நோக்கில் ஆலயச் சுற்றாடலில் யாழ்.மாநகரசபையினரால் கண்காணிப்புக் கமராக்கள் பொருத்தப்பட்டிருந்ததுடன், கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டிருந்தது.

பக்தர்களை ஒழுங்கு படுத்தும் பணியில் பொலிஸார், சாரணர்கள், ஆலயத் தொண்டர்கள், அகில இலங்கை சைவமகாசபையினர் உள்ளிட்டோர் ஈடுபட்டிருந்தனர்.

தேர்த் திருவிழா நிகழ்வுகளை இலங்கையிலுள்ள பல்வேறு தொலைக்காட்சி வானொலி, இணையத்தள சேவைகளும், சர்வதேச ஊடகங்களும் நேரடி ஒலி ஒளிபரப்புச் செய்திருந்தன.நல்லூர்க் கந்தன் தேர்த் திருவிழாவை முன்னிட்டுப் பக்தர்களின் நன்மை கருதி இலங்கை போக்குவரத்துச் சபையின் யாழ்.சாலை, காரைநகர் மற்றும் பருத்தித்துறைச் சாலைகளினால் பேருந்துகள் விசேட சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தன.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்