அடைக்கலம் கொடுத்த மாதாவின் ஆலயத்தை நோக்கி படையெடுக்கும் லட்சக்கணக்கான பக்தர்கள்…..!! மட்டு நகரில் நடக்கும் அதிசயம்…!

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சிறப்பு பெற்ற ஆயித்தியமலை புனித சதாசகாய மாதாவின் 64ஆவது ஆண்டு திருவிழா நாளைய தினம் இடம்பெறவுள்ளது.இதனை முன்னிட்டு மட்டக்களப்பு உட்பட நாட்டின் பல பகுதிகளை சேர்ந்த பெருந்திரளான பக்தர்கள் ஆலயத்தை நோக்கி பாதயாத்திரையினை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், பெருந்திரளான பக்தர்கள் இன்று ஆலயத்தை வந்தடைந்துள்ளனர். யுத்தம் இடம்பெற்ற காலத்தில் பலருக்கும் அடைக்கலம் கொடுத்த இந்த ஆலயத்தின் கொடியேற்றம் கடந்த 24ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.இதனையடுத்து பக்தர்கள் தமது பாதயாத்திரையினை ஆரம்பித்திருந்தனர்.

அதன்படி வருடம் தோறும் மட்டக்களப்பு புனித மரியாள் பேராலயத்திலிருந்து மேற்கொள்ளப்படும் பாதயாத்திரை இம்முறையும் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த யாத்திரையானது செங்கலடி சந்தியிலிருந்து கரடியனாறு ஊடாக ஆயித்தியமலைக்கு இருவழியாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.யாத்திரையில் கலந்து கொள்வதற்கான பாதுகாப்பு மற்றும் தாகசாந்தி ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.அதேவேளை இன்று மாலை வெஸ்பர் ஆராதனை மேற்கொள்ளப்படவுள்ள நிலையில் ஆலய வளவில் இன்று காலை முதல் பொலிஸார் ஆயுதம் தரிக்காது பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இன, மத பேதமின்றி, வடக்கு கிழக்கு மட்டுமில்லாது தென்பகுதிகளிலிருந்தும் இந்த ஆலயத்திற்கு வரும் மக்கள் தம்முடைய நேர்த்திக்கடன்களுக்கு பலன் கிடைப்பதாகவும், அன்னையால் பல அற்புதங்கள் நிகழ்த்தப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை நாளைய தினம் திருவிழா திருப்பலியை மட்டக்களப்பு ஆயர் ஜோசப் பொன்னையா ஆண்டகை தலைமையில் பல குருமார்கள் இணைந்து ஒப்புக் கொடுக்கவுள்ளனர்.நாளைய தினம் காலை கூட்டுத் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு, பூசை ஆராதனைகளை தொடர்ந்து கொடியிறக்கத்துடன் திருவிழா நிறைவுபெறவுள்ளது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்