வரலாற்றுச் சிறப்புமிக்க செல்வச் சந்நிதியில் பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்த முருக பக்தன்…. !!(வைரலாகும் காணொளி..)

வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ். வடமராட்சி தொண்டைமானாறு ஸ்ரீ செல்வச் சந்நிதி முருகன் ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழாவின் தேர்த்திருவிழா நேற்று முன்தினம் சனிக்கிழமை(25) காலை பக்திபூர்வமாக இடம்பெற்றது.தேர்த் திருவிழாவை முன்னிட்டுப் பெருமளவான ஆண் அடியவர்கள் அங்கப் பிரதஸ்டை, தூக்குக் காவடிகள், பறவைக்காவடிகள் மற்றும் செதில் காவடிகள் என்பன எடுத்தும், பெண் அடியவர்கள் அடியடித்தும், பாற்காவடிகள் எடுத்தும் தமது நேர்த்திக் கடன்களை நேர்த்தியுடன் நிறைவு செய்தார்கள்.

இதன்போது சந்நிதி முருகனின் தீவிர பக்தரான இளம் குடும்பஸ்தரொருவர் தனது உடல் முழுவதும் வேல் மற்றும் சூலம் குற்றித் தூக்குக் காவடி எடுத்த காட்சி தேர்த் திருவிழாவில் கலந்து கொண்ட பல்லாயிரக்கணக்கான பக்கதர்களை மெய்சிலிர்க்க வைத்தது.அங்கு கூடியிருந்த பலரும் தமது கைத்தொலைபேசிகளில் குறித்த காட்சிகளைப் பதிவு செய்தனர்.அண்மையில் மீளக் குடியமர அனுமதிக்கப்பட்ட யாழ்.பலாலி தெற்கிலிருந்து சுமார் எட்டுக் கிலோமீற்றருக்கு மேல் பயணித்து குறித்த தூக்குக் காவடி ஆலயத்தை வந்தடைந்தது.தூக்குக் காவடி எடுத்து வந்தவர் தனது உடலின் ஒன்பது வரையான இடங்களில் பெரிய வேல் மற்றும் சூலத்தால் குற்றியிருந்தார்.

குறித்த இளம் குடும்பஸ்தர் இம்முறை பத்தாவது வருடமாக சந்நிதி முருகன் தேர்த் திருவிழாவில் தூக்குக் காவடி எடுத்து நேர்த்திக் கடன் செய்வதாகவும், வருடம் தோறும் அவர் வித்தியாசமான முறைகளில் நேர்த்திக் கடன் செய்வதை வழக்கமாகக் கொண்டிருப்பதாகவும் அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.உடல் முழுவதும் குற்றிய நிலையில் மேற்படி குடும்பஸ்தர் காவடி எடுத்த போதிலும் அவர் தனது முகத்தில் சாந்தமே உருவாகத் தூக்குக் காவடி எடுத்த காட்சி அங்கு கூடியிருந்த பக்தர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

சந்நிதி முருகன் வாசலில் தூக்குக் காவடி இறக்கப்பட்ட பின்னர் சாதாரணமாக நடந்து சென்ற அவர் சந்நிதி முருகன் ஆலய முன்மண்டபத்தில் காவடி ஆடி வழிபட்டார்.உண்மையான பக்தனின் பக்தி வைராக்கியத்தை அளவிட முடியாததற்கு எந்த அளவுகோலும் இல்லை. இதற்குச் சிறந்த உதாரணம் மேற்படி பக்தன் தக்க சான்று.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்