வரலாற்றுச் சிறப்புமிக்க தெல்லிப்பளை துர்க்காதேவி தேவஸ்தான வருடாந்த மஹோற்சவப் பெருவிழா கொடியேற்றத்துடன் இன்று ஆரம்பம் .

பிரசித்திபெற்ற யாழ். தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான வருடாந்த மஹோற்சவப் பெருவிழா இன்று திங்கட்கிழமை(13) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளதாகத் தேவஸ்தானத் தலைவர் செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு.திருமுருகன் தெரிவித்துள்ளார் .

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கும் போது;

12 தினங்கள் இடம்பெறவுள்ள இவ்வாலய வரலாற்றுப் பெருந்திருவிழாவில் ஏராளமான அடியவர்கள் ஆண்டுதோறும் கலந்து கொண்டு சிறப்பிப்பது வழக்கம். உள்நாட்டிலிருந்து மாத்திரமல்லாமல் புலம்பெயர் தேசங்களிலிருந்தும் பெருந்தொகையான பக்தர்கள் துர்க்கையம்பாளின் மஹோற்சவத்தில் கலந்து கொண்டு நேர்த்தி வைத்து வழிபாடு செய்வார்கள்.

இன்று அதிகாலை-05 மணிக்குத் திருப்பள்ளி எழுச்சியுடன் தேவஸ்தான திருக்கதவு திறக்கப்பட்டு அதிகாலை-05.30 மணிக்கு காலைப் பூசை இடம்பெறும்.அம்பாளின் வருடாந்தக் கொடியேற்றத்திற்கான வசந்தமண்டபப் பூசை காலை-08 மணிக்கு ஆரம்பாமாகும். அதனைத் தொடர்ந்து முற்பகல்-10 மணிக்கு கொடியேறி அம்பாள் அருள்பாலிப்பாள்.

தொடர்ந்தும் காலை, மாலை உற்சவங்களாக நடைபெறவுள்ள ஆலய மஹோற்சவ காலப் பகுதியில் அம்பாள் எழுந்தருளிப் பக்தர்களுக்குத் திருக்காட்சி வழங்குவார்.

இவ்வாலய மஹோற்சவத்தில் எதிர்வரும்-18 ஆம் திகதி சனிக்கிழமை மாலை-06 மணிக்குத் திருமஞ்சத் திருவிழாவும், 21 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பிற்பகல்-02 மணியளவில் வேட்டைத் திருவிழாவும், அன்றைய தினம் மாலை-06 மணியளவில் கைலாச வாகனத் திருவிழாவும், 22 ஆம் திகதி புதன்கிழமை மாலை-04 மணியளவில் சப்பறத் திருவிழாவும், 23 ஆம் திகதி வியாழக்கிழமை காலை-09 மணிக்குத் தேர்த் திருவிழாவும், மறுநாள் வெள்ளிக்கிழமை ஆவணித் திருவோண நன்னாளில் காலை-08.30 மணிக்கு ஆலயத்திற்கு முன்பாகவுள்ள துர்க்கா புஷ்கரணி தீர்த்தக் கேணியில் தீர்த்தோற்சவமும், அன்றைய தினம் மாலை-06 மணிக்கு கொடியிறக்க உற்சவமும் இடம்பெறும் எனவும் தேவஸ்தானத் தலைவர் செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு.திருமுருகன் மேலும் தெரிவித்துள்ளார் .

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்