2020ல் நடைபெறும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கான கல்வியியல் ஆராய்ச்சிக் கருத்தரங்கிற்கு தெரிவான ஈழத்தமிழன்..!!

32 வது கோடைகால ஒலிம்பிக் போட்டிகள் 2020ஆம் ஆண்டில் ஜப்பான் தலைநகரான டோக்கியோவில் நடைபெறவிருப்பதற்கு முன்னோடியாக இடம்பெறவுள்ள ஒலிம்பிக் கல்வியல் மற்றும் விளையாட்டு முகாமைத்துவ ஆராய்ச்சிக் கருத்தரங்கில் இலங்கையைப் பிரதிநிதித்துப்படுத்தி சிவராஜா கோபிநாத் அவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார் . மேற்படி ஆராய்ச்சிக் கருத்தரங்கானது எதிர்வரும் 26 ஆம் திகதியிலிருந்து செப்ரெம்பர் 08ஆம் திகதி வரை கனோயோ மற்றும் டோக்கியோ ஆகிய இரு நகரங்களில் இடம்பெறவுள்ளது.மேற்படி ஆராய்ச்சிக் கருத்தரங்கிற்காக விளையாட்டு முகாமைத்துவம் மற்றும் ஒலிம்பிக் கல்விசார் 13 இளம் ஆராய்ச்சியாளர்கள் உலகளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.அந்த வகையில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி கோபிநாத் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கோபிநாத் தற்சமயம் ஆசியாவின் விளையாட்டுக் கற்கைகளின் முன்னிலைப் பல்கலைக்கழகமாகத் திகழும் தென்கொரியாவின் சியோல் விளையாட்டுப் பல்கலைக்கழகத்தில், விளையாட்டு, முகாமைத்துவ முதுநிலை கற்கை நெறியை கற்றுவருவதோடு,  இலங்கை தேசிய ஒலிம்பிக் குழுவின் தேசிய கற்கைகள் பணிப்பாளராகவும் கடமையாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.இவரைத் தவிர, ஏனைய 12 பேரும் பங்களாதேஷ், கிரீஸ், குவாட்டமாலா, கொரியா, மசிடோனியா, மலேஷியா, பிலிப்பைன்ஸ், தாய்வான், மற்றும் தாய்லாந்து, ஆகிய ஒன்பது நாடுகளிலிருந்து தெரிவு செய்யப்பட்டுள்ளனர். கோபிநாத் இவ்வருடம் தென்கொரியாவின் பியெங்சாங் நகரில் நடைபெற்ற 2018 ஆம் ஆண்டிற்கான குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் தொடர்பாக ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றார்.அத்துடன், இவர் ஏற்கனவே பியெங்சாங் விளையாட்டுத் திடலினை பேணிப் பாதுகாப்பதற்கான மரபுத் திட்டமொன்றினையும் அந்நாட்டு ஜனாதிபதிக்கு முன்மொழிந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இவ் ஆராய்சிக் கருத்தரங்கானது,  ஜப்பானிய கலை, கலாச்சார, விளையாட்டு விஞ்ஞான தொழில்நுட்ப அமைச்சினால் ‘நாளைக்கான விளையாட்டு’ எனும் தொனிப்பொருளில் உடற்பயிற்சி மற்றும் விளையாட்டிற்கான தேசிய நிறுவனத்தினால் நடத்தப்படவுள்ளது.

இக்கருத்தரங்கின் முக்கிய நோக்கமாக ஒலிம்பிக் கல்வியியலுக்கு அப்பால், விளையாட்டு, செயற்திறன், விஞ்ஞான மற்றும் விளையாட்டு முகாமைத்துவ ஆராய்ச்சிகளை அடுத்த சந்ததியினருக்கு ஊக்குவிப்பதாகும். இக்கருத்தரங்கிற்கு ஜப்பான் மற்றும் உலகின் தலைசிறந்த 25 விளையாட்டு ஆய்வுத்துறை சார் பேராசிரியர்கள் வளவாளர்களாக கலந்து கொள்ளவுள்ளமை சிறப்பம்சமாகும்.

 

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்