2022 ல் 22வது உலகக் கிண்ண காற்பந்து தொடரை பிரமாண்டமாக நடத்த தயாராகும் கட்டார்!!

21ஆவது உலகக்கிண்ண கால்பந்து தொடரின் கொண்டாட்டங்கள் இன்னமும் நிறைவு பெறாத நிலையில், 22ஆவது பிஃபா உலகக் கிண்ண கால்பந்து தொடரின் அறிவிப்பு வெளியாகி இரசிகர்களை பூரிப்படைய செய்துள்ளது.நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் உலகக் கிண்ண கால்பந்து தொடரின் அடுத்த தொடரை நடத்தும் பொறுப்பை, கட்டாரிடம் ஒப்படைக்கும் நிகழ்வு ரஷ்ய ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், கட்டார் நாட்டு அமீர் ஷேக் தமிம் பின் ஹமாத் அல்–தானி, பிஃபா தலைவர் ஜியானி இன்பான்டினோ ஆகியோர் பங்கேற்றனர்.இதில் ரஷ்ய ஜனாதிபதி புடின் கட்டாரின் அமீர் ஷேக் தமிம் பின் ஹமாத் அல்–தானியிடம் கால்பந்து ஒன்றை வழங்கி, அடுத்த உலகக் கிண்ண தொடரை நடத்துவதற்கான பொறுப்பை உத்தியோகபூர்வமாக ஒப்படைத்தார்.இதன்படி தொடரை நடத்துவதற்கான முழு ஏற்பாடுகளை கட்டார் இனி மேற்கொள்ளவுள்ளது. அத்துடன் 2022ஆம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டிகள் 12 மைதானங்களில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.மத்திய கிழக்கு நாடொன்றில் முதல்முறையாக அரங்கேறும் இந்த உலகக் கிண்ணப் தொடர் வழக்கமான மே, ஜூன், ஜூலை மாதங்களில் இல்லாமல் நவம்பர், டிசம்பர் மாதங்களில் நடைபெறவுள்ளமை சிறப்பம்சமாகும்.மே, ஜூன், ஜூலை காலப்பகுதியில் கட்டாரில் வெயில் கடுமையாக இருக்கும் என்பதால், கால்பந்து போட்டிகள் நவம்பர் டிசம்பர் மாதங்களில் நடத்தப்படுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதுஇதில் 8 மைதானங்கள் புதிதாக அமைக்கவும் ஏனைய 4 மைதானங்களை புனர்நிர்மாணிக்கவும் ஏற்பாட்டுக் குழுவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். அத்துடன், இந்த அனைத்து மைதானங்களும் கட்டாரில் நிலவுகின்ற அதிக வெப்பத்தை கட்டுப்படுத்தும் வகையில் நிர்மானிக்கப்படவுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.இந்த நிலையில், உலகக் கிண்ண கால்பந்து தொடருக்கா மாத்திரம் கட்டார் அரசாங்கத்தினால் 5 பில்லியன் பவுண்கள் செலவிட்டுள்ளது. அத்துடன், அனைத்து விளையாட்டு மைதானங்களினதும் நிர்மாணப் பணிகளையும் எதிர்வரும் 2021ஆம் ஆண்டிற்குள் நிறைவு செய்யவும் போட்டி ஏற்பாட்டுக் குழுவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.இதேநேரம், 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 21ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 18ஆம் திகதி வரை உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகள் நடைபெற உள்ளன என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 32 அணிகள் பங்கேற்கும் கடைசி உலகக் கிண்ணத் தொடரை கட்டார் நடத்த உள்ளது.இதேவேளை, 2026ஆம் ஆண்டு அமெரிக்கா, கனடா, மற்றும் மெக்ஸிகோ ஆகிய நாடுகள் இணைந்து நடாத்தவுள்ள உலகக் கிண்ண கால்பந்து தொடரில் அணிகளின் பங்கேற்பை 48 ஆக உயர்த்துவதற்கு பிஃபா ஏற்கனவே அனுமதியை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்