முக்கோண ரி-20 தொடரில் சிம்பாப்வேயை வீழ்த்தியது அவுஸ்ரேலியா

சிம்பாப்வே, பாகிஸ்தான் மற்றும் அவுஸ்ரேலியா அணிகள் மோதும் முக்கோண ரி-20 தொடர் தற்போது சிம்பாப்வேயில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.

அதில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற சிம்பாப்வே மற்றும் அவுஸ்ரேலியா அணிகளுக்கிடையிலான போட்டியில், அவுஸ்ரேலியா அணி 100 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்தது.

ஹராரே விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற சிம்பாப்வே அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.இதன்படி களமிறங்கிய அவுஸ்ரேலியா அணி, ஆரோன் பின்ஞ்சின் அதிரடி துடுப்பாட்டத்தின் துணையுடன் 20 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 229 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இப்போட்டியில் சிம்பாப்வே அணி சார்ப்பில், பிளெஸிங் முசரபானி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.இப்போட்டியில் ருத்ரதாண்டம் ஆடிய ஆரோன் பின்ஞ், 76 பந்துகளில் 10 சிக்ஸர்கள், 16 பவுண்ரிகள் அடங்களாக 172 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.

இதன் மூலம் ரி-20 போட்டியில். தனி வீரரொருவர் பெற்றுக்கொண்ட அதிகபட்ச ஓட்டமான 156 என்ற தனது முன்னைய சொந்த சாதனையை, அவரே முறியடித்தார்.

அதனைத் தொடர்ந்து 230 என்ற கடினமான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்குக் களமிறங்கிய சிம்பாப்வே அணியால், 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 129 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது. இதனால் அந்த அணி 100 ஓட்டங்களால் தோல்வியை தழுவியது.

அதில் சிம்பாப்வே அணி சார்பில், சோலமன் மய்ர் மட்டுமே அதிகபட்ச ஓட்டமாக 28 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். அவுஸ்ரேலியா அணி சார்பில், பந்து வீச்சில் ஹொன்ரிவ் டை 3 விக்கெட்டுகளையும், அஷ்டன் அகர் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இப்போட்டியில் சாதனைக் கூடிய ஓட்டத்தை குவித்த ஆரோன் பின்ஞ், போட்டியின் ஆட்டநாயகனாக தெரிவுசெய்யப்பட்டார்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்