உள்ளுராட்சித் தேர்தலின் ஊடாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு தமிழ் மக்கள் விடுத்துள்ள செய்தி என்ன?

இலங்கையில் நடந்து முடிந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தல் ஒட்டுமொத்த அரசியல் கட்சிகளையும் ஆட்டங்காண வைத்துள்ளது.கடந்த 10ம் திகதி நடைபெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் பிரதான அரசியல் கட்சிகள் பாரிய பின்னடைவை சந்தித்துள்ள நிலையில், கன்னிப் போட்டியில் களமிறங்கிய மஹிந்த கட்சி அபார வெற்றியை பதிவு செய்துள்ளது.தென்னிலங்கையின் பிரதான கட்சிகளான ஐக்கிய தேசிய கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திர முன்னணி, ஐக்கிய மக்கள் முன்னணியும் தமிழர் தாயகப் பகுதியில் தமிழ் தேசிய கூட்டமைப்பு என்பன வாக்கு வங்கிகளில் சறுக்கல் நிலையை சந்தித்துள்ளன.

தமிழர்களின் ஏக பிரதிநிதிகளாக தம்மை அடையாளப்படுத்தியுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பினர், தாயகத்தின் தலைநகராக யாழ்ப்பாணத்தில் கண்டுள்ள பின்னடைவு அதிர்ச்சி தரும் விடயமாகவே மாறியுள்ளது.வடக்கு, கிழக்கு மாகாணங்களில் போட்டியிட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு 407 ஆசனங்களை பெற்றுள்ள நிலையில், தாயகத்தில் அதிக வாக்குகளை பெற்ற கட்சியாக உள்ளது.

எனினும், யாழ்ப்பாண மாநகர சபையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆட்சியமைக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. பெரும்பான்மை ஆசனங்களை பெற்றுக்கொள்ளாத நிலையில் சிறுகட்சிகளின் தயவினை நம்பியிருக்க வேண்டிய இக்கட்டான சூழ்நிலை கூட்டமைப்புக்கு ஏற்பட்டுள்ளது.யாழ்ப்பாணத்தில் ஏற்பட்டுள்ள பின்னடைவு குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனும் பகிரங்கமாக அதனை ஏற்றுக்கொண்டுள்ளார். அடுத்து வரும் காலங்களில் மாற்றங்களை ஏற்படுத்தப் போவதாகவும் தெரிவித்திருந்தார்.இந்நிலையில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பின்னடைவுக்கான காரணம் குறித்து பல்வேறு தரப்பினரும் பலவிதமாக பேசி வருகின்றனர்.

உள்ளுராட்சி தேர்தலுக்கான பிரச்சார மேடைகளில் தமிழ் தேசிய கூட்மைப்பினை சார்ந்த அரசியல் தலைவர்கள் பேசி வார்த்தைகள், தமிழர்களின் தீர்வு குறித்து முன்வைத்து விளக்கங்களே பிரதான காரணம் என சுட்டிக்காட்டுகின்றனர்.

விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு தாயகத்தின் ஒட்டுமொத்த தமிழ் மக்களின் நம்பிக்கை பெற்ற கட்சியாக இதுவரை விளங்கி வந்தது.தமிழர்களின் தேசியம், சுயநிர்ணயம் என்பவற்றை முன்வைத்தே கூட்டமைப்பின் செயற்பாடுகள் இதுவரை காலமும் முன்னெடுக்கப்பட்டு வந்தன.தற்போது விடுதலைப் புலிகள் இல்லை. இவ்வாறான சூழ்நிலையில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாட்டில் ஏற்பட்ட மாற்றங்கள் தமிழர்கள் மத்தியில் குழப்ப நிலையை ஏற்படுத்தியுள்ளது.இதன் பின்னணியில் தமிழர்களின் தேசியம் பற்றி முன்வைத்து எதிராக களமிறங்கிய கட்சிகளின் அதிதீவிர பிரச்சாரங்களும் இதற்கான காரணமாக இருக்கலாம்.

வடக்கு, கிழக்கில் தமிழ் தேசிய கூட்டமைப்பினை யாராலும் அசைக்க முடியாது என்று கூறி வந்த அதன் தலைவர்கள், தற்போது வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதை ஏற்றுக் கொள்கின்றனர். இந்தத் தேர்தல் மூலம் தமிழ் மக்கள் ஒரு விடயத்தை ஆணித்தரமாக வெளிப்படுத்த முனைந்துள்ளனர். தமிழ் தேசியத்தை மீறி செயற்படும் எந்தவொரு தமிழ் கட்சிகளும் இதே நிலை ஏற்படும் என்பது தான்.தென்னிலங்கையில் மஹிந்த அபார வெற்றியை பதிவு செய்துள்ளார். தென்னிலங்கை மக்கள் முன்னிலையில் வைக்கப்பட்ட இனவாத கருத்துக்களே இதற்கு பிரதான காரணமாகும்.

இவ்வாறான நிலையில் தமிழர்களின் ஏகபிரதிநிதிகள் ஏன் தமிழர்களின் விடயங்களில் மத்திய அரசாங்கத்திடம் பணிந்து போக வேண்டும் என்பது தாயக மக்களின் கோரிக்கையாக உள்ளது.

இலங்கையின் சமகால ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடுநிலை போக்குடன் சில விட்டுக் கொடுப்புகளுக்கு தயாரான நிலையில், தென்னிலங்கை மக்களால் அவர் நிராகரிக்கப்பட்டுள்ளார். தென்னிலங்கை அரசியல் மிகப்பெரும் சக்தியாக மஹிந்தவின் கட்சி மாறியுள்ள நிலையில், மூன்றாம் நிலைக்கு மைத்திரி தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலைகளை உணர்ந்து தமிழ் கட்சிகள் அனைத்தும், தமிழர்களின் நலன்சார்ந்த நடவடிக்கைகளில் மாத்திரமே ஈடுபட வேண்டும். அதனையே தமி்ழர்களும் விரும்புகின்றனர்.அவ்வாறு நடக்க தவறும் பட்சத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு இப்போது ஏற்பட்டுள்ள வீழ்ச்சி அடுத்த பொதுத் தேர்தலில் பாரிய தாக்கங்களை செலுத்தும் என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்