அடியவர்களின் குறைதீர்க்கும் மருமடு அன்னையின் மகிமை!!

சுமார் 600 ஆண்டுகள் பழமை வாய்ந்த மருதமடு அன்னையின் திருசுரூப வரலாறு. சரித்திரங்கள் வருங்கால சந்ததியினருக்கான ஏடுகளில் எழுதப்படவேண்டும், எனும் உன்னத நோக்கத்திற்காக, பழைய பல ஏடுகளில் இருந்து ஆய்வுசெய்யப்பட்டு தொகுக்கப்பட்டது.மடு அன்னை (Shrine of Our Lady of Madhu)  கன்னி மேரியின் ரோமன் கத்தோலிக்க தேவாலயம் ஆகும். இது இலங்கையின் வட மாகாணத்தில் மன்னார் மாவட்டத்தில் மடு என்ற இடத்தில் அமைந்துள்ளது. 600 ஆண்டுகள் பழமையான இத்தேவாலயம் இலங்கை தமிழ் மற்றும் சிங்கள கத்தோலிக்கரின் புனித வழிபாட்டுத் தலமாக விளங்குகின்றது.

16ம் நூற்றாண்டில் யாழ்ப்பாணம், யாழ்குடா பிரதேசங்கள், மாந்தை பெருநிலப்பரப்பு, மன்னார்த்தீவு, போன்றன யாழ்ப்பாண இராட்சியமாக விளங்கின. அக்காலத்தில் யாழ்ப்பாண இராட்சியத்தை சங்கிலியன் மன்னன் ஆண்டு வந்தான்.இந்தியாவின் தென்கரையோரங்களில் வசித்து வந்த கிறீஸ்தவர்கள் யாழ்ப்பாண இராட்சியத்தில் கிறீஸ்துவைப் பற்றி அறிந்திராத பாமர மக்களுக்கு வேதவசனங்களை சிறிது சிறிதாக போதிக்கலாயினர். இவர்கள் மூலமாக புனித பிரான்சிஸ்கு சவேரியாரின் வேதம் போதிக்கும் ஆற்றலையும், புதுமைகளையும், கேள்வியுற்ற மன்னார் வாசிகள், 1544 இல் இப்புனிதரை மன்னார்த் தீவுக்கு, வருமாறு ஓர் தூதுவர் மூலமாக ஒலை அனுப்பினர்.புனித சவேரியார் திருவாங்கூரில் சமய அலுவல்களில் மும்முரமாக இருந்த காரணத்தினால் தமது நாமம் பூண்ட ஓர் குருவானவரை யாழ்ப்பாண இராட்சியத்திற்கு மன்னார் ஊடாக அனுப்பி வைத்தார்.சவேரியார் குருவானவர் மன்னார் தீவுக்கு வந்து, பலரை மனம் திருப்பி சத்திய வேதத்தை போதித்து மக்களின் மனதை வென்றமையினால் 600 இற்கும் அதிகமான மக்கள் இயேசுவில் நம்பிக்கை வைத்து வாழ்ந்த வேளையில் யாழ்ப்பாண அரசனான சங்கிலியனால் மதம்மாற நிற்பந்திக்கப்பட்டு மறுத்தவர்கள் சிரச்சேதம் செய்யப்பட்டதாக சரித்திரம் சான்று பகர்கின்றது.யாழ்ப்பாண வைபவ மாலை எனும் நூலில் 1544 இல் சங்கிலிய மன்னன, மன்னார் கிறீஸ்த்தவர்களை சிரச்சேதம் செய்தபின் யாழ் சென்று சிங்கள, பௌத்த மதத்தினரையும், யாழ்ப்பாணத்தை விட்டு துரத்தியதாகவும் கூறப்படுகின்றது. (யாழ் வைபவ மாலை பக் -33 Cronicle madhu page 28)

1582 இல் இராஜ பரம்பரையைச் சேர்ந்த இளம் பெண் டொன்னா கத்தரீனா கிறீஸ்த்தவ மதத்தைத் தழுவினார், மன்னாருக்கு வந்து சிறிதுகாலம் வேதத்தைப் பரப்பினாள். இவரின் தந்தையின் பெயர் கறளியத்த பண்டாறா, கண்டி அரசனான, இவர் பின்பு இராஜசிங்க அரசனால் முறியடிக்கப்பட்டார். டொன்னா கத்தரீனா, மன்னார் மக்களின் எளிய வாழ்வை விரும்பியவள். கபிரியேல் கொலோசா என்பவரின் விட்டில் வசித்து வந்தார். கிறீஸ்த்தவ மக்களுக்கு பெரிதும் உதவி செய்தவர். இவரின் தந்தையும், தாயும் கிறீஸ்த்தவ மதத்தைப் பின்பற்றி இறுதியில் திருகோணமலையில் இறந்தனர்.இருப்பினும் இரத்தம் சிந்தப்பட்ட தற்போதைய தோட்டவெளி கிராமத்தில் புது வேகத்துடன் கிறீஸ்த்தவ வேதம் மீண்டும் புத்துயிர் பெற்றது. இதனால் 1583 இல் 26 கோவில் பங்குகளில் 43ஆயிரம் கிறீஸ்தவர்கள் மறைந்திருந்து கிறீஸ்துவிற்கு சாட்சிகளாய் விளங்கியதாக சரித்திரம் கூறுகின்றது.இவ்வாறு ஏற்பட்ட 26 கோவில் பங்குகளில் மன்னார், தள்ளாடி, திருக்கேதீஸ்வரத்தில் அமைந்துள்ள தற்போதைய மாந்தை லூர்த்துக்கெபி சிற்றாலயமும் அடங்கும்.

செபமாலை மாதாவென்று தற்போது அழைக்கப்படும் மருதமடு மாதாவின் உண்மையான சுரூபத்தின் ஆதி இருப்பிடம் மாந்தை திட்டியில் அமைந்துள்ள தற்போதைய லூர்த்துக்கெபி கோவிலாகும். 16ம் நூற்றாண்டில் போர்த்துக்கேயர் மன்னாருக்கு வந்தபோது மாந்தை பட்டினமும், திருக்கேதீஸ்வர கோவிலும் பாழ் அடைந்திருந்ததாகவும் 1560 இல் மன்னார் கோட்டையை டி.கொண்ஸ்ரன்டைன், டீ.பிறாங்கன்ஸ் என்பவர் தலைமையில் கட்டுவதற்கு இங்கிருந்து முருகை கற்கள் எடுத்துச் செல்லப்பட்டதாகவும், சரித்திரம் சான்று பகர்கின்றது. (D. CONSTANTINE, D . BRANGANZA ) refer chronical> chapter II page 22 third para.)

1900 ஆம் ஆண்டுகளில், அரச ஊழியர்கள் தங்குவதற்காகவும், தமது கடமைகளை செய்வதற்காகவும், ஓர் அரச விடுதியும், அருட்சகோதரிகளின் சேவைகளுக்காக ஓர் கன்னியர் மடமும், பக்தர்களின் நலன்கருதி நோயாளர்கள் தங்கும் வைத்தியசாலையும், வெளி உலகுடன் தொடர்புகொள்ள தபால் தொலைபேசி காரியாலயமும், திருவிழாக் காலங்களின்போது சட்டநடவடிக்கைகளை மேற்கொள்ள பொலிஸ் காரியாலயமும், நீதிமன்றமும், மடுச்சுற்றாடலில் அமைக்கப்பட்டன.

பின்னர் அதி. வந்த. புறோ ஆண்டகை, இப்பதியை மக்களின் யாத்திரை ஸ்தலமாக அங்கீகரிக்கச் செய்ததுடன் மடு அன்னையின் பழமை வாய்ந்த சுரூபத்திற்கு முடி சூட்டிவிக்க ஆரம்ப முயற்ச்சிகளை மேற்கொண்டார்.இவரைத் தொடர்ந்து அதி. வந்த. கியோமார் ஆண்டகை, தமது மறைமாவட்ட பணியை மடு அன்னையின் முடிசூட்டு விழாவுடன் ஆரம்பித்தார். இவர் மடுத்தேவாலயத்தின் முற்பகுதியை விசாலமாக்கி பல்லாயிரக்கணக்கான மக்கள் பிற்பகல் ஆராதனைகளில் முற்றவெளியில் இருந்து பங்குபற்றுவதற்கு வழி சமைத்ததுடன் இயேசுநாதரின் சிலுவையில் அறையப்பட்ட திருச்சுரூபம், பற்றிமா அன்னையின் திருக்சுரூபம் போன்றவற்றையும் மடுத்திருப்பதியில் நிறுவினார்.

ஜந்து ஆண்டுகள் அரிய சேவையின்பின் முதுமை காரணமாக யாழ் மறை மாவட்டத்தையும், மருதமடுத் திருத்தலத்தின் பாதுகாப்பையும், அதி. வந்த. எமிலியானுஸ்பிள்ளை ஆண்டகையிடம் ஒப்படைத்தார். இவரின் காலத்தில் மடுமாதாவின் பக்தி இலங்கையின் பல்வேறு மறைமாவட்டத்திற்கும் விரைவாக பரவலாயிற்று.

1924ம் ஆண்டு ஆடித்திங்கள் பரிசுத்த பாப்பரசர் 11ம் பத்திநாதரின் பிரதிநிதியாக கொழும்புக்கு வருகைதந்த அதி. வந்த ஆண்டகை ஆஷா குடேற், அவர்கள் மாதாவின் சிரசிலும், கரங்களில் ஏந்தியிருந்த தேவபாலனின் சிரசிலும், வைரகற்கள் பதிந்த இருதங்க முடிகளையும் சூட்டினார்.

அவ்வேளையில் திருநாள் திருப்பலியை. முன்னாள் யாழ் ஆயர் கியோமார் ஆண்டகை, நிறைவேற்றியதுடன், தூத்துக்குடி ஆயர் அதி. வந்த றோச் ஆண்டகை மக்களைக் கவரும் வகையில் மாதாவின் புதுமைகளைப் பற்றி பிரசங்கித்தார். இந்நிகழ்ச்சிக்கு 150 ஆயிரம் மக்களும், 50ற்கும் மேற்பட்ட இலங்கை இந்திய குருக்களும், அக்காலத்தில் இருந்த யாழ், கொழும்பு, கண்டி, காலி, மறைமாவட்ட ஆயர்களும், பக்திப் பரவசத்துடன் முடிசூட்டு விழாவில் பங்கு பற்றியதாக சரித்திரம் கூறுகின்றது. இலங்கையிலுள்ள பல தேவாலய மணிகள் ஆர்ப்பரிக்க, பீரங்கிகள் முழங்க, மருதமடு அன்னையின் கீதங்கள் வானொலியில் ஒலிக்க, பல்லாயிரம் மக்களின் கனவு அன்று நனவாகியது.

1944ம் ஆண்டு ஆவணி 25ல் மருதமடு அன்னையின் தேவாலயத்தை அபிஷேகம் செய்ய மக்களும் ஆண்டகைகளும் சித்தம் கொண்டமையினால், 2வது மகாயுத்த காலம் நிலவியபோதிலும் வெகுபக்தி விமரிசையாக 30 ஆயிரம் மக்கள் கலந்துகொள்ள ஆலயம் அபிஷேகம் பண்ணப்பட்டு புதிய சலவைக்கல் பீடத்தில் நன்றித் திருப்பலியை கியோமோர் ஆண்டகை ஒப்புக்கொடுத்தார்.அமலோற்பவ மரியநாயகி சபைக்குருமார் இலங்கைக்கு வந்து தொண்டாற்றிய நூற்றாண்டு விழாவை கொண்டாடும் முகமாக அதி. வந்த. கியோமோர் ஆண்டகையின் தலைமையின்கீழ் மடு அன்னையின் திருச்சுரூபம் “கன்னிமரியாள் ஒர் பிரசங்கி” என்னும் கருப்பொருளில் யாழ்ப்பாண மேற்றாசனத்தில் உள்ள ஒவ்வொரு விசாரனைப் பங்கிற்கும் கொண்டு செல்லப்பட்டது. இதற்காக ஒவ்வொரு பங்கிலும் இருதினங்கள், செபதபங்கள் அனுசரித்தும், மக்கள் பயபக்தியுடன் தமது மீசாம்களை அலங்கரித்தும், மனம் திருப்புதலுக்கான முயற்சியாக இவ்வருகையை ஆயத்தம் செய்தனர்.

இம் மாதாவின் யாழ் பவனி பங்குனி 15ம் திகதி தொடக்கம் வைகாசி 5ம் திகதி வரை நடந்தேறியது. இந்த 50 நாட்களிலும் சுமார் 80 பங்குகளில் மாதாவின் தரிசனம் கிடைத்ததை கிறீஸ்தவர்களும், பிறசமயத்தவர்களும் பெரும்பேறாக கருதினர்.
இக்காலப்பகுதியில் சுமார் 51 ஆயிரம் கத்தோலிக்க மக்கள் தங்களை தேவதாயாருக்கு காணிக்கையாக்குவதற்காக பத்திரங்களில் கையொப்பமிட்டு மடு அன்னையின் திருப்பாத கமலங்களில் வைத்ததாக சரித்திரம் சான்று பகருகின்றது.
1949 இல் மருதமடு தாயாரின் முடிசூட்டு விழா 25 வருடங்களை பூர்த்தி செய்தது.

அவ்வாண்டில் யாழ் ஆயரான அதி. வந்த. கியோமோர் ஆண்டகை அபிஷேகம் செய்யப்பட்ட வெள்ளிவிழாவும் மடுவில் நிகழ்ந்தது, இவ்வைபவத்தில் 150 ஆயிரம் மக்கள் கலந்துகொண்டதுடன், இரவு 10.00 மணி தொடக்கம் அதிகாலை 2.00 மணி வரை நடைபெற்ற வேண்டுதல் வழிபாட்டில், ஐம்பதாயிரம் யாத்திரிகர்கள் கலந்துகொண்டு தமிழிலும், சிங்களத்திலும், இலத்தீன். மொழியிலும் மன்றாடியதாக சரித்திரம் கூறுகின்றது.1950 இல் மடுத்தேவாலயம் இரண்டு பெரிய மின்பிறப்பாக்கியின் மூலம், ஒரு சதுர கி.மீ க்கு மின்னொளியூட்டப்பட்டு ஜோதி மயமாக காட்சியளித்தது.1963 இல் மன்னாரில் ஏற்பட்ட கடும்புயல் காரணமாக, மடுத்தேவாலயமும், அதனைச் சுற்றியுள்ள அடர்ந்த காட்டு மரங்களும், பெரும் சேதத்திற்கு உள்ளாயின. வண பிதா, பிறோகான் 1950 இல் தனது அரிய முயற்ச்சியினால், வெளிநாட்டில் இருந்து மாபிளினால் தயாரிக்கப்பட்ட மருதமடு அன்னையின் திருச்சுரூபம் இரண்டைத் தரிவித்து, பெரிய சுரூபத்தை மடுமாதா தேவாலயத்தின் முகப்பிலும் ( PORTICO) சிறிய சுரூபத்தை மடுறோட், . மன்னார் – மதவாச்சி, சந்தியில் அமைந்துள்ள நுழைவாயிலிலும், ஸ்தாபித்ததாக சான்றுகள் காணக்கிடக்கின்றன.

ஒவ்வொரு வருடமும்  ஓகஸ்ட் மாதத்தில் இடம்பெறும் இவ்வாலயத்தின் வருடாந்த உற்சவத்தில் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் மக்கள் இன, மத பேதமின்றி கலந்து கொள்வது வழமையான ஒன்றாகும். ஈழப்போர் தொடங்கியதில் இருந்து இவ்வாலயத்திற்கு செல்வோரின் தொகை பல மடங்குகள் குறைவடைந்திருந்தது. இனப்போரின் தாக்கத்தினால் இடம்பெயர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் இவ்வாலயச் சுற்றுவட்டத்தில் அகதிகளாக தஞ்சமடைந்திருந்தனர். ஏப்ரல் 2008 இல் ஆலயத்தை நோக்கி இலங்கை இராணுவத்தினர் தொடர்ச்சியாக நடத்திய பலத்த எறிகணை வீச்சினால் ஆலயம் பலத்த சேதத்துக்குள்ளாகியது. இதனால் அங்கு அடைக்கலமடைந்திருந்த மக்கள் அனைவரும் வேறு பாதுகாப்பான இடத்தை நோக்கி இடம்பெயர்ந்தனர்.

அந்த ஆலயத்தில் இறுதியாகத் தங்கியிருந்த குருக்கள் மற்றும் பணியாளர்களும் அங்கிருந்து வெளியேறினர். இதனை அடுத்து தேவாலயத்தில் 400 ஆண்டுகளாக அருள் பாலித்து வரும் அன்னையின் திருவுருவச் சிலையின் பாதுகாப்புக் கருதி அச்சிலை ஏப்ரல் 4, 2008 இல் மன்னார் தேவன்பிட்டி புனித சவேரியர் ஆலயத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. நவம்பர் 20, 1999 இல் மடு தேவாலயத்தை நோக்கி எறியப்பட்ட எறிகணை வீச்சினால் அங்கு தங்கியிருந்த 44 பொது மக்கள் கொல்லப்பட்டனர். மேலும் 60 பேர் வரையில் படுகாயமடைந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.விஞ்ஞான வளர்ச்சியின் காரணமாகவும் மடுத்திருப்பதியை அரசியல் மயப்படுத்தலின்கீழ் உல்லாசப் பயணிகளை கவரும் உல்லாச புரியாக, சந்தைப்படுத்தல் இடமாக மிளிர்வதை இலங்கை கத்தோலிகத் திருச்சபை என்றுமே விரும்பவில்லை.

மடுகுளம் ஆழமாக்கப்பட்டு கூடிய மழைநீரை சேகரித்து வைப்பதில் கவனம் செலுத்தப்பட்டள்ளது, மடு ஆலயத்தைச் சுற்றி பன்னிரண்டிற்கும் மேற்பட்ட கிணறுகள், குளத்தின் வரம்பிற்குள்ளும் ஏனைய இடங்களிலும் அமைக்கப்பட்டுள்ளன, 1983 இல இலங்கை அரசினால் (By hon president premadasa) ஆயிரம் மலசல கூடங்கள் பக்தர்களின் நலன்கருதி கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளன.பக்தர்களின் நலன்கருதி நூற்றுக்குமேற்பட்ட நிரந்தர, தற்காலிக, விடுதிகள் ஆலயத்தைச் சுற்றி அமைக்கப்பட்டிருப்பதை காணக்கூடியதாக இருக்கின்றது.
போரின்பின் மக்கள் தங்கள் இருப்பிடங்களுக்கு மீள்குடியேறியமையினால் சின்னப்பண்டிவிரிச்சான், பெரியபண்டிவிரிச்சான், தட்சணாமருதமடு, மடுறோட், போன்ற மடுவை அண்டிய கிராமங்களில் தேவாலயங்கள் புனரமைக்கப்பட்டு, மக்கள் வழிபாட்டிற்கென திறந்து வைக்கப்பட்டுள்ளன.

2007ம் ஆண்டுக் காலப்பகுதியில் மன்னார் மக்கள் மடுத்தேவாலயத்திற்கு மடுவீதியினால் செல்வதற்கு முதலில் அனுமதிக்கப்பட்டு, பின் தடைசெய்யப்பட்டது, பயணிகளின் வசதிக்காக மன்னார் துயர் துடைப்பு மறுவாழ்வுச் சங்கம் மடுவீதியில் பிரயாணிகள் தங்கும் மண்டபம் ஒன்றை அமைத்துக்கொடுத்தது.
மடுவீதியின் நுளைவாயிலின் அருகாமையில் அமைந்துள்ள பழமை வாய்ந்த மடு அன்னையின் திருச்சுரூபம் ((marble statue ) அவ்வீதியால் போகும் பாதசாரிகளுக்கும், பக்தர்களுக்கும், ஓரு கலங்கரை விளக்காக திகழ்கின்றது.

2009ம் ஆண்டுகளில் மடுவீதியின் நுளைவாயில் அழகிய வேலைப்பாடுகளுடன் அமைந்த மடுத்தேவாலயத்தின் வரைபடத்தை ஒத்த நுளைவாயில் ஒன்று பெரும் பணச்செலவில் ஸ்தாபிக்கப்பட்டு மன்னார் ஆயரினால் 2011 இல் திறந்துவைக்கப்பட்டது.2010ம் ஆண்டு காலப்பகுதியில் அரசாங்கம் மடுவின் சுற்றாடலின் சில பகுதியை சரணாலயம் என வர்த்தமானி மூலம் பிரகடணப்படுத்தி இருப்பதனால் மடுபரிபாலனம் மடுக்கோயிலின் எல்லையை மீள் பரிசீலனை செய்யவேண்டியள்ளது.போரின்பின் அரசாங்கத்தினால் ஆயரின் அனுசரனையுடன் 2009-2011 ஆம் காலப்பகுதியில், மடுத்தேவாலயம் புனரமைக்கப்பட்டதுடன், மடுக்கோவிலைச் சுற்றியுள்ள (பிரதான) வீதிகள் பிரதான செப்பனிடப்பட்டு, சீமேந்துக் கற்களினால் நடைபாதை போடப்பட்டு மின்னொளி ஊட்டப்பட்டு, புதுப்பொலிவுடன் காணப்படுகின்றன,

2010-2011 ஆம் காலப்பகுதியில், தெற்கிலுள்ள பெருந்திரளான யாத்திரியர்கள் குழுக்களாகவும், தனித்தும், நாளாந்தம் மடுத்தேவாலயத்தை தமது ஆன்மீக தேவைக்காக தரிசிக்கின்றனர், ஒருநாளில் சுமார் ஜந்து வாகனங்களும், 200 ற்கு மேற்பட்ட பக்தர்களும், மடுவை தரிசிப்பதாக நாள் ஏடுகள் குறிப்பிடுகின்றன,
97. 2011 ஆம் ஆண்டு இறுதியில் 21 வருடங்களின் பின், மடு புகையிரத நிலைய மீள்கட்டுமான பணிகள், அரசாங்கத்தினால் இந்திய உதவியுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.2011 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் 1990 இல் இடம்பெயர்ந்து சென்ற சிங்கள, முஸ்லீம், தமிழ் மக்கள், மீண்டும் மடுவை அண்டியள்ள பிரதேசங்களில் வந்து குடியேறத் தொடங்கினர், இருப்பினும் மடுத்தேவாலயத்தின் தனித்துவமான இயற்கை வன, சுற்றாடல், கடந்த 600, வருடங்களாக மாறுபடாமல் அமைதியும், பக்தியும், சூழ்ந்த இடமாக இன்றும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

2011 ஆவணி மாத திருவிழாவிற்கு முன், மன்னார் ஆயர் ஜோசப் ஆண்டகை அவர்கள், 2008 இல் ஆரம்பிக்கப்பட்ட அழகிய இரண்டு மாடிக் கட்டிடத்தை, குருக்கள் தங்குவதற்காக திறந்து வைத்தார், பல ஆண்டுகளின் பின் இக்கட்டிடம் ஒன்றே, மடுத்திருப்பதியில் ஸ்தாபிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்