ரி-20 தொடரிலும் மேற்கிந்தியத் தீவுகளை பந்தாடியது நியூஸிலாந்து!! தொடரை முழுமையாக கைப்பற்றி சாதனை!!

நியூசிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான மூன்றாவது இறுதியுமான ரி-வென்ரி போட்டியில், நியூசிலாந்து அணி 119 ஓட்டங்களால் அபார வெற்றிபெற்றது.இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ரி-வென்ரி தொடரை 2-0 என நியூசிலாந்து அணி கைப்பற்றியது. மவுண்ட் மௌனன்குய் மைதானத்தில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 243 ஓட்டங்களை பெற்றது. இதன்போது, அணியின் அதிகபட்ச ஓட்டமாக கொலின் முன்ரோ 104 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். பந்துவீச்சில் பிரத்வெயிட் 2 விக்கெட்டுகளை சாய்த்தார்.இதனை தொடர்ந்து 244 என்ற இமாலய வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி, 16.3 ஓவர்கள் நிறைவில் 124 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதனால் நியூசிலாந்து அணி 119 ஓட்டங்களால் அபார வெற்றிபெற்றது.இதில், அணியின் அதிகபட்ச ஓட்டமாக பிளிட்சர் 46 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். பந்துவீச்சில் டிம் சவுத்தி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.இப்போட்டியின் ஆட்டநாயகனாகவும் தொடர் நாயகனாகவும் கொலின் முன்ரோ தெரிவுசெய்யப்பட்டார்.டெஸ்ட், ஒருநாள் மற்றும் ரி-ருவென்ரி போட்டிகளில் விளையாடுவதற்காக நியூசிலாந்து சென்ற மேற்கிந்திய தீவுகள் அனைத்து போட்டிகளிலும் தோல்வியடைந்தமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்