இந்து மைந்தர்களின் சமர் வெற்றி தோல்வியின்றி நிறைவு

மைந்தர்களுக்கிடையிலான சமர் என வர்ணிக்கப்படும் மாபெரும் வருடாந்த கிரிக்கெட் போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவடைந்தது.

இந்து மைந்தர்களின் 08 ஆவது மாபெரும் கிரிக்கெட் தொடரின் சிறந்த துடுப்பாட்ட வீரராக யாழ். இந்துக்கல்லூரியின் வை.விதுஷன் தெரிவு செய்யப்பட்டதோடு சிறந்த பந்துவீச்சாளராக கொழும்பு இந்துக்கல்லூரியின் கஜேந்திரன் தெரிவு செய்யப்பட்டார்.

பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற இந்தப்போட்டியில் முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய கொழும்பு இந்துக்கல்லூரி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 287 ஓட்டங்களைப் பெற்றது.

துடுப்பாட்டத்தில் எஸ்.மதுர்ஷன் 72 ஓட்டங்களைப் பெற்றார்.

முதல் இன்னிங்ஸில் பதிலளித்தாடிய யாழ். இந்துக்கல்லூரி இரண்டாம் நாளான இன்று 279 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில் சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.

துடுப்பாட்டத்தில் எஸ். கஜந்த் 63 ஓட்டங்களைப் பெற்றார்.

போட்டியின் இரண்டாம் நாளான இன்று 09 ஓட்டங்கள் முன்னிலையுடன் இரண்டாம் இன்னிங்ஸை ஆரம்பித்த கொழும்பு இந்துக்கல்லூரி மேலதிகமாக 229 ஓட்டங்களைக் குவித்தது.

கொழும்பு இந்துக்கல்லூரி சார்பாக எஸ். சேவாக் 63 ஓட்டங்களைப் பெற்று அணியை வலுப்படுத்தினார்.

238 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலளித்தாடிய யாழ். இந்துக்கல்லூரி 04 விக்கெட்டுக்களை இழந்து 124 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில் இன்றைய ஆட்ட நேரம் நிறைவடைந்தது.

இதனடிப்படையில், இந்து மைந்தர்களின் மாபெரும் கிரிக்கெட் போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவடைந்தது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்