முன்னாள் ஜனாதிபதிகளைப் பின்பற்றி வான்கோழியை மன்னித்த அதிபர் ட்ரம்ப்!

முன்னாள் ஜனாதிபதி ஒபாமா செய்த ஒரு விஷயத்தை ட்ரம்ப் தடை செய்யாமல் இருக்கிறார் என்பதே ஆச்சரியம்தான். அதிலும் ”ஒபாமா செய்ததையே நானும் செய்கிறேன். ஏனென்றால், நான் ஒரு நல்ல ஜனாதிபதி” என்று ட்ரம்ப்பே கூறியிருக்கிறார் என்றால், ‘இது கனவா இல்லை நிஜமா’ என்ற சந்தேகம் வருகிறது.

‘அறுவடைத் திருநாள்’ முடிந்ததும் கொண்டாடப்படும் ‘தேங்க்ஸ் கிவ்விங்’ நிகழ்ச்சியில், அமெரிக்க ஜனாதிபதிக்கு வான்கோழி பரிசாக வழங்கப்படும். அந்த வான்கோழி பரிசை அமெரிக்க ஜனாதிபதி, தனது குடும்பத்தோடு சமைத்து உண்ணும் பழக்கம் என்பது 70 ஆண்டுகளுக்கு முன்பு அப்போதைய ஜனாதிபதி ட்ரூமேனால் ஆரம்பிக்கப்பட்டது. அது இன்றைய ட்ரம்ப் வரை தொடர்கிறது. இதற்கிடையில், ஆப்ரஹாம் லிங்கன் காலத்திலிருந்தே ‘தேங்க்ஸ் கிவ்விங்’ வழக்கம் இருந்து வருவதாகவும் ஒரு தகவல் கூறுகிறது.

அமெரிக்காவில் ‘தேங்க்ஸ் கிவ்விங்’கிற்காக சிறப்பு உணவு வரிசையில், வான்கோழி சமைக்கப்படும். ‘குறிப்பிட்ட இந்த தினத்தில் மட்டும் அமெரிக்கா முழுவதும் சுமார் 4.6 கோடி வான்கோழிகள் சமைக்கப்படும்’ என்கிறது புள்ளிவிவரம். 1947 ஆம் ஆண்டு முதல்இ ஜனாதிபதிக்கு வான்கோழிகள் பரிசளிக்கப்படுவது அதிகாரபூர்வமாக இருந்து வருகிறது.

இந்நிலையில், ‘மிருகங்களைக் கொல்லக் கூடாது’ என்ற கொள்கையை வலியுறுத்தி விலங்கு ஆர்வலர்கள் இந்த ‘வான்கோழி பரிசு’ நடைமுறைக்கு எதிராகப் போராட்டமும் நடத்தி வந்துள்ளனர். 1963இல் ​ேஜான் கென்னடி, தனக்கு பரிசளிக்கப்பட்ட வான்கோழியை சமைக்காமல் மன்னித்து விட்டுள்ளார்.

அவருக்குப் பின்னர் வந்த நிக்சன், கார்ட்டர், ரீகன் ஆகியோரும் தொடர்ச்சியாக இந்த மன்னிப்புப் பழக்கத்தைக் கடைப்பிடித்து வந்தனர். ஆனால், ​ஜார்ஜ் புஷ் சீனியர்தான் இந்த நடைமுறையை அதிகாரபூர்வமாக்கினார். இதையடுத்து ‘தேங்க்ஸ் கிவ்விங்’கிற்காக வழங்கப்படும் வான்கோழிகளை மன்னித்து பண்ணைக்குத் திரும்ப அனுப்புவதைப் பெரும் நிகழ்ச்சியாக்கினர். இப்படிக் கடந்த 25 ஆண்டுகளில், ‘தேங்க்ஸ் கிவ்விங்’ நடைமுறையில் பெரியதொரு மாற்றம் ஏற்பட்டுள்ளது.

மன்னிப்பு நிகழ்ச்சிக்கு முன்பாக இந்த வான்கோழிகளுக்கு அரச மரியாதை வழங்கப்படும். அதாவது, நட்சத்திர ஹோட்டலில் உள்ள சொகுசு அறையில் இவை தங்கவைக்கப்பட்ட பிறகே, ஜனாதிபதியின் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும்.இப்படி ஹோட்டலில், வான்கோழிகள் சொகுசு அறையில் தங்கவைக்கப்படுவற்கான ஒருநாள் செலவு மட்டும் 3500 ​டாலர்களைத் தாண்டும்!

ஒபாமா ஆட்சிக் காலத்தில், 8 ஆண்டுகள் நடைபெற்ற ‘தேங்க்ஸ் கிவ்விங்’ நிகழ்வுகளில் அனைத்து வான்கோழிகளும் மன்னிக்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில், தனது மகள்களுடன் ஒபாமா கலந்து கொள்வார். அப்போது ஒரு சுமாரான நகைச்சுவையை சொல்லி வான்கோழிகளை மன்னித்தார்.இந்நிலையில் ‘ட்ரம்ப் எல்லா விஷயங்களிலும் வழக்கத்துக்கு மாறாகவே இருக்கிறாரே… இப்போது தேங்க்ஸ் கிவ்விங் நிகழ்வில், இவர் என்ன செய்யப்போகிறாரோ?’ என அனைவரும் ஆர்வமாகக் காத்திருந்தனர்.

ஆனால் ட்ரம்ப்போ ”போன முறை ​டாட்டர் மற்றும் டாட் வான்கோழிகள் எப்படி திரும்ப அனுப்பப்பட்டதோ அதேபோல் இந்த வருடமும் ட்ரம்ஸ்டிக் மற்றும் விஷ்போன் பெயர்கொண்ட வான்கோழிகள் திரும்ப அனுப்பப்படும். ஏனென்றால், நான் ஒரு நல்ல ஜனாதிபதி” என்றார் அதிரடியாக.

ட்ரம்ப்பின் இந்த மாற்றம் குறித்துப் பேசுவோர் ”வெள்ளை மாளிகையின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், தேங்க்ஸ் கிவ்விங் குறித்த ஒரு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில், ‘எந்த வான்கோழியை மன்னிக்க வேண்டும்’ என்ற கேள்விக்குக் சம அளவு பதில் வந்ததும்கூட, ட்ரம்ப்பின் மன்னிப்பு நடவடிக்கைக்குக் பின்னணியாக இருக்கலாம்” என்கிறார்கள்.

”இந்த ஒரு விஷயத்திலாவது ட்ரம்ப், ஒபாமாவின் பின் தொடர்வை வெளிக்காட்டிக் கொண்டாரே…” என்று ஆறுதலடைகின்றனர் அமெரிக்கர்கள்.

‘வான்கோழிகளிடத்தில் அமைதி நிலவ வேண்டும் என நினைக்கும் ட்ரம்ப் அவர்களே… அமெரிக்காவிலும் அதே அமைதியைக் கொண்டு வர முயற்சி செய்யுங்கள்” என்கிறது துப்பாக்கிச் சத்தங்களுக்கு நடுவே ஒலிக்கும் ஓர் அமெரிக்க குரல்!

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்