நீங்கள் யாரும் அறிந்திராத இணுவில் கந்தசுவாமி கோயில் பற்றிய விபரம் !

இலங்கை, யாழ்ப்பாணத்திலுள்ள இணுவிலில் உள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க கோயில்களிலே இணுவில் கந்தசுவாமி கோயில் முக்கியமான ஒன்று. இது காங்கேசன்துறை வீதியின் மேற்க்கு புறமாக இணுவில் மானிப்பாய் வீதியில் (கோயில் வாசல்) அமைந்துள்ளது. உலகப்பெருமஞ்சம் அமைந்துள்ளது இவ் ஆலயத்தின் சிறப்பாகும்.

வரலாறு
யாழ்ப்பாண இராச்சியத்தின் தொடக்க காலத்தில் இணுவில் பகுதியின் ஆட்சியாளனாகப் பேராயிரவன் என்பவன் நியமிக்கப்பட்டதாக யாழ்ப்பாண வைபவமாலை கூறுகிறது. இவனது வழி வந்த கனகராச முதலி என்பவன் பிற்காலத்தில் இப்பகுதியில் ஆட்சித் தலைவனாக விளங்கினான். இவன் காலத்திலேயே இணுவில் கந்தசாமி கோயில் தோற்றம் பெற்றதாகச் செவிவழிக் கதைகள் தெரிவிக்கின்றன. இவ்விடத்தில் முருக வழிபாடு தோன்றியது குறித்த கதை ஒன்று மக்களிடையே நிலவி வருகிறது.

“ஒரு நாள் இரவு ஓர் ஒளிப்பிழம்பு தெரிவதை மக்கள் கண்டனர். அதனைக் கண்ணுற்றவர்கள் ஒளிப்பிளம்பு தெரியும் இடம் முதலியார் வீடு இருந்த திசையே என்பதை உணர்ந்து முதலியார் வீட்டில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த நெற்போர் தீப்பிடித்து விட்டது எனக்கருதி நாற்புறத்தில் இருந்தும் அவரது வீடு நோக்கி ஓடி வந்தனர். முதலியார் வீட்டு முற்றத்தை அடைந்த மக்கள் அங்கு எவ்வித அனர்த்தங்களும் இன்றி யாவும் வழமைபோல் இருப்பதைக் கண்டு அதிசயித்தனர். முதலியாரிடம் தாம் வந்த காரணத்தை விளக்கினர். அதற்கு முதலியார் தாம் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் வேளையில் இரு பிராமணச் சிறுவர்கள் தன்னை அணுகி தாம் காஞ்சியில் இருந்து வந்ததாகவும் தம்மை ஆதரிக்குமாறும் கூறி மறைந்து விட்டனர் என்று கூறினார். தனது குலதெய்வமாகிய காஞ்சியம்பதி குமரகோட்டக் கந்தப்பெருமானே தனக்கும் தன் குடிமக்களுக்கும் நல்லருள்பாலிக்கும் பொருட்டுக் காட்சி கொடுத்துள்ளாரென மனம் நெகிழ்ந்து இறைவனின் திருவருளை வியந்து ஆனந்தத்தில் சிலிர்த்தார். திருவருள் சித்தத்திற்கிணங்க முருகப் பெருமானையும், வைரவப் பெருமானையும் தன் இல்லத்தில் குடிலமைத்து அமைத்து வழிபட்டு வந்தாரென ……..”

தற்போது இக்கோயிலுக்கு முன்னால் உள்ள முதலியாரடி எனப்படும் சிறு கோயில், மேற்சொன்ன கனகராச முதலியின் நினைவாக மக்கள் நடுகல் நாட்டி வழிபட்ட இடம் எனக் கருதப்படுகிறது. 1620 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் போத்துக்கேயரிடம் வீழ்ச்சியடைந்த பின்னர் யாழ்ப்பாணத்துக் கோயில்கள் அனைத்தையும் இடித்து அழித்ததுடன், இந்துசமய வழிபாட்டுக்கும் தடை விதித்தனர். இதனால் கனகராச முதலியால் அமைக்கப்பட்ட கோயிலும் அழிந்து போனது. 1661 ஆம் ஆண்டில் வேலாயுதர் என்பவர் இதே இடத்தில் முருகனை வைத்து வணங்கி வந்ததார் என்று தெரிகிறது. இது தொடர்பிலும் ஒரு கதை உண்டு.

“அக்காலத்தில் வாழ்ந்த குழந்தையர் வேலாயுதர் என்பவரது கனவில் கந்தக் கடவுள் தோன்றித் தன்னை ஆதரிக்கும்படியும், தான் காஞ்சியில் இருந்து வந்ததாகவும் கூறி “உனது வெற்றிலைத் தோட்டத்தில் நாட்டப்பட்டுள்ள நொச்சிமரத்தடியில் காலால் மிதித்து அடையாளம் இட்டிருப்பேன்”. அவ்விடமே எனது இருப்பிடம் எனக்கூறி மறைந்தார். அதிகாலை எழுந்த வேலாயுதர் தான் கண்ட கனவை எண்ணியவாறு வெற்றிலைத் தோட்டத்துக்குச் சென்றார். இது என்ன அதிசயம் கண்டது கனவல்ல நனவுதான் என உணர்ந்தார். பெருமான் உரைத்ததற்கு இணங்கப் புதிதாக ஒரு நொச்சிமரம் நாட்டப்பட்டு அருகில் பாதச் சுவடும் இருப்பதைக் கண்டு மகிழ்ச்சிக் கடலில் மூழ்கினார். அவ்விடத்திற் குடிலமைத்து வேற்பெருமானை வணங்கி வந்தார்.”
அதற்கமைய ஆலயம் அமைந்துள்ள காணியின் பெயர் நொச்சியொல்லை மிதியன் என வழங்கப்படுவதுடன் இன்று கருவறைக்கு அருகில் இருப்பது மேற்சொன்ன நொச்சி மரமே என்றும் கருதப்படுகிறது.

ஊரவரும், அயலூர்களைச் சேர்ந்தவர்களும் இக்கோயிலுக்கு வந்து வணங்கினர். வேலாயுதரின் மகன் அருணாசலம் என்பவர் கோயிலில் வாக்குச் சொல்லி வந்ததால் அடியவர்களின் தொகையும் கூடிக்கொண்டே சென்றது. குடிலாக இருந்த கோயில் செங்கற் கட்டிடமாகக் கட்டப்பட்டுக் குடமுழுக்கும் செய்து வைக்கப்பட்டது. பூசைகளும், புராண படனம் போன்ற பல்வேறு சமய நிகழ்வுகளும் இக்காலத்தில் ஒழுங்காக நடைபெற்று வந்ததாகத் தெரிகிறது. 1840 ஆம் ஆண்டளவில் கோயில் வெள்ளைப் பொழி கற்களினால் கட்டி முடிக்கப்பட்டது.

1891 ஆம் ஆண்டளவில் பெரிய சந்நியாசியார் என அழைக்கப்பட்ட ஆறுமுகம் சந்நியாசியார் இக் கோயில் திருப்பணிகளில் ஈடுபடலானார். இவரது முயற்சியினால், இக்கோயிலுக்காக மஞ்ச வாகனம் ஒன்றைச் செய்யும் பணிகள் 1910 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டன. இந்தியாவில் இருந்து அழைத்துவரப்பட்ட சிற்ப வல்லுனர்கள் இப் பணியில் ஈடுபட்டனர். உலகப் பெருமஞ்சம் என ஊரவர்களால் குறிப்பிடப்படும் இப் புகழ் பெற்ற மஞ்சம் 1912 ஆம் ஆண்டில் வெள்ளோட்டம் விடப்பட்டது.[4] வேறு அடியவர்களின் முயற்சியினால் 1905-1909 காலப்பகுதியில் கோயிலுக்காக மூன்று தளங்களைக் கொண்ட கோபுரமும் அமைக்கப்பட்டது.[5] 1946 ஆம் ஆண்டளவில் மணிக்கோபுரங்களையும் கட்டினர். 1967ல் கருவறைக்கு இரண்டு தளங்களைக் கொண்ட விமானம் அமைக்கப்பட்டது. 1976 ஆம் ஆண்டில் ஒரு புதிய சித்திரத் தேரும், 1977ல் புதிய சப்பறமும் இக் கோயிலுக்காக உருவாயின.

1953 ஆம் ஆண்டில் நீதிமன்றத் தீர்ப்பு ஒன்றையடுத்து இக் கோயில் பொதுக் கோயிலாக அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் பொது மக்களால் தெரிவு செய்யப்படும் குழுவினர் கோயிலின் நிர்வாகத்துக்குப் பொறுப்பாக இருந்து வருகின்றனர்.

திருவிழாக்கள்

இணுவில் கந்தசாமி கோயில் மஞ்சத் திருவிழா வீதியுலாக் காட்சி.
இணுவில் கந்தசாமி கோயில் மஞ்சத் திருவிழா வீதியுலாக் காட்சி.
இக்கோயிலில் ஆண்டுக்கு ஒருமுறை 25 நாட்கள் தொடர்ச்சியாக நடைபெறும் பெருந் திருவிழா இடம் பெறுகிறது. இதன் ஒரு பகுதியாக ஆனி அமாவாசைத் தினத்தில் தீர்த்தத் திருவிழா இடம்பெறும்.[8] கொடியேற்றத்துடன் தொடங்கும் இப்பெருந் திருவிழா 25 ஆம் நாளில் தீர்த்தத் திருவிழாவுடன் நிறைவடையும். ஒவ்வொரு நாளிலும் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளிகளை வீதியுலாவாக எடுத்து வருவர். சில முக்கிய திருவிழாக்களினதும் அவை கொண்டாடப்படும் நாட்களினதும் விபரங்களைக் கீழே காண்க.

முதல் நாள் – கொடியேற்றத் திருவிழா
12ம் நாள் – மஞ்சத் திருவிழா
16ம் நாள் – மாம்பழத் திருவிழா
22ம் நாள் – கைலாசவாகனத் திருவிழா
23ம் நாள் – வேட்டைத் திருவிழா / சப்பறத் திருவிழா
24ம் நாள் – தேர்த் திருவிழா
25ம் நாள் – தீர்த்தத் திருவிழா

இது தவிரக் கந்தசஷ்டிக் காலத்தில் ஆறு நாட்களும் திருவிழாக்கள் இடம்பெறுகின்றன. இந் நாட்களில் புராண படனம் இடம்பெறும். கந்தபுராணத்தின் சூரபன்மன் வதைப் படலத்தை ஒருவர் வாசிக்க இன்னொருவர் அதற்கு பொருள் சொல்லிவருவார். இறுதி நாளில், முருகன் சூரனுடன் போர்புரிந்து அவனைக் கொல்லும் கதை நிகழ்த்திக் காட்டப்படும். இது சூரன்போர்த் திருவிழா எனப்படும்.

நூல்கள்
இணுவில் முருகன் மீது பலர் நூல்களை இயற்றியுள்ளனர். இவர்களுள் இணுவிலைச் சேர்ந்தவர்களும் அயலூரவரும் அடங்குவர். இவற்றுட் சில பதிப்பித்து வெளியிடப்பட்டுள்ளன. இவ்வாறான நூல்களுட் சில:

இணுவைப் பதிகம் – வறுத்தலைவிழான் மயில்வாகனப் புலவர்
இணுவை முருகன் பக்திரசக் கீர்த்தனை – கணபதிதாசன்
இணுவை அந்தாதி – சிற்றம்பலம்
இணுவையந்தாதி – வித்துவான் இ. திருநாவுக்கரசு.
இணுவை முருகன் பிளைத்தமிழ் – பஞ்சாட்சரம், ச. வே.
ஊஞ்சல் – இணுவில் சின்னத்தம்பிப் புலவர்
நொச்சியம்பதி முருகன் தோத்திரம் – க. வடிவேற் சுவாமிகள்
கல்யாணவேலர் திருவூஞ்சல் – அ. க. வைத்திலிங்கம்பிள்ளை.

Source : விக்கிப்பீடியாவில் இருந்து

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்