வயாவிளான்-பலாலி தெற்கு மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி விரைவில் அமைதிப் பேரணி!

வயாவிளான்-பலாலி தெற்கு பிரதேச மக்களின் மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி வயாவிளான் இராணுவ குடியிருப்பு நுழைவாயில் முன் மக்கள் போராட்டம் நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வயாவிளான் சமூகநல அமைப்பின் ஏற்பாட்டில் வயாவிளான் மற்றும் பலாலி தெற்கு மக்களின் மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி எதிர்வரும் 5.11.2017 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு விழிப்புணர்வு அமைதிப் பேரணி ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

எம்மக்கள் அனுபவிக்கும் துன்பங்கள், துயரங்களை வெளிக்கொணர, எமது மண் எமக்கானது என்ற ஒற்றைக் கோரிக்கையை முன்வைத்து மக்களை ஒருங்கிணைத்து குறித்த போராட்டம் நடாத்தப்படுகின்றது.

வயாவிளான் கிராம முன்னேற்றச் சங்க முன்றலில் இருந்து ஆரம்பிக்கும் அமைதிப் பேரணி வயாவிளான் இராணுவ குடியிருப்பு நுழைவாயிலை சென்றடையும்.

அங்கு வைத்து யாழ்.கட்டளைத் தளபதிக்கான மகஜர் கையளிக்கப்படும்.அந்த வகையில் இந்த பேரணிதொடர்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டடுள்ள தாவது

வலி-வடக்கு உயர் பாதுகாப்பு வலையத்தின் பிரதான நுழைவாயில் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

அத்துடன் பலாலி இராணுவ முகாம் மற்றும் பலாலி விமான நிலையம் என்பவற்றின் நுழைவாயிலும் இதுவென்பதுடன், வயாவிளான் கிராமத்தின் நுழைவாயிலும் இதுவேயாகும்.

இதனாலேயே இந்த நுழைவாயில் பிரதானமாக நோக்கப்படுகிறது.

ஜனாதிபதிக்கு முகவரியிடப்பட்ட கடிதத்தின் பிரதியே யாழ்.கட்டளைத் தளபதிக்கு இங்கு கையளிக்கப்படுவதுடன், பிரதமர், மீள்குடியேற்ற அமைச்சர், அரச அதிபர் மற்றும் வலி.வடக்கு பிரதேச செயலாளர் ஆகியோருக்கும் இதன் பிரதிகள் நேரில் கையளிக்கப்படவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

எமது நிலத்தை மீட்டெடுக்கும் முகமாக அரசுக்கும் படைத்தரப்பினருக்கும், மக்கள் பிரதிநிதிகளுக்கும் அழுத்தம் கொடுக்கும் முகமாக தொடர் போராட்டங்களை பல்வேறு வடிவங்களில் முன்னெடுப்பதென்று செயற்குழுவில் இறுதி முடிவெடுக்கப்பட்டது.

மக்களின் அன்றாட வாழ்வாதாரமாக உள்ள விவசாய நிலங்கள் படைத்தரப்பினால் வர்த்தக ரீதில் பயன்படுத்தப்பட்டு வருவதுடன் மேலதிக தரிசு நிலங்களும் விவசாய நிலங்களாக மாற்றி பயனடைந்து வருகின்றனர்.

மக்களின் வீடுகளில் படைத்தரப்பினரின் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர்.

தொன்றுதொட்டு வாழ்ந்து வந்த இடங்களை படைத்தரப்பு கையகப்படுத்தி வைத்திருப்பதானது எமது வாழ்விடங்களை
சிதைப்பதற்கான, வரலாறுகள் அழிப்பதற்கான, மக்களின் சுதந்திரத்தை முடக்குவதற்கான ஒரு செயற்பாடாகவே பார்க்கவேண்டியுள்ளது.

மூதாதையர் விட்டுச்சென்ற பணிகளையும் வழித்தடங்களையும் எதிர்கால சந்ததியினருக்கு எம்மால் எடுத்துச்செல்ல முடியாதுள்ளது.

இடப்பெயர்வினால் உண்டான மக்கள் அனுபவித்த அவலமும் வேதனையும் இந்த மீள்குடியேற்ற காலதாமதத்தால் மேலும் அதிகமாகியுள்ளது.

ஒருவருட காலமாக தொடர் பேச்சுவார்த்தை, மனு கைளிப்பு என பல நடவடிக்கையை படைத்தரப்பு மட்டத்திலும், அரச மட்டத்திலும் மற்றும் மக்கள் பிரதிநிதிகளிடமும் நேரில் முன்வைக்கப்பட்ட போதும் அதற்கான தீர்வையோ அல்லது அறிகுறிகளையோ அவர்கள் முன்வைக்கவில்லை.

ஆகவே நியாயமான எமது கோரிக்கைகளில் அவதானம் செலுத்துவதற்கு அழுத்தம் கொடுக்கும் நோக்கிலேயே குறித்த விழப்புணர்வு பேரணி ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது.

எனவே மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து உரிய தீர்வு சம்பந்தப்பட்ட தரப்பினரால் முன்வைக்கப்படவேண்டும். தவறும் பட்சத்தில் தொடர் பேராட்டங்களை பல்வேறு வடிவங்களில் நடாத்துவதில் கவனம் செலுத்தப்படும்.

எமது கோரிக்கைக்கு வலுச்சேர்க்கும் முகமாக வயாவிளான் மற்றும் பலாலி தெற்கு மக்களுடன் சிவில் அமைப்புக்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள், பொதுமக்கள் என அனைவரையும் கலந்துகொண்டு கிராமத்தின் மீள்குடியேற்றத்தை வலியுறுத்துமாறு அன்புடன் அழைக்கிறோம் என அவர்களது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்