கண்டி தமிழ் இளைஞனின் செயலினால் நெகிழ்சியடைந்த சிங்கள வர்த்தகர்!

கண்டியில் இளைஞரொருவர் தான் கண்டெடுத்த பணப்பையை பெலிஸார் மூலம் உரிமையாளரிடம் ஒப்படைத்துள்ளார்.

முச்சக்கரவண்டி சாரதியான விஸ்வநாதன் பஞ்சசீலன் எனும் 31 வயது தமிழ் இளைஞரே அண்மையில் இவ்வாறு செய்துள்ளதுடன், இதனால் அவர் அப்பகுதி மக்களின் பாராட்டைப் பெற்றுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது;

குறித்த இளைஞர் ஸ்ரீ விக்கிரம ராஜசிங்க மாவத்தை வீதியில் பையொன்று கீழே கிடப்பதை அவதானித்துள்ளார். அந்த பணப்பையை எடுத்து அவர் பார்த்த போது அதில் நான்கு இலட்சத்து 11 ஆயிரம் ரூபா பணம் இருந்துள்ளது.இதனையடுத்து அவர் பணப்பையுடன் கண்டி பொலிஸ் தலைமையகத்திற்குச் சென்று சம்பவம் தொடர்பில் கூறி பணப்பையை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்.

இந்த நிலையில் பணப்பையில் இருந்த அடையாள அட்டையின் உதவியுடன் பொலிஸார் மேற்கொண்ட முயற்சியின் பலனாக காலி, ஹினிதும பிரதேசத்தை சேர்ந்த பிரபல வர்த்தகரே பணத்தின் உரிமையாளர் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

தமது பிறந்த தினத்தை முன்னிட்டு வழிபாடு மேற்கொள்வதற்காக தலதா மாளிகைக்கு வந்திருந்த குறித்த வர்த்தகர் தனது பணப்பையை தொலைத்துள்ளார்.தான் சென்ற இடமெல்லாம் தொலைத்த பணப்பையை தேடிய வர்த்தகர் எங்கும் பணப்பை காணப்படாத நிலையில் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றுள்ளார்.

இந்த சந்தர்ப்பத்தில் பொலிஸார் வரத்தகரை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து பணப்பையை கண்டெடுத்த இளைஞரை வரவழைத்து அவர் மூலம் பணத்தை ஒப்படைத்துள்ளனர்.

தனது பணப்பை மீண்டும் கிடைத்த நிலையில் மகிழ்ச்சியின் உச்சத்தில் அந்த இளைஞருக்கு வர்த்தகர் ஒரு இலட்சம் ரூபா பணத்தை வழங்கியுள்ள போதிலும் இளைஞர் பணத்தை வாங்க மறுத்துள்ளார்.

இந்த சம்பவத்தால் அந்த இளைஞர் அனைவரினதும் பாராட்டினைப் பெற்றுள்ளதுடன், அப்பகுதியில் மிகவும் பிரபல்யம் அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்