தனியார் பாதுகாப்பு சேவை நிறுத்தப்பட்டதால் உடைமைகளுக்கு பாதுகாப்பில்லை – கல்விச் சமூகம் அச்சம்

வடக்கு மாகாண கல்வி அமைச்சிற் குட்பட்ட 102, பாடசாலைகளிற்கு வழங்கி வந்த தனியார் பாதுகாப்பு சேவை கல்வி அமைச்சின் அறிவித்தலுக்கு அமைவாக அந்த பாதுகாப்பு சேவை முற்றாக விலக்கப் பட்டுள்ளமையால் பாடசாலைகளில் உள்ள பல கோடி ரூபா பெறுமதியான சொத்துக்களுக்கும், பாடசாலை மாணவர்களின் உடமைகளுக்கும் அபய நிலை தோன்றியுள்ளதாக பாதிக்கப்பட்டுள்ள பாடசாலைகளின் கல்விச் சமூகம் சுட்டிக் காட்டுகின்றது.

இது தொடர்பில் மேலும் தெரிய வருவது,

வடக்கு மாகாண கல்வி அமைச்சின் கீழ் உள்ள 12 கல்வி வலயங்களின் கீழ் உள்ள பாடசாலைகளில் அரசாங்கத்தினால் காவலாளிகள் நியமிக்கப்பட்டாத 102, பாடசாலைகளுக்கும் மற்றும் கல்வி அலுவலகங்களுக்கும் வடக்கு மாகாண சபையின் கல்விக்கான நிதி ஒதுக்கீட்டின் மூலம் பணம் ஒதுக்கீடு செய்யப்பட்டு கேள்வி கோரல்கள் மூலமாக ஒப்பந்த அடிப்படையில் தனியார் பாதுகாப்பு நிறுவனம் மூலம் பாதுகாப்பு சேவையினை வழங்கி வந்தனர்.

இன் நிலையில்,
கடந்த 01, ஆம் திகதி வியாழக்கிழமை தொடக்கம் தனியார் பாதுகாப்பு நிறுவனத்தினால் பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு சேவையை நிதி ஒதுக்கீடு பற்றாக்குறை காரணமாக நிறுத்துமாறு வடக்கு மாகாண கல்வி அமைச்சினால் அந்த நிறுவனத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து,
எதுவிதமான தகவல்களையும் பாடசாலை நிர்வாகங்களுக்கு வடக்கு மாகாண கல்வி அமைச்சினாலும் மற்றும் பாதுகாப்பு சேவையை வழங்கி வந்த தனியார் நிறுவனத்திலும் வழங்கப்பட்டாத நிலையில் முற்று முழுதாக விலக்கிக் கொள்ளப் பட்டுள்ளது.

இனால் அரச காவலாளிகள் சேவை இல்லாத இப் பாடசாலைகளின் பாதுகாப்பு கேள்விக் குள்ளாக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால்
பாடசாலை அதிபர்களே பாடசாலை சொத்துக்களுக்கும், உடமைகளுக்கும் பொறுப்பானவர் என்பதற்கமைவாக அதிபர்கள் சிலர், இரவு நேரங்களில் பாடசாலைகளில் தங்கி காவல் கடமைகளில் ஈடுபட்டு வருவதுடன், சில பாடசாலை அதிபர்கள்
தங்களின் சொந்தப் பணத்தினையும் மற்றும் பொது நிதியுதவியுடனும் தற்காலிகமாக ஏற்பாடுகளைச் செய்து காவலாளிகளை நியமித்துள்ளதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.

எனவே,
இதனை வடக்கு மாகாண சபை கவனத்தில் எடுத்து அரச சேவைகளுக்கு ஒப்பந்தங்களை விட, இளைஞர்களை உள்வாங்கி இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும் இதனால் வடபகுதியில் வேலையற்றோர் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைப்பதுடன் இளைஞர்கள் வழிதவறிச் சென்று சமூகத்திற்கு தீங்கு விளைவிக்கும் செயற்பாடுகள் கட்டுப்படுத்தப்படும்
என வேண்டுகோள் விடுக்கின்றனர்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்