இறுதி நொடி வரை பரபரப்பான இரண்டாவது ஒரு நாள் போட்டி.. த்ரில் வெற்றி பெற்ற மேற்கிந்தியத் தீவுகள்..!!

அயர்லாந்து அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், மேற்கிந்திய தீவுகள் அணி 1 விக்கெட்டினால் திரில் வெற்றிபெற்றுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் மேற்கிந்திய தீவுகள் அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.பார்படோஸ் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அயர்லாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 237 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.இதில், அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக, போல் ஸ்டெயர்லிங் 63 ஓட்டங்களையும், சிமி சிங் 34 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சில், அல்சார்ரி ஜோசப் 4 விக்கெட்டுகளையும், செல்டோன் கொட்ரெல் 3 விக்கெட்டுகளையும், கெரி பியர் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.இதனைத் தொடர்ந்து 234 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி, 49.5 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால் மேற்கிந்திய தீவுகள் அணி 1 விக்கெட்டினால் திரில் வெற்றியை பதிவு செய்தது.

இதன்போது, மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக, நிக்கோலஸ் பூரான் 52 ஓட்டங்களையும், ஹெய்டன் வோல்ஷ் ஆட்டமிழக்காது 46 ஓட்டங்களையும், கிரன் பொலார்ட் 40 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.அயர்லாந்து அணியின் பந்துவீச்சில், சிமி சிங் 3 விக்கெட்டுகளையும், என்டி மெக்பிரைன் மற்றும் பெரி மெக்கார்தி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், போய்ட் ரென்கின் மற்றும் மார்க் அடாயர் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.இப்போட்டியின் ஆட்டநாயகனாக, மேற்கிந்திய தீவுகள் அணி சார்பில் 4 விக்கெட்டுகளை சாய்த்த அல்சார்ரி ஜோசப் தெரிவு செய்யப்பட்டார்.

மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின், மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டி நாளை மறுதினம் கிரெனடா மைதானத்தில் நடைபெறவுள்ளது.மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடரில் விளையாடுவதற்காக மேற்கிந்திய தீவுகள் சென்றுள்ள அயர்லாந்து அணி, அடுத்ததாக ரி-20 தொடரில் விளையாடுகின்றது.இந்த ரி-20 தொடரின் முதல் போட்டி, எதிர்வரும் 15ஆம் திகதி கிரெனடா மைதானத்தில் நடைபெறவுள்ளது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்