சபரிமலை ஐயப்பன் – அறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்

கார்த்திகை மாதம், பக்தி மணக்கும் மாதமாகவே மலர்ந்துள்ளது. பார்க்கும் திசையெல்லாம் கறுப்பு, காவி, நீல நிற வேட்டிகளில் கழுத்தில் மாலை அணிந்து நெற்றி நிறைய சந்தனம், விபூதி, குங்குமம் என நமது பார்வையையும் , மனதையும் பக்தியால் நிரப்புகின்றனர் ஐயப்ப சாமிமார்கள். இப்படி எல்லாரையும் தன் வசம் கட்டிப்போட்டிருக்கும் சரண கோஷ பிரியன் அய்யன் ஐயப்பன் பற்றி அறிந்து கொள்ள வேண்டிய பல தகவல்கள் இந்த பதிவில் தொகுக்கப்பட்டுள்ளது.சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் கறுப்பு நிற ஆடை அணிவதற்கும், ருத்ராட்சம் மற்றும் துளசி மாலையிட்டுக் கொள்வதற்கும் காரண காரியங்கள் உண்டு. பொதுவாக கறுப்பு ஆடை அணிந்து ஐயப்ப மந்திரங்களை உச்சரித்தால் பலாப்பலன்கள் அதிகம்.

மனிதனுள் தேவ, அசுர குணங்கள் இரண்டும் கலந்துள்ளன. எதிர்மறையான சிந்தனைகள் மாறி மனசாந்தியும், சமாதானமும் கிடைக்க இறைவனிடம் நம்மை சரணாகதியாக்கி வழிபடுவது நலம் தரும். அப்படி வழிபடும்போது கறுப்பு ஆடை அணிவதும், ருத்ராட்ச மாலை அணிவதும் ஜெபத்தின் சக்தியை அதிகரிக்க செய்யும்.சபரிமலை அடைந்து 18 படிகளின் மீதேறி நின்றவுடன் நம் கண்ணில்படும் வேதவாக்கியம் ‘தத்வமசி’. ‘நீயே அது’ என்பதே இதன் பொருள். மூலவராகக் காட்சிதரும் அய்யன் ஐயப்பனும், விரதம் இருந்து சபரிமலை செல்லும் பக்தனும் ஒன்றே என்பதை மீண்டும் மீண்டும் அழுத்தமாக சொல்லவே இந்த வாக்கியம் பதினெட்டு படிகள் கடந்தவுடனே பார்வையில் படும்படி பதிக்கப்பட்டுள்ளது.

மலையாள தேசமான கேரளாவில் கோயில்கள் வழிபடும் முறைகளில் சாஸ்திர சம்பிரதாயங்கள் முறையாக கடைபிடிக்கப்படும். இதன்படி கோயில்களில் பிரகாரத்தை பக்தர்கள் சுற்றி வருவதில் கணக்குகள் உள்ளது. விநாயகர் கோயிலை ஒரு முறையும், சூரியனை இரண்டு முறையும், சிவாலயத்தில் மூன்று முறையும், விஷ்ணு கோயிலில் நான்கு முறையும், முருகனை ஐந்து முறையும், பகவதி அம்மன் கோயிலில் ஐந்து முறையும் வலம் வரவேண்டும். ஐயப்பன் மற்றும் சாஸ்தா கோயில்களில் நான்கு முறை வலம் வர வேண்டும் என்பது சாஸ்திரம்.

லட்சக்கணக்கான பக்தர் கூட்டம் குவியும் சபரிமலையில் அதுவும் ஐயப்ப சீசனில் இது சாத்தியமில்லை என்றாலும் மாதபூஜைக்கு சபரிமலை மற்று சாஸ்தா கோயில்களுக்கு செல்லும் போது இந்த சாஸ்திரத்தை கடைபிடிப்பது பெரும் பலன்களை தரும்.ஐயப்பன் – என்று அய்யன் மணிகண்டனுக்கு பெயர் வந்தது எப்படி?
அய்யன் ஐயப்பனின் வளர்ப்புத் தந்தையாகும் பாக்கியம் பெற்றவர் பந்தள மகாராஜா ராஜசேகரன். தனக்கு கிடைத்தது தெய்வக்குழந்தை என்பதை அறியாமல் இருந்த நிலையில், அவதாரத்தின் நோக்கம் வெளியாகி ஐயப்பனை பிரியும் காலமும் வந்தது. கழுத்தில் மணி இருந்த காரணத்தினால் மணிகண்டன் என்ற பெயர் பெற்ற அய்யன்.

தனது வளர்ப்பு தந்தை பந்தள மகாராஜா ராஜசேகரனிடம், இனி நான் காட்டுக்குள் குடியிருக்க போகிறேன். என்னைக் காணவேண்டுமானால், மலைகளைக் கடந்து வரவேண்டும். அது சாதாரண மலையல்ல. ஏற்ற இறக்கமும், கல்லும் முள்ளும் கொண்டது என்றார். அதை கேட்ட பந்தள மகாராஜா ராஜசேகரன், அய்யனே, உன்னை காண நான் எப்படி வருவேன் என கேட்டார். அதற்கு மணிகண்டன், நீங்கள் என்னை பார்க்க வரும்போது ஒரு கருடன் உங்களுக்கு வழிகாட்டுவான். அந்த வழிகாட்டுதலின்படி நீங்கள் எனது இடத்திற்கு வந்துவிடலாம் என பதில் கொடுத்தார்.சபரிமலைக்கு அய்யன் மணிகண்டனை தரிசிக்க பந்தள மகாராஜா ராஜசேகரன் செல்லும்போது, மலையின் ஏற்ற இறக்கங்களில் ஏற முடியாமல் ஆங்காங்கே தவித்து போவார். பயன களைப்பில், அவர், அய்யோ அப்பா என சொன்னதே திரிந்து ஐயப்பன் என்ற செய்தியும் தகவலும் காலம் காலமாக சொல்லப்படுகிறது. ஆனால், ஐயன் என்றால் தலைவன் என்றொரு பொருள். அந்த ஐயனுடன் அப்பனையும் சேர்க்கும் போது, அந்த ஐயனே நமது தந்தை அதாவது ஐயப்பன் என்றானது.இன்றைக்கும் மகரஜோதியின் போது அய்யன் ஐயப்பனுக்கு பந்தளம் அரண்மனையிலிருந்து நகைகளை எடுத்துச் செல்லும்போது, நகைப்பெட்டிகளுக்கு பாதுகாப்பாக ஒரு கருடன் வருவது கண்கொள்ளாக் காட்சியாகும்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்