13 ஆவது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்ளவுள்ள இலங்கை தடகள அணியின் தலைவியும் 800 மீற்றர் ஓட்டப் போட்டியின் தேசிய சம்பியனுமாகிய நிமாலி லியனாராச்சி விபத்தொன்றில் சிக்கி காயமடைந்துள்ளார்.இவரது காயம் காரணமாக பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.நிமாலி லியானாராச்சி தனது மோட்டார் சைக்கிளில் காலையில் பயிற்சிக்காக பயணித்துக் கொண்டிருந்தபோதே விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது.இதனையடுத்து, உடனடியாக தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், அவரது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
நிமாலி லியனாராச்சி நடைபெறவுள்ள 13ஆவது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் தடகள குழாத்துக்குத் தலைமை தாங்குகின்றமை விசேட அம்சமாகும்.அத்தோடு குறித்த போட்டித் தொடரில் 800 மீ., 1500 மீ, மற்றும் 400 மீ. அஞ்சலோட்டப் போட்டிகளிலும் நிமாலி கலந்துகொள்விருந்தார்.அதேவேளை கடந்த முறை நடைபெற்ற 12ஆவது தெற்காசிய விளையாட்டு விழாவில் நிமாலி தங்கப் பதக்கம் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.13ஆவது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் டிசம்பர் மாதம் முதலாம் திகதி முதல் 10ஆம் திகதி வரை நேபாளத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.