குழந்தைகளை தொலைக்காட்சி பார்த்துக் கொண்டே உணவு உட்கொள்ள அனுமதிக்கும் பெற்றோரா நீங்கள்… ? அப்படியானால் இது உங்களுக்குத் தான்..!!

இளம் வயதில் ஆரோக்கியமாக இருக்க வேண்டிய சிறுவர், சிறுமிகள் உடல் பருமன் ஏற்பட்டு அவதிப் படுவதைத் தவிர்க்க பெற்றோரும், பள்ளிகளும் உரிய நடவடிக்கைகள் எடுத்து, குழந்தைகளின் அல்லது மாணவர்களின் உணவுப் பழக்க முறைகளில் மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும்.உடல் பருமனாக இருக்கும் குழந்தைகளுக்கு உயர் ரத்த அழுத்தம் அதிகரித்தல், நீரிழிவு நோய் போன்ற நோய்கள் வர வாய்ப்புகள் அதிகம். பொதுவாக 50 முதல் 80 சதவீத உடல் பருமனான குழந்தைகள் தங்களின் வாலிப வயதிலும் உடல் பருமனாகவே இருக்க வாய்ப்புள்ளது.உடல் பருமன் ஏற்படக் காரணம் என்ன?

அதிக அளவு கொழுப்புச் சத்து நிறைந்த உணவுப் பொருட்களை உண்பது மற்றும் துரித உணவுகளைச் சாப்பிடுவதால் குழந்தைகளுக்கு உடல் பருமன் ஏற்பட வாய்ப்புள்ளது. இப்போதுள்ள குழந்தைகள் துரித உணவு மேல் மிகவும் பிரியமாக இருக்கிறார்கள். மேலும் துரித உணவு சுலபமாகக் கிடைப்பதாலும் விலை குறைவாகவும், மலிவாகவும், ருசியாகவும் உள்ளதாலும் குழந்தைகள் அவற்றை விரும்பிச் சாப்பிடுகின்றனர்.

அதிக அளவில் புழக்கத்தில் இருக்கும் துரித உணவுகள்..

ஃப்ரைடு ரைஸ், பாஸ்தா, பப்ஸ், கேக், ஐஸ்க்ரீம், குளிர்பானங்கள், சமோசா, உருளைக்கிழங்கு சிப்ஸ், சொக்லேட், பர்கர், பீட்ஸா போன்றவை குழந்தைகள் விரும்பிச் சாப்பிடும் துரித உணவுகளாக இருந்து வருகின்றன.அதே நேரத்தில் இந்த வகை உணவுகள் உடல் பருமனுக்கு வித்திடுகிறது. இந்த வகை துரித உணவுகளில் ‘ட்ரான்ஸ்’ எனப்படும் கொழுப்பு நிறைந்த எண்ணெய் உபயோகிக்கப்படுகிறது.

உணவின் அளவு தெரியாமல் தொலைக்காட்சிப் பெட்டியின் முன்பு அமர்ந்து குழந்தைகள் உணவு சாப்பிடுவதால், எவ்வளவு சாப்பிடுகிறோம் என்ற அளவுகோல் இல்லாமல் சாப்பிடுவதும் ஒரு பிரச்னை தான். குழந்தைகள் ‘டியூஷன்’ வகுப்புகளுக்குச் சென்று ஒரே இடத்தில் மணிக்கணக்காக அமர்ந்து கொண்டிருப்பதும் உடல் பருமன் ஏற்படுதவற்கு முக்கியக் காரணம் தான்.பெரும்பாலான பள்ளிக் குழந்தைகளுக்கு விளையாடுவதற்கு நேரம் இருப்பதில்லை. பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்ததும், விளையாடச் செல்லாமல் நேராக டியூஷன் சென்று ஒரே இடத்தில் அமர்ந்திருப்பார்கள். இதனால் உடல் எடை துரிதமாகக் கூடிக் கொண்டே செல்கிறது.

இதைத் தவிர்க்க வேண்டுமெனில் உலக சுகாதார நிறுவனத்தின் பரிந்துரையின்படி (WHO) ஒவ்வொரு குழந்தையும் தினமும் குறைந்த பட்சம் ஒன்றரை மணி நேரம் உடற்பயிற்சி செய்யவோ அல்லது ஏதேனும் விளையாட்டுகளில் ஈடுபடவோ வேண்டும். சைக்கிள் ஓட்டுவது, பள்ளிக்கூடங்களில் நண்பர்களுடன் விளையாடுவது போன்றவை சிறந்த உடற்பயிற்சிகளாகும்.ஒரே இடத்தில் 2 மணி நேரம் அமர்ந்து தொலைக்காட்சி பார்ப்பதையும், தொலைபேசியில் பேசிக் கொண்டிருப்பதையும், கணினியில் விளையாடுவதையும் குழந்தைகள் தவிர்ப்பது நல்லது. அதுமட்டுமல்ல தொலைக்காட்சி பார்த்துக் கொண்டு குழந்தைகள் சாப்பிட பெற்றோர் அனுமதிக்கக் கூடாது. உணவு வேளைக்கு முன்பு தின்பண்டங்களை கொடுக்கக் கூடாது. குடும்பத்துடன் உணவு உண்ணப் பழக்க வேண்டும். காலைச் சிற்றுண்டியை எக்காரணம் கொண்டும் குழந்தைகள் தவிர்த்து விடாமல் பெற்றோர் கவனிக்க வேண்டும்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்