விவசாயத் துறையையும் பெருந்தோட்டத்துறையையும் அபிவிருத்தி செய்ய கோத்தபாய வழங்கிய வாக்குறுதி..!!

நாட்டில் விவசாயத் தொழிலையும் பெருந்தோட்டங்களையும் அபிவிருத்தி செய்யவுள்ளதாகவும் வெளிநாடுகளில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களை கட்டுப்படுத்தி உள்ளுரில் உற்பத்தியை அதிகரிக்கவுள்ளதாகவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.அத்துடன் ‘சிலோன் டீ’ தரம் குறைவாக காணப்படுவதாக கூறி வெளிநாடுகளில் தகுந்த விலை கிடைக்கவில்லை எனவும் அதன் தரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.நுவரெலியாவில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதன்போது அவர் உரையாற்றுகையில் ‘இன்று இலங்கையில் தயாரிக்கப்படும் ‘சிலோன் ரீ’ தரம் குறைவாக காணப்படுவதாக கூறி வெளிநாடுகளில் தகுந்த விலை கிடைக்கவில்லை.நான் ஆட்சிக்கு வந்தவுடன் தேயிலையின் தரத்தை உயர்த்தி ‘சிலோன் ரீ’ யின் தரத்தை அனைவருக்கும் அறியச் செய்து தகுந்த விலையை பெற்றுக்கொடுத்து தேயிலை தொழிலுக்கு முக்கியத்துவம் வழங்குவேன். அதேபோல விவசாய துறையையும் அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுப்பேன்.இந்த நாட்டில் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் சமுர்த்தி உதவியாளர்களுக்கு விஷேட வேலைத் திட்டத்தை அறிமுகம் செய்து அவர்களின் வாழ்வாதாரத்தையும் தரமுயர்த்த நடவடிக்கை எடுக்கவுள்ளேன்.இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தபின்னர், மக்களின் வாழ்வாதாரம் மிகவும் மோசமான நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளது. அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கும் நடவடிக்கை எடுப்பேன். விவசாயத்துறையை ஊக்குவிப்பதற்காக நல்ல விதைகளை பெற்றுக்கொடுக்கவும் இலவசமாக உரம் வகைகளை பெற்றுக்கொடுக்கவும் நடவடிக்கை எடுப்பேன்.

இந்த நாட்டில் உற்பத்தி செய்யப்படும் தேயிலை இறப்பர், தென்னை பயிர்ச்செய்கையை அபிவிருத்தி செய்வதோடு இத் தொழிலை மேற்கொள்ளும் தொழிலாளர்களுக்கும் தொழிலுக்கேற்ற ஊதியம் பெற்றுக்கொடுக்கவும் நடவடிக்கை எடுப்பேன்.நுவரெலியா மாவட்டத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணி உட்பட பல தொழிற்சங்கங்கள் எம்மோடு இணைந்து எனது வெற்றியை உறுதிசெய்துள்ளார்கள்.இந்த நாட்டில் ஒற்றையாட்சியின் கீழ் சாந்தி, சமாதானம், ஒற்றுமையுடன் வாழ்வதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை வெற்றி பெறச்செய்து என்னை ஜனாதிபதியாக்குவதற்கு அனைவரும் இன, மத பேதங்களை மறந்து எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தாமரை மொட்டுக்கு வாக்களிக்கும்படி கேட்டுக்கொள்கின்றேன்’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்