ஜனாதிபதித் தேர்தலில் சஜித்தை ஆதரித்து தமிழரசுக் கட்சியின் முதலாவது பிரச்சாரக் கூட்டம் இன்று வவுனியாவில்!!

சஜித் பிரேமதாசவை ஆதரித்து இலங்கை தமிழ் அரசுக்கட்சி நடத்தும் முதலாவது பிரச்சாரக் கூட்டம் இன்று (9) வவுனியாவில் நடைபெறவுள்ளது.ஜனாதிபதி வேட்பாளர்களுடன் பேச்சு நடத்தி, நிபந்தனைகளின் அடிப்படையில் அவர்களை ஆதரிக்க வேண்டுமென ஐந்து தமிழ் கட்சிகள் முடிவெடுத்த போதும், நிபந்தனைகளின்றி வழக்கம் போல ஐ.தே.கவை ஆதரித்து அறிக்கை விட்டது தமிழ் அரசு கட்சி. இதற்காக சில ‘அனுகூலங்களை’ கட்சி பெற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது.இந்த நிலையில், வவுனியாவில் சஜித் பிரேமதாசவை ஆதரித்து முதலாவது பிரச்சார கூட்டத்தை இலங்கை தமிழ் அரசுக்கட்சி நடத்துகின்றது.

சஜித்தை ஆதரிக்கும் பிரச்சாரக் கூட்டங்களை வேறு பெயர்களிலேயே தமிழ் அரசு கட்சி நடத்துகிறது. கடந்தமுறை நிபந்தனையின்றி ஆதரவளித்து, மைத்திரி, ரணிலுடன் மேடையேறி, கடந்த ஐந்து ஆண்டுகளில் எதுவும் நடக்காத நிலையில், மீண்டும் ஐ.தே.கவுடன் மேடையேறுவது மக்கள் மத்தியில் எதிர்ப்பை ஏற்படுத்தும் என்பதால், இம்முறை ஐ.தே.க மேடைகளில் தமிழ் அரசு கட்சி ஏறாது. அத்துடன், பிரச்சாரக் கூட்டங்கள் என அறிவித்து கூட்டங்களை நடத்தாமல் வேறு பெயர்களில் நடத்தவுள்ளனர்.

இதன்படி, இன்று வவுனியாவில் சமகால அரசியல் கலந்துரையாடல் என்ற பெயரில் கூட்டம் நடக்கிறது. நாளை யாழ்ப்பாணத்தில் மாமனிhது ரவிராஜ் நினைவு நிகழ்வு என்ற பெயரில் சஜித் பிரேமதாசவிற்கான பிரச்சாரக் கூட்டம் நடக்கிறது.இன்று வவுனியா கூட்டத்தில் இரா.சம்பந்தன் கலந்து கொள்வதென்று திட்டமிடப்பட்டுள்ளது. எனினும், வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்தால் தமிழ் அரசு கட்சியினர் அச்சமடைந்துள்ளதாக தெரிகிறது. இதனால் பொலிஸ் மற்றும் அதிரடிப்படையினரின் பாதுகாப்பு கோரப்பட்டுள்ளது. கூட்டம் நடைபெறும் இடத்தை காணாமல் ஆக்கப்பட்டவர்கள் நெருங்காமல் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்