ரி-20 உலகக் கோப்பை 2020: பங்குபற்றும் அணிகளின் இறுதிப் பட்டியலில் இடம்பிடித்த நாடுகள்..!!

அடுத்த வருடம் அவுஸ்திரேலியாவில் ஒக்டோபர் 18 முதல் நவம்பர் 15 வரை ரி20 உலகக் கோப்பை நடைபெறுகிறது. இந்தப் போட்டிக்கான தகுதிச்சுற்றில் விளையாடி ஆறு அணிகள் ரி20 உலகக் கோப்பைக்குத் தகுதி பெற்றுள்ளன. இதன்மூலம் ரி20 உலகக் கோப்பைப் போட்டியில் பங்கேற்கும் 16 அணிகளின் பட்டியல் இறுதி வடிவம் பெற்றுள்ளது.ரி20 உலகக் கோப்பையில் 16 அணிகள் பங்கேற்கின்றன. ரி20 தரவரிசையில் முதல் 10 இடங்களில் உள்ள அணிகள் நேரடியாகத் தகுதி பெற்றுவிட்ட நிலையில், மீதமுள்ள ஆறு இடங்களுக்கான தகுதிச்சுற்றுப் போட்டி டுபாய் மற்றும் அபுதாபியில் தற்போது நடைபெற்று வருகிறது.

தகுதிச்சுற்றுப் போட்டியில் 14 அணிகள் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டன. லீக் சுற்றுகளின் முடிவுகளில் இரு பிரிவுகளிலும் முதலிடம் வகிக்கும் அணிகள் ரி20 உலகக் கோப்பைக்குத் தகுதி பெறும். அதன் அடிப்படையில் குரூப் ஏ பிரிவில் பப்புவா நியூகினி அணி விளையாடிய 6 ஆட்டங்களில் 5ல் வென்று 10 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்தது. அதேபோல அயர்லாந்து அணி, குரூப் பி பிரிவில் 6 ஆட்டங்களில் 4ல் வென்று 8 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்தது. இதன் அடிப்படையில் பப்புவா நியூகினி, அயர்லாந்து ஆகிய இரு அணிகளும் ரி20 உலகக் கோப்பைக்குத் தகுதி பெற்றன.

இதன்பிறகு, நெதர்லாந்து, நமிபியா ஆகிய இரு அணிகளும் ரி20 உலகக் கோப்பைக்குத் தகுதி பெற்றன. பிளே ஓஃப் ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரக அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது நெதர்லாந்து. 2014, 2016 உலகக் கோப்பைப் போட்டிக்குத் தகுதி பெற்ற நெதர்லாந்து அணி, 3வது முறையாக ரி20 உலகக் கோப்பைக்குத் தகுதி பெற்றுள்ளது. மற்றொரு ஆட்டத்தில் ஓமன் அணியை 54 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது நமிபியா. இதன்மூலம் முதல்முறையாக ரி20 உலகக் கோப்பைப் போட்டிக்கு நமிபியா அணி தகுதி பெற்றுள்ளது. அந்த அணி இதற்கு முன்பு 2003ல் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பைப் போட்டிக்குத் தகுதி பெற்றது.

இதையடுத்து, கடைசி இரு இடங்களை நிர்ணயிக்கும் ஆட்டங்கள் நேற்று நடைபெற்றன. ஸ்கொட்லாந்து – ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஆட்டத்தில் 90 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஸ்கொட்லாந்து அணி, ரி20 உலகக் கோப்பைக்குத் தகுதி பெற்றது. அந்த அணி 4வது முறையாக ரி20 உலகக் கோப்பைப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது. இதன்பிறகு, ஹொங்கொங் – ஓமன் ஆகிய அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஆட்டத்தில் ஓமன் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வென்று, ரி20 உலகக் கோப்பைக்குத் தகுதி பெற்றது.

இதன்மூலம், அடுத்த வருடம் அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள ரி20 உலகக் கோப்பைப் போட்டியில் விளையாடும் அணிகளின் பட்டியல் இறுதி வடிவம் பெற்றுள்ளது. 16 அணிகளின் பட்டியல்:

1. பாகிஸ்தான்
2. இங்கிலாந்து
3. தென்னாபிரிக்கா
4. அவுஸ்திரேலியா
5. இந்தியா
6. நியூஸிலாந்து
7. இலங்கை
8. ஆப்கானிஸ்தான்
9. பங்களாதேஷ்
10. மேற்கிந்தியத் தீவுகள்
11. பப்புவா நியூகினி
12. அயர்லாந்து
13. நெதர்லாந்து
14. நமிபியா
15. ஸ்கொட்லாந்து
16. ஓமன்

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்