உலகக் கிண்ண தகுதிச் சுற்று பலம் வாய்ந்த துர்க்மெனிஸ்தானிடம் சொந்த மண்ணில் பரிதாபமாக தோற்றுப் போன இலங்கை..!!

கொழும்பு குதிரைப் பந்தயத் திடலில் மின்னொளியில் நேற்று இரவு நடைபெற்ற கத்தார் 2022 உலகக் கிண்ணம் மற்றும் 2023 ஆசிய கிண்ணம் ஆகியவற்றுக்கான ஆசிய வலய எச் குழுவுக்குரிய இரண்டாம் சுற்று தகுதிகாண் கால்பந்தாட்டப் போட்டியில் துர்க்மேனிஸ்தானிடம் 0 க்கு 2 என்ற கோல்கள் அடிப்படையில் இலங்கை தோல்வி அடைந்தது.இப் போட்டியில் முழுமையான ஆதிக்கம் செலுத்திய துர்க்மேனிஸ்தான் போட்டியின் இரண்டு பகுதிகளிலும் தலா ஒரு கோலைப் போட்டது.ஆரம்பம் முதல் கடைசிவரை தடுத்தாடும் உத்தியை இலங்கை அணி கையாண்ட போதிலும், தோல்வியைத் தவிர்க்க முடியாமல் போனது.

துர்க்மேனிஸ்தான் வீரர்களுடன் ஒப்பிடுகையில், அவர்களுக்கு ஈடுகொடுத்து விளையாடக்கூடிய உடற்தகுதி இலங்கை வீரர்களிடம் இருக்கவில்லை எனவும், போட்டியில் இலங்கை வீரர்கள் ஓரிருவரைத் தவிர வேறு எவரும் திறமையை வெளிப்படுத்தவில்லை எனவும், போட்டி முடிவில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது இலங்கை அணியின் தலைமைப் பயிற்றுநர் றூமி பக்கீர் அலி தெரிவித்தார்.பின்கள வீரர் சரித்த ரத்நாயக்க இழைத்த தவறுகளினாலேயே இரண்டு கோல்களும் போடப்பட்டதாக சுட்டிக்காட்டிய பக்கீர் அலி, அடுத்த வாரம் நடைபெறவுள்ள வட கொரியாவுக்கு எதிரான போட்டி இதனை விட சிரமமாக அமையும் என்றும் கூறினார்.மத்திய கள வீரர்களும் முறையாக பந்து பரிமாற்றங்களில் ஈடுபடவில்லை என்பதை ஒப்புக்கொண்ட பயிற்றுநர், இப் போட்டியில் விட்ட தவறுகள் குறித்து வீரர்களுடன் கலந்துரையாடி அடுத்த போட்டிக்கான தயார்படுத்தலில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவித்தார். ஜேர்மனியிலிருந்து இலங்கை வருகை தந்த சகோதரர்களான வசிம் ராஸிக், முஷாக்கிர் ஆகிய இருவர் குறித்து பயிற்றுநரிடம் கேட்டபோது, ‘‘இளையவரான முஷாக்கிரை 23 வயதுக்குட்பட்ட அணியில் இணைக்க எண்ணியுள்ளேன். முடியுமானால் உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றில் மூன்றாவது போட்டியில் இலங்கை அணியில் இணைப்பது குறித்து ஆலோசிப்போம்’’ என பதிலளித்தார்.முஷாக்கிர் ஜேர்மனியில் 17 வயதுக்குட்பட்ட தேசிய அணியில் இடம்பெற்றுள்ளதுடன் 19 வயதுக்குட்பட்ட ஜேர்மன் கால்பந்தாட்டத்தில் சம்பியனான பயென் மியனிச் அணியிலும் இடம்பெற்றவராவார். இது இவ்வாறிருக்க திங்களன்று நடைபெற்ற போட்டியில் ஆரம்பம் முதல் பந்தை தனது கட்டுப்பாட்டில் வைத்து ஆதிக்கம் செலுத்திய துர்க்மேனிஸ்தான் 8ஆவது நிமிடத்தில் அவசரமான த்ரோ ஒன்றை எடுத்து, ஒராஷெதொவ் வெய்ட் மூலம் அலாதியான கோல் ஒன்றைப் போட்டது.இலங்கை கோல்காப்பின் வலப்புறமாக பந்தை நகர்த்திச் சென்ற வைட், இலங்கை கோல் காப்பாளர் சுஜான் பெரேராவின் தலைக்கு மேலாக செல்லும் வகையில் பந்தை படுவேமாக உதைத்து கோல் போட்டு துர்க்மேனிஸ்தானை முன்னிலையில் இட்டார். போட்டியின் 19ஆவது நிமிடத்தில் இலங்கை அணித் தலைவர் கவிந்து இஷான் கோல் போடுவதற்கு எடுத்த முயற்சியை துர்க்மேனிஸ்தான் கோல்காப்பாளர் மெமட் க்ரெஸ்முஹமதோவ் இடதுகையால் வெளியில் தட்டிவிட்டார். தொடர்ந்து கிடைத்த இரண்டு அடுத்தடுத்த கோர்ணர் கிக்குகளை இலங்கை வீரர் எம்.என்.எம். பஸால் வீணாக்கினார்.தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திய துர்க்மேனிஸ்தானுக்கு 28ஆவது நிமிடத்தில் கிடைத்த வாய்ப்பை அமனோவ் அர்ஸ்லான் தவறவிட்டதுடன் 3 நிமிடங்கள் கழித்து ஒராஷெதொவ் வைட் உதைத்த பந்து கோல்காப்பின் மேல் பட்டு திசை திரும்பியது.இதனிடையே முரணாக விளையாடியதால் மத்தியஸ்தரின் மஞ்சள் அட்டைக்கு இலங்கையின் பின்கள வீரர் ஜூட் சுபன் இலக்கானார்.மறுபுறத்தில் இலங்கை அணி தடுத்தாடுவதிலேயே கவனம் செலுத்தியது. சில சந்தர்ப்பங்களில் இலங்கையின் பத்து வீரர்களும் தமது கோல் எல்லைக்குள் இருந்ததை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.இடைவேளையின் பின்னர் மீண்டும் ஆதிக்கம் செலுத்திய துர்க்மேனிஸ்தான் 53ஆவது நிமிடத்தில் அணித் தலைவர் அமானொவ் அர்ஸ்லானின் ப்றீ கிக் மூலம் மிகவும் அற்புதமான கோல் ஒன்றைப் போட்டது. சரித் ரத்நாயக்க முரணாக விளையாடியதால் மஞ்சள் அட்டைக்கு இலக்கானதுடன் துர்க்மேனிஸ்தானுக்கு 18 யார் கட்டத்துக்கு வலது மூலையில் ப்றீ கிக் வழங்கப்பட்டது. அமானொவ் தரையோடு உதைத்த பந்து ஷதடுப்புச் சுவரில்| இருந்த வீரர்களின் பாதங்களுக்கு கீழாக மின்னல் வேகத்தில் சென்று கோலினுள் புகுந்தது. (துர்க்மேனிஸ்தான் 2 க்கு 0).

இதனைத் தொடர்ந்து, இலங்கை அணியினர் தடுத்தாடும் உத்தியைக் கையாண்டதால் துர்க்மேனிஸ்தானுக்கு கோல் போடும் வாய்ப்புகள் கிடைப்பது சிரமமாக இருந்தது.போட்டியின் 82ஆவது நிமிடத்தில் அமானொவின் ப்றீ கிக்கின்போது பந்து இலங்கை கோல்காப்பாளரின் கைகளில் பட்டு முன்னோக்கி வந்தது. அப் பந்தை யஷியேவ் முராத் கோலினுள் செலுத்திய போதிலும் அவர் ஓவ்சைட் நிலையில் இருந்ததால் அந்த கோல் மத்தியஸ்தரினால் நிராகரிக்கப்பட்டது.இதே குழுவில் இடம்பெறும் வட கொரியாவை எதிர்வரும் 10ஆம் திகதி இதே மைதானத்தில் இலங்கை எதிர்த்தாடவுள்ளது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்